கம்பளை உடபலாத்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (30) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, கம்பளை பிரதேச சபையின் உப தலைவர் அசல அமரசேன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளரும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஜயதிலக ஹேரத், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடபலாத்த பிரதேச செயலாளர் திருமதி துஷாரி தென்னகோனின் ஒருங்கிணைப்பில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் இப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ள 11 கருத்திட்டங்களுக்கும், மாகாண சபை அபிவிருத்தித் திட்டத்தின் கீழான 3 கருத்திட்டங்களும், விவசாய அமைச்சின் 2 கருத்திட்டங்களும், பௌத்த சாசன அமைச்சின் 2 கருத்திட்டங்களும், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் திறன் தொழில் பயிற்சிகள், மலையக உரிமை தொடர்பான அமைச்சின் 4 கருத்திட்டங்களும், சுபீட்ச நகரம் மற்றும் சிறு நகர நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலான 7 கருத்திட்டங்களும், அடிப்படை வசதிகள் மேம்பாடுத்தல் தொடர்பான 31 கருத்திட்டங்களுக்கும் ஆராய்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் கம்பளை நகரில் மேற்கொள்ளப்படவுள்ள பஸ்தரிப்பு நிலையம் மற்றும் புகையிரத நிலையம் என்பவற்றை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்பாலத்துக்கான கொங்றீட் நிர்மாண வேலைகள் போன்ற பணிகளை முன்னேடுப்பதற்கும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை வழங்கினார்.