கண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஸ்தாபகர் தினமும் “Colours Eve” நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (23) கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் ஷிஹானா ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், மாகாணசபை உறுப்பினர்களான முத்தலிப், லத்தீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய போட்டிகள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், சமூக அறிவியல், அழகியல், மொழிகள் போன்ற துறைகளில் பிரகாசிக்கும் மாணவிகளுக்கும் மேசைப்பந்து, வலைப்பந்து, சதுரங்கம், தடகளப் போட்டிகளில் தேசிய, மாகாண, வலய மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் இதன்போது விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இதுதவிர, சர்வதேச பாடசாலை விருது, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட விருதுகள், சர்வதேச விஜயங்கள், சர்வதேச திட்டங்கள், சர்வதேச மாநாடு, ஒருங்கிணைந்த கழகங்கள் போன்ற சமூக செயற்பாடுகளில் ஆர்வம்காட்டிய மாணவிகளும் கெளரவிக்கப்பட்டனர்.