A+ A-

இலங்கைக்குள் இந்துத்துவ இறக்குமதி செய்யப்படுகிறதுஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்தியாவில் வெளிவரும் ‘தி ஹிந்து’ குழுமத்தின் ’காமதேனு’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணல்

– ஆர். ஷபிமுன்னா

கேள்வி: மோடி ஆட்சியில் இந்திய - இலங்கை உறவு தற்போது எப்படி உள்ளது?

பதில்: இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு இலங்கையுடனான உறவு, பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. இலங்கையுடனான உறவை நல்ல முறையில் பேண வேண்டும் என்ற ஆர்வம் தொடர்கிறது. குறிப்பாக, இனப் பிரச்சினையில் சகல சமூகங்களையும் திருப்திபடுத்துவதற்கு இந்திய அரசு நாட்டம் கொண்டிருக்கிறது. வட, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டுக்கும் ஆர்வம் இருக்கிறது. இந்த விடயங்களில், இலங்கையில் ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு ஏற்றவாறு செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. 

இந்தியாவுடன் 1987இல் இடப்பட்ட ஒப்பந்தத்தை மீற மடியாத சூழல் இலங்கை அரசுக்கு இருந்துவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் வட, கிழக்கு பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதும் ஒன்று. இதை இலங்கையில் ஆட்சிக்கு வந்த சில கட்சிகள் போதுமான அளவுக்கு செய்யாதபோதெல்லாம், இந்திய அரசு இராஜதந்திர ரீதியில் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச சபைகளில் வலியுறுத்தி வருகிறது.

அதேசமயம், இலங்கை அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிசெய்தும் வந்திருக்கிறது. எனினும், யுத்தத்தின்போதும், அதன் பிறகும் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமான விடயங்களில் இந்திய அரசு காட்டிவரும் கரிசனையையும் மறுப்பதற்கில்லை.

கேள்வி: இலங்கையுடனான இந்திய அரசின் அணுகுமுறையில் தமிழகம் தொடர்ந்து அதிருப்தி காட்டிவருகிறதே?

பதில்: இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் தீவிரமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழகத்தின் பல தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியா நினைத்தால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக அழுத்தங்களை கொடுக்க முடியும். எனினும், இரு நாடுகளுக்கான உறவிலுள்ள பலத்தை இலங்கைக்கு சாதகமாக வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு தொடர்ந்து பேணிவருகிறது.

கேள்வி: இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானை பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைந்த நாடு எனப் பார்க்கும் நிலையில், இலங்கை அதனுடன் பொருளாதார உடன்படிக்கை செய்திருப்பது ஏன்?

பதில்: ஒவ்வொரு நாட்டிலுள்ள உள்ளக பாதுகாப்பு சூழல் மீது அந்தந்த நாடுகளே நடவடிக்கை எடுத்து தீர்க்கவேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள். எங்களுடையது சிறிய நாடு என்பதால் அனைத்து நாடுகளுடனும் சமநிலையைப் பேணுவதில்தான் நாங்கள் நாட்டம் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பிரதமர் மோடியுடனான உங்களது சந்திப்பில் கிடைத்த பலன் என்ன?

பதில்: இலங்கைக்கு அனைத்து வகையிலும் உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். எது ஏற்பட்டாலும் பூகோள ரீதியாக இரு நாடுகளுக்கும் உள்ள நெருக்கத்தை யாரும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

கேள்வி: தமிழக மீனவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேசப்பட்டதா?

பதில்: தமிழக மீனவர் பிரச்சினையில் எங்கள் இராணுவத்தினர் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்துவருகிறது. இழுவை வலை பாவித்துக் கடல் வளங்களை மிகவும் மோசமாக சூறையாடுகிற மீன்பிடியே இதன் காரணம் என இலங்கையில் கருதப்படுகிறது. தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கான மாற்று வசதிகளை இந்திய அரசு செய்துகொடுக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இதன்மூலம், இருநாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காது. இதுதொடர்பாக இலங்கையின் துறைசார்ந்த நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே, பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையில் நாம் அதைப் பற்றி தீவிரமாக வலியுறுத்தவில்லை.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு எப்போது?

பதில்: இதற்கான தீர்வைக் கொடுப்பதற்கு நாம் ஆர்வமாக உள்ளோம். இதற்காக நிறை வேற்றப்படும் யாப்பு மாற்றத்துக்கு (அரசியலமைப்பு திருத்தத்துக்கு) பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கு தெற்கிலுள்ள தீவிர சக்திகளின் ஆதரவும் தேவை. மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இடையே இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அவர்களும் இதை நியாயபூர்வமாக அணுகினால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

கேள்வி: சமீபத்தில் நடந்த கண்டி கலவரத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்ததாக கூறப்படுகிறதே?

பதில்: அம்பாறையில் ஆரம்பித்த கலவரம் கண்டியில் வேறு இரு சம்பவங்களை வைத்து தீவிரமடைந்தது. இதில் முஸ்லிம்களின் வீடுகள், வியாபார  நிறுவனங்கள் என பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் அழிக்கப்பட் டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர சிங்கள அமைப்புகள் வேண்டுமென்றே சிறு சம்பவங்களை பெரிதுபடுத்தி வெறுப்பு பேச்சுகளால் கலவரத்தைப் பெரிதாக்கின.

இதன்மீது இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததுபோல் தாமதப்படுத்துவதும் பாரிய பாதிப்புகளுக்கு காரணம். கடந்த அரசு இதுபோல் செய்தது என்ற குற்றச்சாட்டினால்தான் சிறுபான்மையினரும் இணைந்து தற்போதைய அரசாங்கத்தை அமைத்தனர். எனவே, மிகப்பெரிய வடுவாகிவிட்ட இந்த இனப் பிரச்சினையில் தீவிரம் காட்ட வேண்டும் என்பது சிறுபான்மையினரின் வேண்டுகோள்.

கேள்வி: இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் தீவிர சக்திகள் இலங்கையில் அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறதே?

பதில்: நாடு கடந்த ரீதியில் இந்துத்துவாவின் தீவிரக் கொள்கைகளை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு ஒருசில இயக்கங்கள் முற்படுகின்றன. இது, இந்திய – இலங்கை தரப்பு உறவுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயமாக போய்விடும். மத அடிப்படைவாதம் என்பது எந்த நாட்டில் இருந்தாலும் அதை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் மெத்தனப் போக்கில் இருப்பது தீர்வாகாது. பிறகு, இது பெருகி நாட்டையே குட்டிச் சுவராக்கிவிடும்.

கேள்வி: மதவாதத்தை தீர்க்கும் வழி என்ன?

பதில்: இறைநம்பிக்கை என்பதற்கு அப்பால், ஒரு மதத்தின் பொருளாதார வளர்ச்சி மீது குரோதம் காட்டுவதும் மதவாதத்தின் இயல்புகளில் ஒன்று. இதன்மூலம், தங்கள் மதத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும். அதேசமயம், இருதரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளும் நடக்க வேண்டும். ஒரு மதத்தினரின் உயிர், உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு குரோதங்களை எவரும் வளர்த்துவிடக் கூடாது.

கேள்வி: பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் மட்டும்தான் இலங்கை சொந்தம் என்ற சிந்தனை அதிகமாகி வருகிறதா?

பதில்: ஜனநாயக நாடான இலங்கை பல்வேறு இனங்களுக்கும் சொந்தமானது. இதில், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், சிங்களவர்கள், கத்தோலிக்கர்கள் என்று பல வகையினரும் உள்ளனர். எனவே, இலங்கை எந்த ஒரு தனி இனத்துக்கும் சொந்தமானதல்ல. ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையில் கூடுதல் என்பதற்காகவும் அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.

நவீன உலகத்தில் இவ்வாறான கோட்பாடுகளை வைத்துக்கொண்டு எந்த நாடும் முன்னேற முடியாது. சமத்துவமான ஜனநாயக உரிமைகளுடன், தங்கள் சமய நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொண்டு வாழ்கின்ற சூழலை அனைத்து இனங்களுக்கும் வடிவமைத்துக் கொடுப்பது எல்லா நாட்டு அரசாங்கங்களின் பாரிய கடமையாகும்.

சமய, இனரீதியான முரண்பாடுகளை கண்டறிந்து, அவற்றைக் களைவதற்காக சபாநாயகர் தலைமையில் ஒரு தெரிவுக்குழு அமைத்துள்ளோம். இக்குழுவில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர். இதன்மூலம், மத, இனக்கலவரங்கள் இலங்கையில் மீண்டும் நிகழாமல் தடுப்போம்.

கேள்வி: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக நீங்கள் பாராளுமன்றத்தில் பேசியிருந்தீர்களே?

பதில்: நிர்வாக ரீதியாக வீடுகளை பங்களிப்பதில் இந்திய அரசாங்கத்தின் தலையீடுகள் குறைவுதான். இலங்கை அரசின் நிர்வாகம்தான் அரசியல், சமூகம் ரீதிகளில் பாரபட்சம் காட்டுகிறது.

கேள்வி: ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை விவகாரம் குறித்து உங்கள் கருத்து?

பதில்: அவர்களை தமிழக அரசே விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில் அவர்களின் விடுதலையை ஆட்சேபிப்பது மனிதாபிமான செயலல்ல. எனினும், இந்திய பிரச்சினையாக கருதி இதில் இலங்கை தலையிட முடியாது.

(நன்றி: காமதேனு)