இனம்காணப்படாத சிறுநீரக நோய்களை மையப்படுத்தி சீன - இலங்கை ஆய்வு மானிய செயற்திட்டத்தின்கீழ் பேராதனை பல்கலைக்கழத்தில் அமைக்கப்படவுள்ள தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நீர் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் ஆரம்ப வேலைகளை தொடக்கிவைக்கும் நிகழ்வு செப்டம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பிரஸ்தாப நிர்மாணமான வேலைகளை பொறுப்பேற்றுள்ள CTCEG நிறுவனத்தின் பிரதிநிதிகள் சீன விஞ்ஞான கழகத்தின் (CAS) பிரதிநிதி பேராசிரியர் வே உடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீலும் பிரன்னமாகி இருந்தார்.
இந்த பாரிய நீர் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை அமைக்கும் பணியில் சீன விஞ்ஞான ஆய்வு நிறுவனத்துடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பேராதனை பல்கலைக்கழகம் என்பன பங்களிப்பு நல்குவது குறிப்பிடத்தக்கது.