கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாணத்தில் Beach Volleyball விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின்
அணுசரனையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” நிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை ( 04 ) திருகோணமலை கடற்கரையில் மாவட்ட இறுதிப் போட்டிகள் மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன . மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட போட்டிகள் யாவும் மாவட்ட மட்டத்தில் நிறைவுற்றுள்ளதையடுத்து திருகோணமலை மாவட்ட இறுதி போட்டிகள் இன்று (04) நிறைவுற்றது.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் அணி சார்பாக 21 அணிகளும், பெண்கள் அணி சார்பாக 07 அணிகளும் பங்கு பற்றின இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி சார்பாக கந்தளாய்-A அணியும், பெண்கள் அணி சார்பாக திருகோணமலை - A அணியும் மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர்கள்.
மாகாண இறுதிப் போட்டி நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் நாளை மறு தினம் வியாழக் கிழமை (06) இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை இதன் போது வழங்கி வைப்பார்.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்கேற்று மாகாண சம்பியன் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணணலை மாவட்ட இறுதிப் போட்டி நிகழ்வுக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் , மாகாண விளையாட்டு துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் தவராசா போன்றோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்கள்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும் விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு குறித்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் மாகாணத்தில் கடற்கரை கரப் பந்து விளையாட்டை பரவலாக்கும் விசேட திட்டமாகவும் இவ்வாறான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் இதன் போது தெரிவித்தார். எதிர் காலங்களில் பாடசாலை மட்டங்களிலும் இப் போட்டிகள் நடை முறைப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)