A+ A-

பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கரிசனை





பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான விஷேட கொடுப்பனவுகள் மற்றும் சலுகைககளை உரிய விதத்தில் பெற்றுக்கொடுக்க தேவையான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை உயர்கல்வி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (28) சந்தித்து அவர்களின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, மேலதிகச் செயலாளர் அத்தபத்து அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான தொடர்பாடல் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், ஓய்வு பெறும் போது சலுகை அடிப்படையில் வழங்கப்படும் வாகனக் கொள்வனவு அனுமதிப்பத்திரம் மேலும், தற்போது ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அக்ரஹார காப்புறுதித் திட்டமொன்றை உருவாக்குதல் மற்றும் வீடமைப்புக் கடன் தொகையை இரண்டு மில்லியன் ரூபாவிலிருந்து மேலும் அதிகரிக்கச் செய்தல் முதலான கோரிக்கைகள் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளால் இதன்போது முன்வைக்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகங்களின் முன்னேற்றங்கள் மற்றும் சீரமைப்புகள் தொடர்பான பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. அதாவது கா.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் இடைக்காலத்தைக் குறைத்தல், பல்கலைக்கழக நிர்வாக சேவையினரை உள்வாரி சேவையாக பிரகடனப்படுத்துதல், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான உத்தேச சட்டமூலம் தொடர்பான விடயங்கள், பல்கலைக்கழகங்களில் கடமையாற்றுபவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி தொடர்பான விடயங்கள் மேலும், பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சம்பளம் தொடர்பான சுற்று நிருபங்களை அமுல் நடத்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், மட்டக்களப்பு பல்கலைக்கழக விவகாரம், தற்காலிக உதவி விரிவுரையாளர்களுக்கான சம்பளத்திட்டம் என்பன தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.