A+ A-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு பைசல் காஸிமின் ஏற்பாடு



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் வேண்டுகோளுக்கு அமைய சுகாதார அமைச்சு 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிதி  6 கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் நவீன வைத்திய கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடையே நேற்று [07.05.2019] சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

பைசல் காசிமால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி தொர்பான வேலைத் திட்டம் இதன்போது கலந்துரையாடப்பட்டு மேற்படி தொகையை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ஒதுக்கப்படும் இந்த நிதியைக்கொண்டு 6 லட்சம் சதுர அடிகள் கொண்ட 6 மாடிக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதோடு அவற்றுக்கான நவீன வைத்திய கருவிகளும் வழங்கப்படும்.

வைத்திய கட்டடங்கள்,சத்திர சிகிச்சை பிரிவு,குழந்தை மற்றும் மகப்பேற்றுப் பிரிவு,நரம்பியல் பிரிவு மற்றும் புற்றுநோய் பிரிவு போன்றவை அவற்றுள் அடங்கும்.

இந்த வேலைத் திட்டம் பூரணப்படுத்தப்பட்ட பின் கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாண மக்கள் எவரும் கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களுக்குச் செல்லாமல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே எல்லாவகையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.

மேற்படி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கடந்த வருடம் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பைசல் பைசல் காசிம் 2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் பின் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த வாக்குறுதிக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



[ஊடகப் பிரிவு]