A+ A-

ஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் முபீனின் பகிரங்க மடல்(ஆதிப் அஹமட் )

பெருமதிப்புக்குரிய மேதகு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

முதற்கண் கிழக்கு மாகாண மக்களை ஆளுவதற்கான உயர் பதவியில் உங்களை அமர்த்திய அல்லாஹ்வைப்புகழ்கிறேன்.அரசியலில் தொடரான சிறப்புப்பதவிகள் உங்களுக்கு கிடைப்பதற்கு உங்கள் தந்தை தாய் போன்ற நல்லவர்களின் துஆவே(பிரார்த்தனை) காரணம் என நம்புகிறேன்.
உங்களிடத்தில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளவே இம்மடலை பகிரங்கமாக எழுதுகிறேன்.
பதவியென்பது அல்லாஹ் தருகின்ற அமானிதம்.தலைவர்களை அவனே உருவாக்குகிறான் என்பது நமது நம்பிக்கை.

அத்துடன் நீங்கள் இனவாதி அல்ல என்பது எனது அபிப்பிராயமாகும்.மாவட்டத்தில் அரசியல் ரீதியான தலைமைத்துவம் வழங்கிய காலமெல்லாம் தமிழ் பிரதேச அபிவிருத்தியில் நீங்கள் கரிசனை எடுத்துள்ளீர்கள். இருளிலேயே நீண்டகாலம் மூழ்கிக்கிடந்த படுவான்கரைக்கு மின்சார வசதி கனவாக இருந்தபோது அதை செய்து கொடுத்தவர் நீங்கள்.புலிகளின் போராட்டத்தை மதித்து அவர்களுக்கு மறைமுகமாக பல உதவிகள் செய்தவர்.சிறையிலிருந்த அகிலேஸ்வரனை பாராளுமன்றம் கொண்டுசெல்ல உழைத்தவர்.இது அரியநேந்திரன் போன்றவர்களுக்கு தெரியும்.ஆனால் அவர்கள் அவ்வாறுதான் பேசுவார்கள்.அவர்களின் அரசியல் இருப்புக்கு மூலதனமாக இனவாதத்தை நம் மீது கக்கி பயன் அடைவார்கள்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் இன்று கிழக்கு மாகாணத்தின் முதல் மகன். பல்லினத்தவரையும் கொண்ட கிழக்கு மண்ணுக்கு நீங்கள் தலைமை தாங்குவது இலங்கை சிறுபான்மை மக்களுக்கு  கிடைத்த பெரும் கௌரவம்.இனங்களுக்கிடையிலே சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பும் தங்களுக்குள்ளது.அதேவேளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் அதேவேளை காணி தொடர்பிலான பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.உங்களது பதவிக்காலத்தில் கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.நான் இவ்விடயத்தில் நீண்டகாலமாக குரல்கொடுத்து செயற்பட்டு  வருபவன் என்பது தங்களுக்கு தெரியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிகள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தங்களுக்கு நன்கு தெரியும்.2012ம் ஆண்டின் குடிசன கணக்கெடுப்பின்படி 25.5 வீதமாகவுள்ள முஸ்லிம்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 2 வீதமான அளவையே உரித்துடையவர்களாக உள்ளார்கள்.நமது சனத்தொகையின் படி மாவட்ட மொத்த நிலப்பரப்பில் 25 வீதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பது நமது அடிப்படை உரிமையாகும்.30 வருட காலமாக அரசியலில் தடம்பதித்துள்ள தாங்கள் தங்களுக்கிருந்த உயர்மட்ட அரசியல் தொடர்புகளைக்கொண்டு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.இவ்விடயத்தை தங்களுக்கு சொல்ல எனக்கு தகுதியிருப்பதாக நான் கருதுகிறேன்.ஏனெனில் தாங்கள் அரசியல் வானில் சுடர்விட்டு பிரகாசிப்பதற்கு அடித்தளமிட்ட சிலர்களில் நான் ஒரு முக்கியமானவன் என்பது தங்களுக்கு தெரியும்.இவ்விடயம் தொடர்பில் எனது விமர்சனத்தை இங்கு முன்வைக்கிறேன்.உங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் அல்ல என்பதை தயவுசெய்து மனதிற்கொள்ளவும்.ஏனெனில் நான் உங்களை மிகவும் மதிப்பவன்.

நமது நாட்டின் முக்கிய நிறைவேற்று அதிகாரம்கொண்ட நான்கு ஜனாதிபதிகளின் பதவிக்காலங்களில் நீங்களும் பதவி வகித்துள்ளீர்கள்.குறிப்பாக சந்திரிக்கா அம்மையார்,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களின் பதவிக்காலத்தில் அவர்களோடு நெருக்கமாக இருந்தீர்கள்.அக்காலங்களில் நீங்கள் நினைத்திருந்தால் நமது மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்க முடியும்.ஆனால் நீங்கள் பிற சமூக  வாக்கை எதிர்பார்த்தோ என்னவோ அது நடைபெறவில்லை.இப்பொழுது கிடைத்த்திருப்பது உங்களுக்கு அரிய சந்தர்ப்பம்.

சில உதாரணங்களை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

*பாலமுனை கிராம சேவையாளர் பிரிவு விவகாரம்.

1989ம் ஆண்டு தாங்கள் பாராளுமன்ற தேர்தலில் முதன்முதலாக வெற்றி பெற்ற பின் தங்களுக்கு 100% வாக்களித்த பாலமுனை மக்கள் தங்களை வரவேற்று ஓர் இராப்போசனத்தை ஏற்பாடுசெய்தனர்.நானும் தங்களுடன் அவ்வரவேற்பில் கலந்துகொண்டேன்.அம்மக்கள் அவ்வூர் சார்பான மிக முக்கிய கோரிக்கையொன்றை தங்களுக்கு முன்வைத்தனர்.அதாவது திட்டமிட்ட அடிப்படையில் பாலமுனைப்பிரதேசம் இரண்டு கூறுகளாக ஆரையம்பதி பிரதேச நிர்வாகத்தினால் பிரிக்கப்பட்டு அதில் ஒரு  முஸ்லிம் பிரதேசம் தமிழ் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு தமிழ் கிராம சேவையாளர் பிரிவாக உருவாக்கப்பட்டிருந்தது.இதனால் அம்மக்கள் காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குவதுடன் அரச நிதி ஒதுக்கீடுகள் தம் பிரதேசத்ததுக்கு கிடைக்காமலுள்ளது.இதனை பாலமுனை சனத்தொகைக்கு ஏற்ப இரண்டு முஸ்லிம் கிராம சேவையாளர் பிரிவுகளாக பிரித்து தருமாறு அம்மக்கள் தங்களை கோரினர்.அவ்விடயம் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.அப்போது உங்களுக்கு செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது.ஆனால் நடக்கவில்லை.

*கோரளை மத்தி பிரதேச செயலக விவகாரம்

மட்டக்களப்பு மாவட்ட  முஸ்லிம்கள் நில ரீதியாக எதிர்நோக்கும் காணிப்பற்றாக்குறைக்கு தீர்வாக 2002ம் ஆண்டின் பனம்பல எல்லை நிர்ணய ஆணைக்குழு ஊடாக கோரளை மத்தி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது தங்களுக்கு தெரியும்.240 சதுரக்கிலோமீற்றர் நிலப்பரப்பு காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி மக்களின் எதிர்கால காணித்தேவை கருதியே நமது மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இதற்கான பிரேரணையை ஆணைக்குழுவுக்கு முன்வைத்தனர்.தாங்களும் இவ்விடயத்தில் ஆரம்பத்தில் சம்பந்தப்ப்பட்டீர்கள்.ஆனால் இதனை உங்களால் முடிக்க முடியவில்லை.பின்னர் புலிகள் உள்ளிட்ட தமிழர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம்.முஹைதீன் அப்துல் காதர் திறந்துவைத்தார்.பின்னர் வாழைச்சேனை கலவரத்தை புலிகள் செய்தார்கள்.பின்னர் புலிகளுடன் சமாதானப்பேச்சுவார்த்தைக்கு எனது மற்றும் மர்ஹூம்.அன்வர் இஸ்மாயில் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சென்ற போது கோரளை மத்தி பிரதேச செயலக பிரச்சினையே வாழைச்சேனை கலவரத்திற்கு காரணம் என புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் கரிகாலன் சொன்னார்.பின்னர் நாங்கள் தொடராக புலிகளுக்கு புரிய வைத்தோம்.

ஆனால் மட்டக்களப்பு கச்சேரி நிர்வாகத்துக்கு தொடராக வந்த அரசாங்க அதிபர்கள் திட்டமிட்டு இப்பிரதேச செயலகத்தை இயங்கவிடாமல் தடுத்ததுடன் இன்று வாகரை பிரதேச செயலகம் நமது முஸ்லிம்களின் காணிகளை கச்சேரியின் துணையுடன் கபளீகரம் செய்து வந்தது நீங்கள் அறிந்த விடயமே.பல குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.நீங்கள் கிழக்கு மாகாணத்தின் மாகாண அமைச்சராக மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் 99 வருட குத்தகைக்கு காணிகளை வழங்கியுள்ளார்.நமது மாவட்ட அரசியல் தலைவர்கள் பல்வேறு வெளிநாட்டு கம்பனிகளுக்கு காணிகளை வழங்கியுள்ளார்கள்.இத்தனைக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக நீங்கள் செயற்பட்ட காலமே அதிகம் நடந்துள்ளன.

*காத்தான்குடி எல்லைப்பிரச்சினை விவகாரம் 

மிகப்பாரிய நிலப்பற்றாக்குறையை நமது ஊர் எதிர்நோக்குவது உங்களுக்கு தெரியாததல்ல.நமது ஊரின் வடக்கு எல்லையில் நமது காணிகள் திட்டமிட்ட அடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் கையகப்படுத்தியுள்ளது.நமது ஊரின் பிரதேச சபை,பிரதேச செயலகம் ,நகரசபை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்களில் நமது எல்லை தெளிவாக கூறப்பட்டும் அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை.நான் காத்தான்குடி நகரசபை தலைவராக பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக  செயற்பட்ட காலத்தில் தொடராக மாகாணசபையிலும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களிலும் இப்பிரச்சினையை  தீர்த்து வைக்குமாறு குரல் எழுப்பியதுடன் ஒரு போராட்டமே செய்துவந்தேன்.நீங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருந்தும் நமது நியாயமான பிரச்சினையை தீர்க்கவில்லை.இறுதியில் இவ்விடயம் தொடர்பில் தங்களது தலைமையில் எனது வாயை மூடி தமிழர்கள் சார்பான தீர்வைப்பெறும் நோக்கிலும் நீங்கள் செயற்பட்டீர்கள்.பின்னர் 2012 இல் நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்தன் பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.இப்பிரச்சினை இன்றுவரை கிடப்பிலேயே உள்ளது.நாம் குப்பை கொட்ட இடமில்லாமல் ஆற்றிலேயே கொட்டுகின்றோம்.தங்களின் சொந்த ஊர் மாபெரும் காணிப்பற்றாகுறையை எதிர்நோக்கும் நிலையில் ஊரின் காணித்தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் மக்களுக்கு காணியைப்பெற்றுக்கொடுக்க தாங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களுக்குள்ள மஹிந்த,மைத்திரியின் உறவைக்கொண்டு நம் எதிர்கால சந்ததிக்கு காணிகளைப்பெற்றுக்கொடுக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?இது அரசியலுக்கு அப்பால் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செய்யவேண்டிய பணி.நீங்களே தலைமைத்துவம் கொடுக்க தகுதியானவர்.ஆனால் நாங்கள் முடிந்தவரையில் பாடுபட்டுக்கொண்டே உள்ளோம்.ஆனால் நீங்கள் கண்டுகொள்ளுவதே இல்லை.

*மண்முனைப்பற்று பிரதேச செயலக ஆரையம்பதியில் உள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் 

மேற்படி விடயம் தொடர்பில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் காணி உரிமையில் தமிழ் அதிகாரிகளினால்  நசுக்கப்படுகின்றார்கள்.நமது பல சகோதரர்களுக்கு எதிராக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஆரையம்பதி பிரதேச செயலகம் வழக்குகளை இட்டுள்ளது.பாலமுனை அல் ராஷித் வீட்டுத்திட்டம், சிகரம் காணிப்பிரச்சினை போன்றவைகளை நமக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கியுள்ளது தங்களுக்கே தெரியும்.இவ்விடயம் தொடர்பில் நீங்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

மேற்படி சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் தொடர்பில் எனக்குள்ள அரசியல் தொடர்புகளுக்குள் தொடராக பணியாற்றி வருகின்றேன்.கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் ஏனைய காணி விடயங்கள் தொடர்பில் பல காத்திரமான நடவடிக்கைகளை தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஊடாக மேற்கொண்டு வருகின்றேன்.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் முழுமையான செயற்பாட்டிற்கு வழிவகுக்குமாறும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண காணி விடயங்களை தீர்ப்பதன் அவசியம் தொடர்பில் இறுதியாக செயற்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முன் தோன்றி தலைவர் ஹக்கீம் சாட்சியமளித்தார்.இதில் காத்தான்குடி சம்மேளனம் மற்றும் கல்குடா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தற்போது இவ்விடயம் முடியும் தருவாயில் உள்ளதாக அறிகின்றேன்.

ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் நமது முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 06/07/2018 அன்று பாராளுமன்றத்தில் விஷேட கூட்டமொன்றை கௌரவ தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க,காணி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைக்கொண்டு இவ்விடயம் தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.மேற்படி கூட்டத்தில் காத்தான்குடி சம்மேளனமும் கலந்துகொண்டது.

பெருமதிப்பிற்குரிய நண்பரே,நமது காணிப்பிரச்சினைகள் நியாயமானவை.தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள பெருந்தேசிய வாதமும் நமது நியாயமான காணிப்பங்கீட்டை தர மறுக்கின்றன. அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களிலும் நமது முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தாங்கள் அறியாததல்ல.

மிகக்கவனமாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அதிமேதகு ஜனாதிபதியின் கிழக்கு மாகாணம் தொடர்பிலான உச்ச அதிகாரங்கள் தற்போது  உங்கள் கரங்களில்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ற்றின் பெர்னாண்டோவிடம்  கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு முன்னாள் முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் முன்பாக வைத்து ஏறாவூரில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தேன்.தொடர்ந்து உங்களுக்கு முன்னாள் இருந்த ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களிடமும் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஊடாகவும் முன்வைத்தேன்.இது காத்தான்குடி சம்மேளனத்துக்கும் தெரியும்.மேதகு ஜனாதிபதியின் வட  கிழக்கு மாகாணம் தொடர்பிலான விஷேட செயலணிக்கூட்டங்களில்  தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் தொடர்ந்தும் முன்வைத்திருந்தனர். அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை   நியமிக்கின்ரமைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக முஸ்லிம் மக்கள் தொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை சம்பந்தமான விஷேட அறிக்கையை தயாரித்து எமது கட்சி தலைமைக்கும் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் வழங்கியிருந்தேன்.

நீங்கள் மாகாண ஆளுநர் என்ற வகையில் அனைத்து மக்களின் தலைவர்.உங்கள் செயற்பாடுகள் நமது முஸ்லிம் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதுடன் கிழக்கின் இனங்களுக்கிடையிலான சக வாழ்வையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் 
U.L.M.N.முபீன் 
முன்னாள் காத்தான்குடி நகரசபைத் தலைவர்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.