A+ A-

கல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி






கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில்; அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101,000 பேர் நன்மையடையவுள்ளனர்.

ஒருங்கிணைந்த கல்முனை - சம்மாந்துறை அபிவிருத்தித்திட்டம் செயற்படுத்தப்படும் நிலையில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் கல்முனை தமிழ்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களின் சுற்றாடல் பராமரிப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, மேலதிக செயலாளர் எல். மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.