A+ A-

குருநாகல் மாவட்டத்தில் 4% இருந்த குழாய்நீர் வழங்கல் 47% ஆக அதிகரிப்பு









கடந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறோம். விளம்பரம் இல்லாமல் இவை செய்யப்படுவதினால் பலருக்கும் இவை தெரியவருவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய தொகுதியில் நம்முவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கல்கமுவ தொகுதியில் ஜாகம மற்றும் ஹதிரவலான ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று (13) திறந்துவைத்த பின்னர் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

குழாய் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத இடங்களில் இடைக்கால தீர்வாக சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலின்கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சியின் அபிவிருத்திகள் நடைபெறாததுபோல சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த ஆட்சியில்தான் அதிகளவான நீர் வழங்கல் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். இப்படியான வேலைத்திட்டங்களுக்கு எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் செய்வதினால் எவ்வளவு வேலை செய்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை என்றார்.

அங்கு உரையாற்றிய வடமேல் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா கூறியதாவது,

குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பத்தில் 4% பிரதேசங்களுக்கு மாத்திரமே குழாய்நீர் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ரவூப் ஹக்கீம் குறித்த அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் முதலாவதாக மாவத்தகம - கலகெதர நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து தற்போது 47% பிரதேசங்களுக்கு குழாய்நீர் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பல அமைச்சர்களிடம் புனரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டிருந்த பன்னவ வீதியை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சின் மூலமாக 14 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொபேஹன சந்தியிலிருந்து பன்னவ ஊடாக நுவவங்வெவ வரைக்கும் இந்த வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, நிக்கவரெட்டிய மத்திய மகா வித்தியாலயத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாடசாலையின் பௌதீக வள குறைபாடுகள், குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக கேட்டறிந்துகொண்டார். பாடசாலைக்கு அருகிலுள்ள அரச காணியை பெற்றுத்தருமாறு பாடசாலை சார்பாக வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. இதன்போது, எதிர்காலத்தில் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையொன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.