A+ A-

ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி வகுப்பு தடை குறித்து சர்வமத தலைவர்கள் கிழக்கு ஆளுனருடன் சந்திப்பு







கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களால் நடாத்தப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்பு  விசேடமாக நடாத்துவதை தடை விதிப்பது  தொடர்பில்   கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையில் கலந்துரையாடல் இன்று (26) வெள்ளிக் கிழமை ஆளுனரின் திருகோணமலை அலுவலகத்தில் இடம் பெற்றது.

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை காலை முதல் மதியம் 1.00 மணி வரையான காலப் பகுதிக்குள் தடை செய்து அறநெறி கல்விக்கான முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கான அவசரமான முடிவுகளை விரைவில் அறிவித்து நடை முறைப் படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் அதிகளவான பாவனையாளர்களாக பாடசாலை மாணவர்களும் பாவிக்கின்றனர். 

இதனை தடை செய்ய பொலிஸார் முன்வர வேண்டும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட மத குரு ஒருவர் ஆளுனருக்கு சுட்டிக் காட்டினார்.
அறெறிக் கல்விக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு மதமும் உணர்ந்து கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் அதற்காக ஒதுக்கி விசேடமாக தங்களது அறநெறிக் கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். 


இதற்கான புதிய முறைகள் ஊடாக தங்களாலான உதவி ஒத்தாசைகளை அறநெறிக் கல்விக்காக உரிய உயரதிகாரிகள் செயற்பட வேண்டும் .
 பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை அங்கு நடைபெறுவதென்பது குறித்த பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களின் கவனயீனமே காரணமாகும் எனவும் ஆளுனர் தெரிவித்தார்.


இச் சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா, பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன, ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்,திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, மூவினத்தை சேர்ந்த மத குருமார்கள், உலமா சபை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)