முன்னாள் சட்டமா அதிபரும் இலங்கையின் தலைசிறந்த முன்னணி சட்ட விற்பன்னர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் ஷிப்லி அஸீஸ், நீதித்துறையில் பன்முக ஆளுமை கொண்டவராக வரலாற்றில் தடம்பதித்தவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அன்னாரது மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
தென்னிலங்கை காலியில் புகழ்பூத்த குடும்பம் ஒன்றில், அக்காலத்தில் சிரேஷ்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞராக திகழ்ந்த மர்ஹூம் எம்.எச். அப்துல் அஸீஸின் மகனாக அவதரித்தார் மர்ஹூம் ஷிப்லி அஸீஸ்.
தனது தந்தையாரால் 1951ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இளம் சிறார்களின் சன்மார்க்க கல்வி மேம்பாட்டுக்காக நாடளாவிய ரீதியில் கிளை பரப்பி வியாபித்துள்ள அஹதிய்யா இயக்கத்தின் வளர்ச்சியில் கடைசி வரை கண்ணும் கருத்துமாக இருந்து உயரிய பங்களிப்பை செய்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், சட்டக் கல்வி கற்றுத் தேறிய பின் நீதித்துறையில் பல்வேறு பரிமாணங்களில் சுடர்விட்டு பிரகாசித்தார். நீண்ட காலமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய இவர், இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் சட்டமா அதிபராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பல்வேறு ஆணைக்குழுக்களிலும் ஏனைய நீதி சார் அமைப்புகளிலும் இவர் அங்கத்துவம் பெற்றிருந்ததோடு, அரசியலமைப்பு சபை முஸ்லிம் தனியார் சட்டக்குழு என்பவற்றிலும் முக்கிய பங்காற்றினார்.
வர்த்தக சட்டம், கடல்சார் சட்டம் என்பவற்றிலும், அவற்றுக்கும் மேலாக ஆகாய வான்வெளி விமான போக்குவரத்து சட்டத்துறையிலும் அவர் சிறந்து விளங்கினார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரபல வழக்குகளில் அரசு தரப்பிலும், தனியார் தரப்பிலும் அவர் தோற்றினார்.
குறிப்பாக, இளம் சட்டத்தரணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதில் அவர் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்ந்தார். அவர்களுக்கு அவ்வப்போது உரிய வழிகாட்டுதல்களை அவர் வழங்கினார்.
இலங்கையின் சட்டத்துறை வளர்ச்சியில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. பல சட்டநூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் அவர் எழுதியிருந்தார். நடுத்தீர்ப்பு (Arbitration) வழக்குகளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் நன்கு அறியப்பட்டிருந்தார்.
இந்நாட்டின் சட்டத்துறையில் அன்னாரின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் இலகுவில் நிரப்பப்பட முடியாதது. அவரது மறைவினால் துயருற்றிருயிருக்கும் குடும்பத்தினர், உறவினர், அன்னாரது நீதித்துறை சகாக்கள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.