கிழக்கு மாகாணத்தில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை [19.01.2019] இடம்பெற்ற கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;
சுகாதார சேவையை மேலும் மேலும் விரிவாக்கும் நோக்கும் எமது அமைச்சு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அந்த வேலைத் திட்டங்களில் ஒன்றாகத்தான் இப்போது அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் அம்பியூலன்ஸ் கிடைக்காத வைத்தியசாலைகள் என் மீது கோபமாக இருக்கின்றன.
இதற்காக சிலர் என்னை விமர்ச்சித்துத் திரிகின்றனர்.அவர்கள் அவ்வாறு அவசரப்படத் தேவை இல்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மிகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும்.
350 பிக்கள் வாகனங்களையும் 150 வான்களையும் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்திய அதிகாரிகள் ஏழு வருடங்களில் பணத்தை செலுத்தி முடித்து சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் குத்தகை அடிப்படையில் அந்த வாகனங்கள் வழங்கப்படும்.
சில வைத்தியசாலைகளில் வாகனங்கள் தட்டுப்பாடாக இருப்பதால் ஏனைய வைத்திய தேவைகளுக்கும் அம்புலன்ஸ் வாகனங்களையே பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நோயாளிகளை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதியில் பொது வைத்தியசாலை ஒன்று இல்லாததால் இருக்கின்ற ஏனைய வைத்தியசாலைகளில் பொது வைத்தியசாலைகளில் இருக்கின்ற வசதிகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பொது வைத்தியசாலை ஆரம்பிப்புத் திட்டம் நிறைவேறியதும் போதனா வைத்தியசாலை திட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.அதன் பின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தையும் கொண்டு வருவோம்.
இந்த வருடத்தில் மாத்திரம் அம்பாறை மாவட்டத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான சுகாதாரத் துறை தொடர்பான வேலைத் திட்டத்தை நாம் தொடங்க இருக்கின்றோம்.மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பட்ஜெட் முடிந்ததும் அந்த வேலைத் திட்டத்தை நாம் தொடங்குவோம்.-என்றார்.
(ஊடகப் பிரிவு)