A+ A-

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு கட்டட நிர்மாணத்துக்கு வரவு-செலவுத் திட்டத்தின் பின் நிதி ஒதுக்கீடு பைசல் காசிம் உறுதி


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு வரவு-செலவு திட்டம் நிறைவேறியதும் நிதி ஒதுக்கப்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

அந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கதிரியிக்கப் பிரிவையும் மேம்பாலத்தையும் நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

வைத்தியத்துறை இன்று உலகில் முன்னேற்றமடைந்துள்ளபோதிலும்,எமது நாட்டில் எல்லா வைத்தியசாலைகளிலும் குறைபாடுகளும் பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன.அதிலும்,அவசர சத்திர சத்திர சிகிச்சை பிரிவு இல்லாமை மிகவும் சிக்கலான விடயமாகும்.

எமது நாட்டில் இரண்டாயிரம் வைத்திய அசோகர்கள் உள்ளார்கள்.அவர்களுள் 12 பேர் கடந்த வாரம் வேலையை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டு சென்றுவிட்டனர்.பல வைத்திய ஆலோசகர்கள் தூர இடங்களுக்குச் சென்று பணிபுரிய விரும்புவதில்லை.அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு வசதிகள் இருக்கின்றனவா என்றே பார்க்கின்றனர்.

மக்களின் வரிப் பணத்தில் படித்துவிட்டு மக்களுக்கு சேவையாற்ற மறுப்பது நியாயமில்லை.பணக்காரர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவார்கள்.ஏழைகளால் முடியாது.இது பெரும் அநீதி.இந்த நிலை மாறவேண்டும்.

முடியுமானவரை சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்றே நான் ஒடித் திரிகிறேன்.செய்ய முடியும் என்றால் மாத்திரமே நான் அதில் இறங்குவேன்.பெயருக்கு கல்லை வைத்துவிட்டுப் போகிற ஆள் நான் இல்லை.அடிக்கல் நாட்டினால் அந்த வேலை பூரணப்படுத்தப்படும் என்றே அர்த்தம்.

இந்த கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.அவற்றுள் சத்திர சிகிச்சை பிரிவுகள்[ Theatre complex ] ஒன்றாகும்.வரவு-செலவுத் திட்டம் முடிந்ததும் அதற்கான நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல்,clinical complex நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கவுள்ளேன்.இந்த வருடத்துக்குள் இந்தக் கட்டடத்தை நிர்மாணித்து முடிக்க வேண்டும் என்பதே எனது திட்டம்.ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருக்கும்வரை எம்மால் சுகாதார துறைக்கு வேண்டிய ஒன்றை செய்துகொள்ள முடியும்.அடுத்த முறையும் அவர் சுகாதார அமைச்சராக இருந்தால் சுகாதாரத் துறை எங்கோ சென்றுவிடும்.எம்மாலும் எமது பகுதிகளை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்.

புதிதாக வருகின்ற நவீன வைத்திய கருவிகள் அனைத்தையும் அவர் வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக் கொடுக்கின்றார்.கடந்த அரசில் புற்று நோயாளி ஒருவருக்கு  மருந்துகள் 15 லட்சம் ரூபாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.ஆனால்,ராஜித சேனாரத்தன அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி அவர் உயிர் பிழைக்கும் வரை அல்லது மரணிக்கும் வரை மருந்துகளை வழங்கி வருகின்றார்.சிலருக்கு 100 மில்லியன் ரூபா வரையிலும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.-என்றார்.

[ஊடகப் பிரிவு]  
 
Attachment