இன்றைய அரசியல் அரங்கில் முஸ்லிம்களின் குரலை நசுக்கும் சூழ்ச்சிகள் சூட்சமமாக இடம்பெற்று வருகின்றது. இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாதென்பதுடன், கடந்த காலங்களில் பேரம் பேசும் சக்தியை அரசியலில் பயன்படுத்தி உரிமைகளைப் பெற்றது போல் இனியும் அவ்வாறான அரசியல் பேரம் பேசும் பலம் கிடைத்து விடக்கூடாதென்ற நிலையில், தேர்தல் முறை மாற்றங்கள் இடம்பெறுவதையும், அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதையும் நாம் பார்க்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான பேரினவாத சக்திகளிடமிருந்து எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அன்று உருவாக்கப்பட்ட நமது தாய்க்கட்சி முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் இன்றியமையாதவொன்றாகக் காணப்படுகிறேது.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் எனும் தாய்க்கட்சியில் முகவரி பெற்று பதவிகளுக்காக தங்களைத் தாங்களே தலைவர்கள் என மகுடம் சூடிக்கொண்டவர்கள் தங்களின் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கே முயற்சி செய்கிறார்கள். கடந்த அரசின் செல்லப்பிள்ளைகளாக இருந்தும், சமூகத்தின் எந்தவித உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. சலுகைகளைக்காட்டி முஸ்லிம் காங்கிரஸை விட்டும் மக்களைத்திசை திருப்ப வேண்டுமென்பதே இவர்களின் சமூக நோக்கமாக அன்றும் இன்றும் இருக்கிறது.
இந்தத்தலைவர்களால் ஒரு போதும் உரிமைகளை ஆட்சியாளர்களிடம் பேச முடியாது. வெறுமெனே தங்களின் வாக்குகளைப் பாதுகாப்பதற்காக மக்கள் மன்றங்களில் வெற்றுக்கோசங்களாக மட்டும் பேசுவார்கள். உயரிய சபையான பாராளுமன்றத்திலும் சமூகத்திற்குப் பாதகமான முக்கிய அமர்வுகளிலும் இவர்கள் கலந்து கொண்டதில்லை.
அப்படி கலந்து கொண்டாலும், பல நேரங்கள் மௌனமாக இருந்தும் இருக்கிறார்கள். சில நேரங்களில் மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஆக்ரோசமாக தமிழில் உரையாற்றுவார்கள். அத்தோடு, அவர்களின் பணி முடிவடைந்து விடுகிறது.
இவர்களின் உயிர் நாடி, அவர்கள் பெற்றிருக்கும் அமைச்சுப்பதவிகள் தான். அதனை வைத்துக்கொண்டு அதிலுள்ள திணைக்களங்களில் பதவிகளை வழங்கி சிலரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸில் பதவிகள் கிடைக்காதவர்களைக் கவர்ந்து தங்களின் கட்சிகளில் இணைப்பதற்கு இவ்வாறான திணைக்களப்பதவிகளும் காலத்திற்கு காலம் வழங்கப்படுகிறது. இன்று உரிமை பேசி போராடிய சமூகத்தை வாழ்வாதாரம் என்ற சலுகைகளுக்காக சண்டை பிடிக்கும் சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் நிலைமைகளில் பல சூழ்ச்சிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் சமூக உரிமை விடயத்தில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறது.
தான் ஒரு சமூகத்தின் தலைவன் இந்தத்தலைமை பதவி முஸ்லிம் சமூகம் தனக்களித்த அமானிதம் என்ற அடிப்படையில் நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் செயற்படுவதை நாம் பார்க்கலாம். சமூகத்தைப் பாதிக்கும் சட்டமூலங்கள் வரும் போது, அவை தொடர்பான விவாதங்களில் மும்மொழிகளிலும் உரையாடுவதையும், குறுக்கிடும் எதிரணியினரை அதே வேகத்தில் வாயடைக்கச் செய்வதிலும் தனது திறமையை வெளிக்காட்டியவர். சமூகப் பிரச்சினையை தேசியத்திற்கு மாத்திரமின்றி சர்வதேசத்திற்கும் கொண்டு செல்கிறார்.
அத்துடன், தன்னைத்தான் தலைவர் என பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் பாராளுமன்ற அமர்வுளில் கலந்து கொள்வதைவிட, அதிகளவான அமர்வுகளின் இவர் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை பாராளுமன்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
இன்று சமூகப்பிரச்சனை வரும் போது எல்லோரும் கேட்பது முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்கிறது? அதன் தலைவர் அமைச்சர் என்ன செய்கிறார் என்பது தான். எதிரிகள் கூட இதனைக்கேட்பார்கள் ஏனென்றால், அவர்களும் தங்களின் சுயநலனுக்காகவே இவரை எதிர்க்கிறார்கள் பொதுநலன் என்ற போது, இவர் அதில் அதிரடியாகச் செயற்படுவார் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் பல சந்தர்ப்பங்களில் தனது அமைச்சுப்பதவிகளைத் துறந்து மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக, யுத்த காலத்தில் உயிரச்சுருத்தல் நிலைமையிலும் இரண்டு பொலிசாருடன் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பயணங்கள் மேற்கொண்டதையும் இந்தச்சமூகம் மறந்து விடாது.
இன்று சிலர் கட்சி உருவாக்கி பதவி பெற்றவர்கள், பாராளுமன்றத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாது பேசுவதை நாம் பார்க்கலாம். அண்மையில் ஒரு கட்சியின் தவிசாளர் பாராளுமன்றத்தில் இரு பிரதேசங்களை மாவட்டங்களாக எழுதிக்கொண்டு வாசித்ததைப் பார்க்கும் போது புரிகிறது. பாராளுமன்ற உரைகளை எவ்வளவு விழிப்புணர்வுடன் செய்கிறார்கள் என்பது. இவ்வாறான தவறுகளை விட்டு விட்டு அதனை நியாயப்படுத்துவதற்கும் இந்த ரவூப் ஹக்கீம் அவர்களின் பேச்சு அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் நிதானமாகச்சிந்தித்து நாம் செயற்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். இந்த மக்கள் இயக்கத்தை அழிக்கத்துடிக்கும் கூட்டத்தின் செயற்பாடுகள் முறியடித்து, சலுகைகளுக்கு சோரம் போகும் கூட்டம் நாங்களில்லை. உரிமைக்காகப் போராடும் சமூகம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி