கடந்த முப்பது வருட கால கொடூரமான யுத்தத்தினால் முஸ்லிம் சமூகம் நிறைய விடயங்களை இழந்துள்ளது. கல்வியை,பொருளாதாரத்தை, தமது வாழிடத்தை,விலைமதிக்க முடியாத உயிரை என்று அந்த இழப்புக்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தும், அகதி வாழ்க்கை வாழ்ந்தும், தமது விவசாய நிலங்களுக்குள் சென்று பயிர்செய்கை மேற்கொள்ள முடியாமலும், தமது கால்நடைகளை வளர்த்தெடுப்பதற்கான சரியான மேய்ச்சல் நிலம் இல்லாமலும் அவதிப்பட்டவர்களில் முக்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்துள்ளது.
குறிப்பாக வடக்கிலும்,கிழக்கிலும், வடகிழக்கு மாகாணங்களின் எல்லையில் வசித்த வேறுமாவட்ட முஸ்லிம்களும் இந்த யுத்தத்தின் கெடுபிடியால் பாதிக்கபட்டவர்களே. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,மூதூர்,தோப்பூர்,கி ண்ணியா,கந்தளாய் போன்ற முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் கடந்த கால யுத்தத்தின் தாக்கம் வெகுவாக இருந்தது. இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான விளைச்சல் நிலங்களை யுத்தகாலத்திலும்,யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிகார வர்க்கத்தின் அனுசரணையோடு கையகப்படுத்தி பல்வேறு தரப்பினர் இன்றுமட்டுக்கும் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பொன்மலைக்குடா, அரிசிமலை, மாலான்னூர், வெற்றிலைக்கேணி,மண்கிண்டிமலை, வட்டுக்காரபடி,13 ஆம் கட்டை போன்ற பிரதேசங்கள் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளின் அமைவிடங்களாகும். யுத்தகாலத்தில் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் உயிர்பயத்தின் காரணமாக இந்த பிரதேசத்து நிலங்களை அதன் உரிமையாளர்களினால் பயன்படுத்த முடியவில்லை. பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள், சேனை பயிர்ச்செய்கைக்கான நிலங்கள்,கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன இதனுள் அடங்கும். இந்த நிலங்களுக்கான உரிமையாளர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரம் மற்றும் பெர்மிட் என்பன காணப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் சில இடங்களில் தடையின்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பெரும்பாலான நிலங்களை அதன் உரிமையாளர்களினால் பயன்படுத்த முடியாத நிலைதான் இதுவரை காலமும் காணப்பட்டுவருகிறது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னால் ஆங்காங்கே சிங்கள இனவாதத்தின் எழுச்சி முஸ்லிம்களின் பூர்வீகத்தை கையகப்படுத்தி,காவுகொள்ளுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை மெல்லமெல்ல செயற்படுத்தி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தாரே தவிர அதன்பின்னால் கிளர்ந்தெழுந்த இனவாத பேய்களை கண்டுகொள்ளவில்லை. இதில் ஒரு குறிப்பிட்ட சிங்கள மதகுருதான் புல்மோட்டை முஸ்லிம்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என்ற புரளியை கிளப்பி விட்டு சிங்களவர்களையும் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி கூடாரமடித்து இடம்பிடிக்கின்ற வேலையை செய்து வருகின்றார்.
அவ்வாறே வன பரிபாலன திணைக்களத்தினர் இன்னும் பல நூறு ஏக்கர்களை எல்லையிட்டு இது வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணி என அடையாளமிட்டு அந்த காணிகளுக்குள் நுழைகின்றவர்களை சட்டத்தின்முன் நிறுத்துகின்ற வேலைத்திட்டத்தினை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையினர் சிலப்பகுதிகள் அவர்களுக்கு சொந்தமான காணிகளாக அடையாளமிட்டுள்ளனர். இந்த எல்லாத்தரப்பினரும் அடையாளப்படுத்தி கையகப்படுத்தியிருக்கின்ற காணிகளுக்கான உண்மையான உரிமையாளர்கள் முஸ்லிம்களே என்பதனை அவர்களது ஆவணங்கள் தெளிவு படுத்துகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட நிலச்சொந்தக்காரர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதில் அரச அதிகாரிகளின் மெத்தனப்போக்கு ஒருபுறம் இருக்க குறித்த சிங்கள மதகுருவின் சட்டத்தை மதிக்காத மிதவாத போக்கே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளதுள்ளது.
இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பலதடவைகள் பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தியதோடு, மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களி ல் பாராளுமன்ற உறுப்பினர் எம்,எஸ்.தௌபீக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் . அன்வர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் குரலெழுப்பி வந்துள்ளனர். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைமை என்கின்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் பலமுன்னெடுப்புக்களை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் ஒருகட்டமாக கடந்த 11.10.2018 அன்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது யுத்தகாலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாய காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பொதுமக்களின் காணிகள், யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும் அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தர தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.கிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளநிலையில், அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்குமாகாணத்திலுள் ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ,ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கபட்டது.
புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அரிசிமலை பௌத்த பிக்குவினால் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் பௌத்த சமய பாடசாலை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்டது. குறித்த காணி வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானதென்று அடையாளப்படுத்தி இந்த பிக்குவின் நடவடிக்கைக்கு சார்பாக அந்தக்காணியில் 80 பெர்ச்சர்சினை பிக்குவிக்கு வணபரிபாலன திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது காணி உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பிக்குவின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவ்வாறே 28.09.2018 அன்றைய தினம் மீண்டும் குறித்த காணிக்குள் அத்துமீறி நுழைந்த பிக்கு குழுவினரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பள்ளி தலைவர்கள் பிரதேச வாசிகள் மற்றும் கலகம் அடக்கும் அடக்கும் பொலிஸார் போன்றோரின் தலையீட்டின் மூலம் பிக்குவின் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
இவ்வாறு பல சம்பவங்கள் புல்மோட்டையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் இந்த மக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் கரிசனையோடு இயங்கி வருகின்றார்கள்.
பிரச்சினைகளின் போது களத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அந்தமக்களோடு மக்களாக நின்று அவர்களின் நியாயமான நிலமீட்பு போராட்டத்தில் கைகோர்த்து செயற்படுகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் எம்.எஸ்.தௌபீக் சில ஆயிரம் வாக்குகளினால் தோல்வியுற்றார் ஆனாலும் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகளின் வேண்டுகோளை மதித்து தலைவர் ஹக்கீம் தேசியப்பட்டியல் மூலம் எம்.எஸ்.தௌபீக் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொடுத்தார். தௌபீக் அந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் ஒரு பிரதியமைச்சராக திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தந்திருப்பார்.குறிப்பா க இந்தமாவட்டத்தில் இருக்கின்ற காணிப்பிரச்சசினை தீர்ந்திருக்கும்.முஸ்லிம்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை நுகர்ந்து கொண்டிருப்பர். எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் இந்த பிழையை செய்யாமல் எம்.எஸ்.தௌபீக்கின் கரத்தை பலப்படுத்த முன்வரவேண்டும்.
அவ்வாறே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் துடிப்பான இளம் அரசியல்வாதியவர் புல்மோட்டை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எழுகின்ற இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முதல் நபராக போய் நிற்பவர். அடுத்த மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபட்சத்தில் அவருக்கு ஒரு மாகாண அமைச்சை பெற்றுக்கொடுப்பதன்மூலம் அவரது செயற்பாட்டை இன்னும் அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும். பூர்வீகத்தை பாதுகாக்கின்ற பணியில் மண்ணுக்காகவும்,மக்களுக்காவும் இயங்கும் சுயனமில்லாத இந்த தலைமைகள்மூலம் நம் சமூகத்திற்கு விடிவு கிடைக்க பிரார்த்திப்போமாக.
நாச்சியாதீவு பர்வீன்