A+ A-

தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி.
எப்போது தேர்தல் வரும் என்று முழுநாடும் எதிர்பார்த்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எந்த தேர்தல் முதலில் நடாத்தப்படும் என்று அனேகமான ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் இரண்டு பாரிய கட்சிகளிடையேயும் வெவ்வேறான விருப்பங்கள் முளைவிட்டு இப்போது துளிர்க்கும் அளவுக்கு வந்துவிட்டது.ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை வேண்டி நிற்கின்ற அதேவேளை ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சியோ முதலில் மாகாண சபைத்தேர்தலே நடாத்தப்பட வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டுகிறது. எத்தேர்தல் வந்தாலும் நாங்கள் தயார் என்று நிற்கின்றது மற்றுமொரு தரப்பான மஹிந்தயின் தரப்பு.ஆக இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பது உறுதி.

முழு நாடும் எதிர்பார்ப்பது போல் இப்போது முழு கல்குடா முஸ்லிம்களும் ஒரு தேர்தல் வரவேண்டும் என்பதில் அதிகமான விருப்பம் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதாவது பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முதல் மாகாண சபை தேர்தல் வரும் என்ற நம்பிக்கையில் கல்குடாவில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களும் தங்கள் கட்சியின் ஊடாகவே மாகாண சபை உறுப்பினர் வரவேண்டும் என்று இப்போதிருந்தே தங்களது வெற்றிக்காக வேளைத்திட்டங்களை தயார்படுத்தி வழிநடாத்திச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த மாகாண சபைத் தேர்தலில் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் பலப்பரிட்சை நடாத்த விருக்கின்றன.

இப்போது விடயத்திற்கு வருவோம்.
ஒரு வேளை எதிர்வரும் மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட்டால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி வேட்பாளர் யாராக இருக்கும் என்பது இன்று வரை மூடப்பட்ட மர்மமாகவே இருக்கின்றது. ஏனெனில் அதிகமான பிரபலங்கள் தாம்தான் இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக வரவேண்டும் என்பதில் தங்களது ஆதரவாளர்களை தூண்டி விட்டு பரப்புரைகளை சமுகங்களுக்கிடையே, சமுக வலைத்தளங்கள் ஊடாக பரப்பி வருகின்றனர். இங்கே கேள்வி என்னவென்றால் இப்படி பரப்புரைகளை பரப்பி விடுபவர்களால் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியுமா என்பதே!
கல்குடா முஸ்லிம் சமுகம் எப்போதும் சிந்தித்து வாக்களிக்கின்ற சமுகம். 

அது.. கண்டவர், கேட்பவர் எல்லோருக்கும் வாக்கினை அளித்தது கிடையாது. தாம் யாருக்கு வாக்களிக்கின்றோம் என்பதை நன்கு சிந்தித்து உணர்ந்த பின்பே தமது வாக்கினை அளிக்கும் பழக்கமுடையது. அவ்வாறுதான் இந்த முறை நடைபெற இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலையும் அத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட இருப்பவர்களையும் இப்போதிருந்தே நாடிபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. 

குறிப்பாக அண்மைக்காலங்களாக கல்குடா அரசியலிலே தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் கணக்கறிஞர் ரியாழ் அவர்கள் வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார்களா? என்று இப்போதே அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் அரசியலிலே இது வரை காலமும் எந்த ஒரு கறுப்புப் புள்ளியும் இல்லாமல் தான் சார்ந்த சமுகத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையிலும் தன்னாலான முயற்சிகளை மேற் கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து மக்கள் மத்தியிலே குறுகிய காலத்தில் இடம்பிடித்திருக்கின்றார்.

தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று நினைப்பவர்களுக்கு மத்தியிலே ரியாழ் அவர்கள் ஒரு வித்தியாசமான சிந்தனை மிக்கவர். தான் சார்ந்த சமுகத்தின் மீது அக்கறை கொண்டு ஏதோ ஒன்றை இந்த சமுகத்திற்காக செய்ய நினைப்பவர். 

அதற்காக தனது பொருளாதாரத்தைக் கூட செலவு செய்பவர்.அரசியலிலே உழைத்துக் கொழுத்து அதன் பின் சேவை செய்பவர்களுக்கு மத்தியிலே அரசியலிலே இது வரை எதையுமே உழைக்காமல் தனது சொந்த உழைப்பையே சமுகத்திற்காக செலவளிக்க தயாரானவர். இதனால்தான் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூட இவரை தவறான முறையில் விமர்சிப்பதில்லை.எனவேதான் இவ்வாரானவர்களே மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என்பது அனேகமானவர்களின் எதிர்பார்ப்பு.

இப்போது சந்தேகம்..

இப்படிப்பட்ட நல்லுள்ளங் கொண்ட,ஊழலுக்கு அப்பாற்பட்டவரான சகோதரர் ரியாழ் அவர்கள்
வருகின்ற மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடுவாரா?
இந்தக் கேள்விதான் இப்போது எல்லோரையும் தொற்றிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேளை இவர் சமுக நலன் கருதி போட்டியிட்டால் கல்குடா முஸ்லிம்களின் குறிப்பாக நடுநிலமையாக சிந்திக்கின்ற அனேகரின் வாக்குகளை தம்பக்கம் சாய்க்க முடியும்.

 அதே போல் அண்மைக்காலங்களாக கல்குடாவிலே மறுமலர்ச்சி கண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் வாக்கினையும் பெற்று மிக இலகுவான முறையில் மாகாண சபை ஆசனத்தை உறுதிப்படுத்த முடியும். இவ்வெற்றியானது கல்குடாவில் மாத்திரமின்றி கட்சியின் உயர்மட்டத்திலும் பேசுபொருளாக மாறி தனது அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையைத் தோற்றுவிக்கும். அது அவரின் எதிர்கால தேசிய அரசியலில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதே போன்று இத்தேர்தலில் போட்டியிட இஷ்டமில்லை என்று சகோதரர் ரியாழ் அவர்கள் ஒரு வேளை ஒதுங்கிக் கொண்டால் கட்சியானது யாரையாவது ஒருவரை களமிறக்கியே தீரும் அதில் சந்தேகமில்லை. அனால் அவர் வெற்றி பெற பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். ஒரு வேளை மக்கள் கூட அவரை நிராகரிக்க முடியும். ஏனெனில் கட்சியானது காலத்திற்கு காலம் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு புதியவரை களமிறக்கி பின் அவரின் தோல்வியோடு அவரையும் கைவிட்டுச் சென்றுவிடுகின்ற நிலை தொடர்ந்தே செல்கின்றது என்ற காரணத்தைக் கூறி இதற்கு முற்றுப் புள்ளி வைக்க மக்கள் முற்படலாம்.

அத்தோடு சகோதரர் ரியாழ் அவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவரே உடைத்தெரிகின்ற செயலாக இதைப்பார்ப்பர். பின் அரசியலிலே மீண்டும் கோலோச்ச இடமில்லாமல் போகலாம். மக்களுக்கும் தொடர் தோல்வியைக் கண்டு கட்சி மீது வெறுப்பு ஏற்படலாம்.அதே போன்று தோல்வி அடைந்த வேட்பாளர் கல்குடாத் தொகுதிக்கான அமைப்பாளர் பதவியையும் மற்றுமொரு அதிகாரத்தையும் கட்சித்தலைமையிடம் கோரிநிற்க வாய்ப்பிருக்கிறது. இது இந்த அரசியலில் யாதார்த்தம்.

ஆனால் நாம் நினைப்பது போன்று அரசியலிலும்,மக்கள் மனங்களிலும் தனக்கென தனியான இடத்தைப் பிடித்து விட்டு அதை அவ்வளவு விரைவாக இழப்பதற்கு சகோதரர் ரியாழ் ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது. வெற்றி தொடப் போகும் இத்தருனத்தில் இச்சந்தர்ப்பத்தை
 யாராலும் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. பொருத்திருந்து பார்ப்போம் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று.
காலம் பதில் சொல்லும்.