"மாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம். அப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது.ஆனால் இன்று அவற்றை உதாசீனம் செய்து கதைக்கின்ற போது இந்த நல்லாட்சியை கொண்டுவர ஒன்றிணைந்த சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஆதரவினை தேடவிருக்கின்றோம். அதிலே நாங்கள் வெற்றியும் காண்போம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகிறோம்"
இழந்த அந்த தலைவர் விட்டுச்சென்ற முதுசம் தான் இந்த இயக்கம். இந்த இயக்கமானது சாதாரணமான இயக்கமல்ல. இந்த இயக்கத்தின் வீரியமென்பது வெறும் பாடல்கள் தருகின்ற உட்சாகம் மாத்திரமல்ல.போராளிகள் இந்த இயக்கத்தை கருவறுக்க புறப்பட்ட யாராக இருந்தபோதிலும் அவர்களோடு போராடி இந்த இயக்கத்தை பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். இந்த இயக்கமானது வெறும் தனிமனிதனில் தங்கியுள்ள இயக்கமல்ல மாறாக போராளிகள் எனும் வலுவான பிணைப்பையும்,இணைப்பையும் கொண்ட மக்கள் இயக்கமாகும்.
அண்மையில் நாம் ஒரு உள்ளூராட்சி தேர்தலுக்கு முகம் கொடுத்தோம். அந்த தேர்தல் நமக்கு 189 உள்ளூராட்சி அங்கத்தவர்களை தந்துள்ளது. இந்த கட்சியின் வரலாற்றில் ஆக்கக்கூடுதலான உள்ளூராட்சி உறுப்பினர்களை நாம் பெற்றுக்கொண்ட தேர்தலாக இது மாறியிருக்கிறது. சில இடங்களில் எங்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டாலும் நாங்கள் எட்டு சபைகளில் ஆட்சி அமைத்திருக்கின்றோம். ஆனால் இந்த வீழ்ச்சிகளை நினைத்து சோர்ந்து போய்விடாமல் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றியமைக்கின்ற பக்குவத்தையும் மனோ தைரியத்தையும் மறைந்த தலைவர் எங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்.
இன்று போல எனக்கு ஞாபகம் இருக்கிறது முதலாவது மாகாண சபை தேர்தலில் மூன்று உறுப்பினர்களை பெற்றோம். அடுத்த மாகாண சபைத்தேர்தலில் நாங்கள் அவற்றை இழக்கின்ற நிலை வந்தபோது கட்சி தயங்கவில்லை. அவற்றை மீட்டுக்கொள்வதற்காக பெரிய போராட்டங்களை செய்தோம். இந்த போராட்டங்களின் மத்தியில் கண்டி மாவட்டம் இந்த கட்சியின் பூர்வீகத்துடன் கலந்த மாவட்டமாகும். கட்சியின் வளர்ச்சியில் ஒரே நாளில் 12 உயிர்களை பலி கொடுத்த மாவட்டம் இது. இந்தக்கட்சியின் தலைமையை பாராளுமன்றம் அனுப்புவதற்காக மடவளை,கம்பொல,தெல்தெனிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த உயிர்களை நாம் இழந்தோம்.இதில் மடவளை மண்ணை எனக்கு மறக்க முடியாது ஒரே தேர்தலில் ஒரே நேரத்தில் 10 உயிர்களை இந்த கட்சிக்காக அவர்கள் தியாகம் செய்துள்ளார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இம்முறை உள்ளூராட்சி சபைதொடர்பிலான அனுபவங்களை மாறி மாறி இங்குள்ள பலரும் பேசினார்கள்.தேர்தல் முடிந்த கையேடு நாங்கள் வெற்றிபெற்ற சபைகளில் ஆட்சிப்பொறுப்பை பெறுவதற்காக யாசகம் கேட்காத கட்சியே கிடையாது. அதேநேரம் தேசிய கட்சிகளின் தலைமகள் சொன்னாலும் அதற்க்கு தலைசாய்க்காத உள்ளூர் தலைவர்களை பரவலாக கண்டோம். ஆனாலும் அத்தனை துரோகத்தனங்களுக்கும் மத்தியில் எட்டு சபைகளின் ஆட்சியதிகாரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
சில இடங்களிலிலே இலகுவாக தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய ஆட்சியை சந்தர்ப்பவாத அரசியலினாலும், துரோகத்தனத்தினாலும் நாங்கள் இழந்தோம்.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது சகஜம் என்றகின்ற வகையில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி எங்களுக்கு சிலஇடங்களில் ஆட்சியமைக்க உதவியுள்ளது.அவ்வாறே அவர்களுக்கும் சில இடங்களில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.ஏனென்றால் இப்படியான அநியாயம் நடக்கின்றபோது, இவர்களின் சில்லறைத்தனமான நடத்தைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எங்களது போராளிகள் விரும்பினார்கள்.அதனை நாங்கள் நடத்தி காட்டினோம்.
மாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம். அப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது.ஆனால் இன்று அவற்றை உதாசீனம் செய்து கதைக்கின்ற போது இந்த நல்லாட்சியை கொண்டுவர ஒன்றிணைந்த சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஆதரவினை தேடவிருக்கின்றோம். அதிலே நாங்கள் வெற்றியும் காண்போம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகிறோம்.
ஏனென்றால் இந்த சமூகத்தின் எதிர்காலம்,இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்பனவற்றை கேள்விக்குறியாக்கு கின்ற விடயங்களில் ஒருநாளும் நாம் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய தயாரில்லை என்பதனை பலமான செய்தியாக நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். மாகாண சபைகள் தொடர்பில் பிரிக்கப்பட்டுள்ள தொகுதியானது முஸ்லிம்களையும்,மலையக தமிழர்களையும் பாதிக்கின்ற வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களினதும்,மலையக தமிழர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடையும் என்பதையும் மிகத்தெளிவாக நாங்கள் கூறியிருந்தும் இவற்றுக்கான தீர்க்கமான முடிவினை இந்த ஆட்சி எங்களுக்கு தர வேண்டும்.
சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் மற்றும் ஆன்மீகத்தலைமைகள் என பலதரப்பினராலும் மாகாண சபை தொடர்பிலான புதிய தேர்தல்முறையானது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை பரிசீலனை செய்யாமல் காலம் கடத்துகிறது இந்த அரசாங்கம். எங்களுக்கு அவர்சமாக தேர்தல் தேவை. இதுவரைக்கும் கலைக்கப்பட்டுள்ள பல மாகாணசபைகளின் கால எல்லையானது பல மாதங்களாக முடிவுற்ற நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் இன்னும் மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகின்றது. இந்த நிலையில் புதிய தேர்தல் முறையை பேசிப்பேசியே தேர்தலை பிற்போடுகின்ற வேலை செய்கிறார்கள். சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை சமூகத்தின் மீதான அடிமை சாசனம் எழுத முனையும் இந்த வேலையை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த பொது எதிர்கட்சியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச இருக்கின்றோம். அவர்களது ஆதரவினையும் பெற்று இந்த திட்டத்தினை தோல்வியடைய செய்யவிருக்கின்றோம்.எங்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது. எமது மக்களை பலிக்கடாவாக்கவும் முடியாது. எங்களது சமூகத்தின் உறுப்ப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்கவும் நாங்கள் தயாரில்லை. அத்தோடு காலத்தை வீணடித்து மாகாண சபைத்தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும் என்பதனை அழுத்தமாக சொல்லுகின்ற வகையில் எங்களது நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இருக்கும்.
எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவில் சபாநாயகர் கடந்த வாரம் என்னையும் நியமித்துள்ளார். இது ஒரு கண்துடைப்புக்காகவும்,என்னை சமாளிக்கவும் செய்யப்பட்டதாகும்.இதற்க்கு நான் தயாராக இல்லை உடனடியாக அதிலிருந்து இராஜனாமா செய்ய நான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். இது தொடர்பில் பிரதமரிடம் நான் தெளிவாக கூறியிருக்கிறேன். இந்தக்குழுவில் இருந்து கொண்டு ஏற்கனவே பிரிக்கப்பட்ட எல்லைகள் தொடர்பில் செய்வதற்கு ஒன்றுமில்லை.ஏழு உறுப்பினர்களை மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் பெற முடியும், தொகுதி பிரிப்பில் குளறுபடி, இலகுவாக ஒரு உறுப்பினரை பெறக்கூடியளவில் செறிவாக வாக்குகளை கொண்ட பிரதேசங்களில் ஒரு உறுப்பினரையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை, போதியளவு தொகுதிகளை உருவாக்க முடியாத சிக்கல்,இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாத நிலையில் இந்த மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாயின் சிதறிவாழுகின்ற முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பாரியளவில் தமது பிரதிநிதிகளை மாகாண சபையில் இழக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் தமிழ் தேசிய தலைமையிடத்தில் கேட்டிருக்கின்றோம்.சிறுபான்மை சமூகங்களின் பிரநிதித்துவத்தை குறைக்கின்ற இந்த தேர்தல் முறையினை அங்கீகரிக்க முடியாது என்பதனை வினயமாக கூறியுள்ளோம். இதற்காக அவர்களின் ஆதரவினை கோரியிருக்கின்றோம். அதற்கான சம்மதத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள். பழைய முறையிலேயே தேர்தல் நடாத்த வேண்டுமென்பதே அவர்களதும் வேண்டுகோளாக இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை வெளிப்படையாக சொல்லியிருந்தார்கள்.
உங்களுக்கிடையில் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன பறிபோய்க்கொண்டிருக்கின்ற நிலங்களை பாதுகாக்கவேண்டும். அதிலே எங்களுக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் களையப்பட வேண்டும். அரச திணைக்களங்கள் பலவற்றில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தமிழர்களை வைத்து தீர்க்கவிடாமல் செய்கின்ற நிலவரம் இருக்கின்றது. அவ்வாறே தமிழர்களின் பிரச்சனைகளை முஸ்லிம்களை காரணம் காட்டி தீர்க்காமல் காலம் கழிக்கின்ற நிலவரம்தான் இப்போது இருக்கின்றது. ஈற்றிலே குரங்கு அப்பம் பிரித்த கதையாக ஒரு தீர்வுமில்லாத சமூகமாக தமிழ் பேசுகின்ற இரண்டு சமூகங்களும் மாறிப்போய்விடுகின்றன. இவ்வாறான தலைமைகளிடமிருந்து நமக்கு நியாயம் கிடைக்குமா என்கின்ற சந்தேகமே இப்போது எழுகின்றது.
தமிழ் -முஸ்லிம் தலைமைகள் பறிபோகின்ற நமது பூர்வீக நிலங்கள் தொடர்பில் இணைந்து எதிர்க்க முன்வரவேண்டும்.பிராந்திய ரீதியான குறுகிய அரசியல் நோக்கத்தை தவிர்த்து செயற்படவேண்டும்.எமது சமூகங்களின் வாழ்வாதரப்பிரச்சினையை மிகவும் சாமர்த்தியமாக கையாளவேண்டும். எமது பிரச்சினைகள் பல இருக்கின்கின்றன. அவற்றை ஒரே நாளில் இந்த மேடையில் கூறிட முடியாது. நாம் இழந்த காணிகளை பெற்றுக்கொள்வது, அதனை சாமர்த்தியமாக எப்படி கையாள்வது என்பதனை யோசிக்கின்றோம்.
நாங்கள் கொண்டு வந்த அரசாங்கம் இப்போது இனவாத முலாம் பூசப்பட்டதாக செயற்படுகிறது. இப்போது வில்பத்து விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.அந்த விடயத்தில் கூட புவியியல் துறை நிபுணர் குழுவினை வைத்து மிகத்தெளிவான விளக்கங்களை நாம் வழங்கியுள்ளோம் ஆனால் இவற்றை வைத்துக்கொண்டு வெறுமனே அறிக்கைகள் விட்டுக்கொண்டு பிழைப்பு வாத அரசியல் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இந்த மக்கள் இயக்கம் ஒருபோதும் முயன்றதில்லை.சிலரின் அரசியலில் அறிக்கை விடுவதையே மாமூலாக கொண்டது.இந்த இயக்கம் அவ்வாறான இயக்கம் கிடையாது.வாழ்வாதாரம் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டை நாம் செய்யத்தயாரில்லை. நேர்மையாக,நீ தியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசியலுக்கப்பால் செய்ய வேண்டும்.
எமது அரசியல் பாதை வித்தியாசமானது. எமது சமூகத்தின் விமோசனத்திற்காக அது முன்னின்று பாடுபடும். ஆனால் இந்த கட்சியின் மூலம் முகவரி பெற்று இந்தக்கட்சியை அழிக்கத்துடிக்கின்ற,இந்த கட்சிக்கே குழிபறிக்கின்ற தங்களுடைய அகம்பாவமான ஆணவமான அநாகரிகமான அரசியலுடன் எம்மை அழிக்கத்துடிக்கின்ற போது அதனை நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் பயணம் செய்ய வேண்டும்.
தலைவர் சொன்னது போல நேராக இல்லாத ஒரு கோட்டை நீங்கள் கண்டால் நேரான கோட்டினை நீங்கள் வரையுங்கள் என்பதுபோல இந்த சமூகத்தை நேரான பாதையில் இட்டுச்செல்லவேண்டிய தார்மீக பொறுப்பினை சுமந்தவர்கள் நாங்கள் எனவே இந்த சமூகத்தை வெறும் கொடுப்பனவுகளிலே தங்கியிருக்கின்ற, பிழைப்புவாத அரசியலுக்கு சோரம் போகின்ற ஒரு சமூகமாக மாற்றமுடியாது.மாறாக இந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்குகின்ற விடயங்களிலேயே எங்களுடைய அவதானங்களை செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
அடுத்து வருகின்ற ஜனாதிபதி தேர்தலினை இலக்கு வைத்து ஒவ்வொருவரும் வியூகம் வகுத்துக்கொண்டிருக்கிறார்கள். 19வது திருத்தசட்டம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒருவர் இருமுறைக்கு மேலே ஜனாதிபதியாக வரமுடியாது என்று இருக்கின்ற போதும்
அதை பாவித்து புதிய அரசியல் கனவுகளை கண்டு கொண்டு இருக்கின்ற எந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான முடிவினை சரியான நேரத்தில் எடுக்கின்ற ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தலைமையும் ஜனாதிபதியாக முடியாது எனவே திட்டம் போடுபவர்கள் போடட்டும்,வியூகம் வகுப்பவர்கள் வகுக்கட்டும் ஆனால் எமது சமூத்தின் நலனில் அக்கறை செலுத்துகின்ற, நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தலைமைக்கு எமது ஆதரவினை வழங்குவது பற்றியே நாம் யோசிப்போம்.
மிகப்பக்குவமாக, மிகவும் தெளிவாக எமது சமூகத்தின் அபிலாசைகளை நியாமான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில்,சர்வதேச சமூகத்திற்கு முன்னாள் தீர்வுகளை நம்பிய தமிழ் சமூகம்,இந்த ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை நம்பியவர்களாக,ஏராளமான காணிகளை விடுத்துள்ளோம் என்று கூறுகின்ற நிலையில்,எத்தனை முகாம்கள் இன்னும் எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டிருக்கின்றன. புல்மோட்டை,சிலாவத்துறை இன்னும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கையகப்படுத்தப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் சாட்டுப்போக்கு சொல்லப்படுகின்ற நிலையில் ஏற்கனவே தரப்பட்ட உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படாமல் எமது ஆதரவினை எதிர்பார்க்க முடியாது.என்று மிகவும் ஆணித்தரமான முடிவுகளை எடுத்துள்ளோம்.
இந்த கட்சியின் அடிமட்ட பிரதிநிதிகள் எமது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள். உங்களது வெற்றிக்கு உழைத்த அனைத்து வேட்பாளர்களை நீங்கள் மறந்துவிடக்கூடாது.அவர்களை வட்டாரங்களின் தலைவராக கொண்டு கட்சியை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் இந்த கட்சியை பலப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தில் இருக்கின்ற உள்ளக முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றை நாம் சரி செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு நாம் இயங்க கூடாது. நமக்கென்று பொதுவான நிகழ்ச்சி நிரலை ஒட்டியே நாம் செயற்படவேண்டும்.
-நாச்சியாதீவு பர்வீன்-