நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் கடந்த 3 வருடங்களில் நகர திட்டமிடல் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 9 பில்லியன் ரூபாவும், நீர் வழங்கல் வேலைத்திட்டங்களுக்கு 300 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இன்னும் 150 பில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்திட்டங்கள் கிடைத்துள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
"நாளைய அழகான நகரங்கள்" எனும் எண்ணக்கருவினை நோக்காக கொண்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நகர திட்டமிடல் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு இன்று (6) மடவளை மதீனா தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வேலைத்திட்டங்களை திட்டமிடுவது, துரிதப்படுத்துவது, புதிய கருத்திட்டங்களை சமர்ப்பிப்பது மற்றும் நாளைய தேவைகளுக்கேற்ப இன்றைய நகரங்களை திட்டமிட்டு நவீன முறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருநாள் கருத்தரங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;
அரசின் எல்லாவிதமான அபிவிருத்தி திட்டங்களிலும் எங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பிரயோசனமுள்ளதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான அபிவிருத்தி. நாங்கள் என்ன அபிவிருத்தி செய்தாலும் அதனை விமர்சிக்கின்றவர்களாக பொதுமக்கள் இருக்கின்றார்கள்.
மக்களுக்கு பிரயோசனம் தராத அபிவிருத்திகள் தொடர்பில் பலத்த விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அரசியல் தலைவர்கள் தொடர்பில் வெவ்வேறு எண்ணங்கள் இருக்கின்றன. அவ்வாறே அபிவிருத்திகள் தொடர்பிலும் வெவ்வேறு எண்ணங்கள் இருக்கின்றன. அபிவிருத்தியை கொண்டு நடத்துகின்ற அதிகாரிகளுக்கும் இதன் பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பினை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.
இப்போது நாங்கள் வித்தியாசமான காலத்தில் வாழ்கின்றோம். எனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற கணக்கறிக்கை செயற்குழுவின் தலைவராக இருந்திருக்கிறேன். இந்த கால எல்லையில் வருடாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். இடைநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
சமர்பிக்கப்படுகின்ற அறிக்கைகளை முன்னிறுத்தி வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படும். பல்வேறுபட்ட முறைகேடுகள் தொடர்பில் வெளிவருகின்றபோது பாராளுமன்றத்தில் அங்கம் வகின்ற யாருக்கும் இதுதொடர்பில் கேள்வியெழுப்ப முடியும். அவ்வாறே பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை கோரமுடியும். இதுவொரு சாதாரண விடயமல்ல. ஒவ்வொரு அமைச்சராலும் அவரது அமைச்சு தொடர்பிலான அறிக்கைகளை வருட இறுதியில் பாதீட்டு விவாத காலங்களின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு அமைச்சும் தமது அபிவிருத்தி தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்தே ஆகவேண்டும். இதன்போது செய்யப்பட்ட அபிவிருத்தியானது குறித்த விதிமுறைகளுக்கு அமைவாக அமைந்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படும். அவ்வாறு குறித்த விதிகளை பூர்த்தி செய்யாத பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் யாருக்கும் கேள்வியெழுப்ப முடியும். இதனை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் இது தொடர்பான விவாதங்களை நாம் அவதானித்துள்ளோம்.
அண்மைக்காலமாக எமது இந்த ஆட்சியில் நாங்கள் வெவ்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றியுள்ளோம். அதில் மிக முக்கியமானதுதான் தகவலறியும் உரிமை சட்டம். இதற்கு சாட்சியாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இங்கே இருக்கிறார். இந்த சட்டமூலத்தின் பயனாக அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பிலான விபரங்களை பெறமுடியும். யாருக்கும் அந்த உரிமை இருக்கின்றது. ஒவ்வொரு அமைச்சிலும் திணைக்களங்களிலும் தகவல் வழங்கும் அதிகாரி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு அபிவிருத்தி தொடர்பில் குறித்த அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் இந்த அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் அவர்கள் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு எங்களுக்கூடாக செய்யபடுகின்ற அபிவிருத்திகள் அவர்களுக்கு பிரயோசனம் உள்ளதாக இருக்க வேண்டும். இதனால் தான் எனது அமைச்சின் மேலதிக செயலாளரின் தெளிவுபடுத்தும் இந்த செயலமர்வுக்கு எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
ஒரு அபிவிருத்தி திட்டத்தை அடையாளம் காண்பது, அந்த திட்டங்களை கொண்டு நடத்துவதற்கான தகவல்களை திரட்டுவது, இதானால் மக்கள் அடையும் நன்மைகள் போன்ற தெளிவான அடிப்படை தகவல்களை பூர்த்திசெய்து தரப்படுகின்ற கருத்திட்டங்களை எனது செயலாளர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ நான் பெறுகின்றபோது, அத்திட்டம் தொடர்பில் எனது அவதானத்தை இலகுவில் செலுத்த முடியும். இந்த கருத்திட்டத்தை செயற்படுத்த முடியுமா? இதன் மூலம் மக்களுக்கான உண்மையான அபிவிருத்தி சென்றடையுமா போன்ற விடயங்களை தீர்மானிக்க இலகுவாக அமையும்.
முன்னர் எனது அமைச்சுடன் நகர அபிவிருத்தி என்ற அமைச்சும் இணைந்திருந்தது. அதன்மூலம் பல நகர அபிவிருத்திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். ஆனால், தற்போதுள்ளது நகர திட்டமிடல் பிரிவு மாத்திரமே இருக்கிறது. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை நாங்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு கீழுள்ள அபிவிருத்தி பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். குறிப்பாக வீதி அதிகார சபை உள்ளது, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு உள்ளது. இருந்தும் நாங்களும் வீதிகளை புனரமைக்கின்றோம், வீதி அபிவிருத்தியில் எமது பங்களிப்பை செய்கின்றோம். இவைகள் இந்த நாட்டின் நிலையான அபிவிருத்தி தொடர்பில் நாம் மேற்கொள்கின்ற மேலதிக வேலை திட்டங்களாகும்.
கடந்த மூன்று வருடங்களுக்குள் எமது அமைச்சு ஊடாக சுமார் 9 பில்லியன் ரூபா நகர திட்டமிடல் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீர் வழங்கல் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 150 பில்லியனுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கருத்திட்டங்கள் கிடைத்துள்ளன.
சுமார் 400 பொறியியலாளர்கள், 1000 உதவி பொறியியலாளர்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் என மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டுள்ளது எமது அமைச்சு. எமது அமைச்சில் கடமை புரிகின்ற ஊழியர்கள் மிகத்திறமையானவர்கள். அவர்களை சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்றார்.
இந்த செயலமர்வில் காலத்துக்கு காலம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் நிதி விதிமுறைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு, சிறந்த தரத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கருத்திட்டங்களை பூர்த்திசெய்வது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நகர திட்டமிடல் பிரிவின் மூலம் நடுத்தரமான சிறிய நகரங்களை ஓரளவு அபிவிருத்தி செய்ய முடியும். இதற்காக ஓரளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால், இந்த அமைச்சின் ஊடாக எவ்வாறான அபிவிருத்திகளை செய்ய முடியும் என்ற விளக்கத்தையும், அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்கின்ற படிமுறையினையும் நாங்கள் தெளிவு படுத்துவதோடு, சரியான அபிவிருத்திகளை அடையாளம் காண்பதிலும், அவற்றை கொண்டு நடத்துவதிலும் தொய்வு நிலையை இல்லாமலாக்கும் வகையிலும் இந்த செயலமர்வு அமைந்தது.
இங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார். அமைச்சின் அபிவிருத்தி தொடர்பில் நேரடியாக அறிக்கைகளை அவதானித்த அமைச்சர், சில அபிவிருத்திகளில் பின்னடைவை அவதானித்தார். இதற்கான மாற்று திட்டத்தையும், தீர்வுக்கான வழிகளையும் ஆராய்ந்து விரைவில் சமர்ப்பிக்குமாறு கூறினார்.
அமைச்சரின் பணிப்புரைக்கமைக்கவே எங்களது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான விளக்கத்தினை தேசிய ரீதியில் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட அதிகாரிகள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச செயலகத்தின் செயலாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து முழுநாள் விளக்க கருத்தரங்கு ஒன்றினை நடத்துவதன் மூலம் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்களை அவர்களுக்கு வழங்க முடியும் என்பதற்காவே இது ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்தோடு சிறிய நகர அபிவிருத்தி திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்கப்படுகின்ற கருத்திட்டங்களை நாங்கள் நேரடியாக அனுமதியை வழங்க முடியாது. எமது அமைச்சுக்கு மேலதிகமாக அரசின் தேசிய திட்டமிடல் துறையின் அனுமதியை பெறவேண்டும். அனேகமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கையளிக்கப்படுகின்ற கருத்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறையானது சிரமத்தினை மேற்கொள்கின்றது.
அபிவிருத்தி கருத்திட்டங்கள் சரியாக வகைப்படுத்தப்படாமை, சரியான மற்றும் தேவையான தகவல்கள் பூர்த்திசெய்யப்படாமை, எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை சிறிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்க முடியும் என்கின்ற தெளிவின்மை போன்ற இடர்பாடுகள் காரணமாகவே தேசிய திட்டமிடல் துறையினால் அதிகமான அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவதில்லை.
கருத்திட்டங்களை சமர்ப்பிக்கும்போது எவ்வாறான விடயங்களை அவதானத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான விரிவான விளக்கத்தினை அவர் வழங்கினார். அபிவிருத்தி கருத்திட்டத்தின் பெயர், இடம், குறித்த அபிவிருத்தி திட்டத்தினால் பயனடையும் பயனாளிகள், இந்த அபிவிருத்தி திட்டத்தின் முக்கியத்துவம் போன்ற அடிப்படை விடயங்களை உள்ளடக்கிய தெளிவான கருத்திட்ட கட்டமைப்பை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக இந்த அபிவிருத்தி கருத்திட்டத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு கிடைக்கின்ற நன்மைகள், பெறப்படுகின்ற தீர்வுகள் போன்றவற்றை கருத்திட்டத்தில் கவனத்திற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய ரீதியில் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சுக்கும் அதனை செயற்படுத்துகின்ற அரசாங்கத்தின் அதிகார மையத்துக்கும் இவ்வாறான இணைப்பு பலமானது விரைவாக அபிவிருத்திகளை செய்துமுடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அரச அதிகாரிகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்த முனைகின்றபோது, நடைபாதை வியாபாரிகள், பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முறுகல் நிலை தொடர்பிலும் அதனை எவ்வாறு சட்டபூர்வமாக நிவர்த்தி செய்வது எனும் தொனிப்பொருளில் மடவளை மதீனா தேசிய பாடசாலை மாணவர்களினால் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
பொதுமக்களை நோக்காக கொண்டு செய்யப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளின் தொய்வுநிலை காரணமாக சில அபிவிருத்தி பணிகள் இடையில் தடைப்பட்டு போவதும், கருத்திட்டங்களை சமர்ப்பிப்பதில் குறித்த தரப்பினர் விடுகின்ற பிழைகள், அதற்கான மாற்றுவழிகள், துரிதமாக அபிவிருத்தி செயற்பாடுகளை எவ்வாறு கொண்டு நடாத்துவது போன்ற விளக்கங்கள் இங்கு வழங்கப்பட்டன.
இந்த முழுநாள் கருத்தரங்கில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல், சட்டவல்லுனர் கலாநிதி பிரதீபா மானாமஹேவா, பொறியியல் துறை நிபுணர் பிரசாத் திஸாநாயக, அமைச்சின் திட்டமிடல் அதிகாரி தமிந்த நல்லபெரும, பிரதான பொறியியலாளர்களான டி.எஸ்.எஸ். ஜயதிலக, எம்.ஏ.டி.வை.எல். குலரத்ன, சந்தியா குலதுங்க மற்றும் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதான பொறியியலாளர்கள் தொழில்நுட்ப அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.