சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறையுடன் முன்னின்று செயற்பட்டதோடு, பல்கலைக்கழக உயர் கல்விப் புலத்திலிருந்தும் அரும் பெரும் சேவையாற்றிய பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் மறைவு, குறிப்பாக நாட்டு முஸ்லிம்களுக்கும் பொதுவாக சிறுபான்மை சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சமூகப் போராளியும், நாடறிந்த கல்விமானும், பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் மறைவையொட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
முஸ்லிம் சமூகத்தின் இருப்பை புவியியல் சான்றுகளுடன் பதிவுசெய்வதில் அக்கறையுடன் ஈடுபட்டுபட்ட வந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை சர்வதேச அரங்குக்கு கொண்டுசென்று, அதனை ஆவணப்படுத்தினார். வடபுலத்தை விட்டு முற்றாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றம் தொடர்பில் அவர் சுயநலமின்றி பாடுபட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான பொய்யான பரப்புரைகளுக்கு தர்க்க ரீதியாக பதில் வழங்கி, நியாயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். மாகாண சபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தவராக இருந்தபோதும் எல்லைகளை வகுப்பதில் முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பு இருப்பதை அவ்வப்போது சுட்டிக்காட்டியதோடு, பாராளுமன்றத்தில் எங்களைச் சந்தித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மறைந்த பேராசிரியர் ஹஸ்புல்லா, அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உரிய ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கியுள்ளார். முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இவர் அயராது பாடுபட்டு வந்தார்.
அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் அவரிடம் கற்றுத்தேர்ந்த அனைவருக்கும் பேராசிரியரின் இழப்பை தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தை எல்லாம் வல்ல இறைவன் வழங்கவேண்டும்.
அவரது சமயம் மற்றும் சமூகம் சார்ந்த நற்பணிகளை இறைவன் பொருந்திக்கொள்வதோடு, மறுமையில் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவன வாழ்வு கிட்டவும் பிரார்த்திக்கிறேன்.