A+ A-

ஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்








பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும். அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் கல்விப்பீடம் ஒன்று அட்டாளைச்சேனையில் அமைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு மற்றும் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (09) அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது, அதில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

ஆரம்பத்திலிருந்த வித்தியோத, வித்தியலங்கார போன்ற பெளத்த பிரிவேனாக்கள்தான் இன்று ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன. அதேபோன்று அரபுக் கலாசலைகளும் முன்னேறுவதற்கு கல்விசார் நடவடிக்கைகளில் காத்திரமான மாற்றங்களை கொண்டுவரவேண்டும். 

இலங்கையிலுள்ள 200க்கு மேற்பட்ட மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பழைமைவாய்ந்த, உயர்தரம் கொண்ட பல கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கற்கின்ற மாணவர்கள் கலாநிதி பட்டங்களை பெறுகின்ற அளவுக்கு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

பேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்துவருகின்றன. இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடம் ஒன்றை அட்டாளைச்சேனையில் நிறுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அட்டாளைச்சேனையில் ஆசிரியர் கலாசாலையின் கட்டிடத்தில் இந்த கல்விப்பீடம் அமைப்பெறவுள்ளது.

நாட்டில் அரச பல்கலைக்கழங்கள் 15 இருக்கின்றன. அத்துடன் பட்டப்படிப்பை மேற்கொள்ளக்கூடிய அனுமதிபெற்ற 20 கற்கை நிலையங்களும் உள்ளன. நீண்டகால பாரம்பரியம் கொண்ட அரபுக் கலாசாலைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டதாரி கற்கை நெறிகளை வழங்கி வருகின்றன. அவற்றை பட்டப்படிப்புக்கான நிறுவனங்களாக மாற்றியமைக்க முடியும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள், அரபுபீடம் அமைக்கப்பட்டு அதற்கு வருடாடந்தம் 450 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கற்கைகள், அரபுபீட துறையில் 100 மாணவர்களும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் அரபுமொழி அலகில் வருடாந்தம் 25 மாணவர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.

இத்துறைகளின் கற்கின்ற மாணவர்களை தொழில் தேர்ச்சியுள்ளவரர்களாக வெளியேற்றுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சில உட்புகுத்தல்களை செய்துவருகிறது. இதனடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் இஸ்லாமிய நிதி மற்றும் வங்கியில், இஸ்லாமிய சட்டம் மற்றும் பொதுச்சட்டம், மொழிபெயர்ப்பு துறை ஆகிய கற்கைநெறிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. பேராதனை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய உல்லாச பயணத்துறை எனும் கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கற்கைகள், அரபு கற்கைநெறியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் நடுநிலைப் பாடங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், தொழில்நுட்பம், பொருளியில், கணக்கியல் போன்றவற்றையும் கற்பதற்கு வாயப்பளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் பட்டதாரி மாணவர்களின் தரம் மேம்படுத்தப்படும் என்றார்.

கல்லூரி அதிபர் அஷ்ரப் ஷர்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், குவைத் நாட்டு தூதுவர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்