மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளில் அரச படையினர் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர். உரியவர்களின் காணிகள் உரிய தனியாருக்கு வழங்குவது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (25) வியாழக் கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையில் இடம் பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் முப்படைகளான இரானுவம், கடற்படை முகாம்களை அகற்றி அவர்களுக்கான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தனியார் மக்களின் குடியிருப்பு காணிகளை படையினர் வசம் கொண்ட சுவீகரிக்கப்பட்ட அனைத்தையும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இவ் உயர் மட்ட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகள் மக்களது குடியிருப்பு பிரதேசமாக காணப்படுகிறது இக் காணிகள் படையினர் வசமிருப்பதால் பல வருட காலமாக முயற்சித்த போதும் பலன் கிட்டவில்லை அதிரடி நடவடிக்கையாக மக்களுடைய காணிகளை உரியவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் மாகாண ஆளுனர்களை பணித்திருந்தார். இதனை உடனடி தீர்வாக நிவர்த்தி செய்யவே இவ்வாறான உயர் மட்டக் கலந்துரையாடல் மூலமான வெற்றிகரமான தீர்வு கிட்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக் கலந்துரையாடலில் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு நல்லிணக்க பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி, முப்படைகளின் உயரதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதய குமார்,ஆளுனர் செயலாளர் அசங்க அபேவர்தன, ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் உட்பட திணைக்கள உயரதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் கபில ஜெயசேகர, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)