A+ A-

மனிதம் கொன்ற இனவாதம்: நேரடி ரிப்போட்
• களத்திலிருந்து பிறவ்ஸ்

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு பெளத்த பீடங்களோ, அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இறுக்கமானதொரு நிலைப்பாட்டை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஜனநாயக நாடு என்ற ரீதியில், ஒரு இனத்தின் மீது நடாத்தப்படும் இப்படியான தொடர் தாக்குதல்கள் அனுமதிக்க முடியாது.

2014ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டம், கடந்த வருடம் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்கள், தற்போது குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் என முஸ்லிம்கள் மீதான பேரினவாத காடையர் கும்பல்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. இந்த தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் பாரிய பொருளாதார அழிவுகளையும் உயிர்ச்சேதங்களையும் சந்தித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் இஸ்லாத்தின் பெயரினால் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு போருதோட்டையில் முஸ்லிம்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. அதன்பின், பேஸ்புக் பின்னூட்டம் ஒன்றை காரணம் காட்டி சிலாபம் நகரில் தோற்றுவிக்கப்பட்ட பதற்றநிலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன்பின்னர் குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிப்பொல, மடிகே அனுக்கண, நிக்கவரெட்டிய, கொட்டம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, பண்டுவஸ்நுவர, கம்மலிய, வீதியவெலி, பூவல்ல, எஹட்டுமுல்ல, அசனாகொடுவ, கினியம, தோரகொடுவ, கல்ஹினியாகடுவ, புத்தளம் மாவட்டத்தில் கொட்டராமுல்ல, தும்மோதர, புஜ்ஜம்பொல, கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஊரங்குச் சட்டம் அமுலிலிருந்த நேரத்திலேயே முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டன. இதன்போது அப்பாவி குடும்பஸ்தர் ஒருவரின் உயிரும் அநியாயமாக பறிக்கப்பட்டது. பல இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தாக்குதல்கள் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதுவொன்றும் முதற்தடவையல்ல.

மு.கா. அனர்த்த நிவாரண செயலணி

குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.ஏ. நியாஸ் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனர்த்த நிவாரண செயலணி களத்தில் இறங்கியது.

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த செயலணி பல குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விபரங்களை ஒன்றுதிரட்டியது. இந்த விபரங்கள் கணனிமயப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த தகவல்திரட்டின் மூலம் இழப்பீடுகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு சரியான தகவல்களை வழங்குவதுடன், மக்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக உரிய நஷ்டயீடுகளை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் வீடுகளை இழந்த வறிய குடும்பங்களுக்கு விசேட ஏற்பாடுகள் மூலம் உதவிகளை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்தொடர்ந்த சிங்கள இளைஞர்கள்

பாதிக்கப்பட்ட இடங்களை மதிப்பீடு செய்வதற்காகச் சென்ற எங்களை பல இடங்களில் சிங்கள இளைஞர்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். நாங்கள் ஏன் வருகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அவதானித்துக் கொண்டிருந்தனர். ஏதோ நாங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் போன்றே, அவர்கள் எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் மூலம் நாங்கள் செல்லும் இடங்களுக்கு வந்து, எங்களை நோட்டமிட்டனர். இன்னும் சில இடங்களில் எங்களுக்கு வழிவிடாமல் முறைத்தபடி நின்றுகொண்டிருந்தனர். மேலும் சிலர் எங்களையும், எங்களது வாகனத்தையும் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் வந்த வேலைகளை செய்தோம்.

இவர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்து, இவர்கள் எப்படியானவர்கள், யார் இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. காரணமே இல்லாமல் அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு, இவர்களது மனங்களிலுள்ள முஸ்லிம்கள் விரோத மனப்பாங்கே காரணம் என்பதை யாரும் சொல்லாமலே உணர்ந்துகொண்டோம்.

இந்த விஜயங்களின்போது, ஊடகங்களுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் எம்மிடம் தெரிவித்த கருத்துகளையும் நேரில் கண்ட சம்பவங்களையும் தொகுத்து "விடிவெள்ளி" வாசகர்களுக்காக தருகிறோம்.

அடைக்கலம் தந்துவிட்டு தாக்கினார்கள்

நிக்கவரெட்டிய பகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசலுக்குச் சென்றபோது, எங்களைக் கண்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அங்கு ஒன்றுகூடினார்கள். பாதிக்கப்பட்ட எங்களது வீடுகளுக்கு நீங்கள் வரவேண்டாம். அந்த இடங்களில் சிலர் எப்படியாவது பிரச்சினையே ஏற்படுத்துவதற்கு காத்திருக்கிறார்கள். எனவே, எங்களது விபரங்களை இங்கேயே வைத்து தருகிறோம் என்று கூறினார்கள்.

"சில நாட்களுக்கு முன்னர் மொட்டு கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஒருவரின் பெயரைச் சொல்லி அவரின் கடையை உடைக்கவேண்டும் என்று என்னிடம் வந்து சொன்னார். அப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று அவரிடம் கூறினேன். ஆனால், அவர் சொன்னதுபோல அந்த கடை கலவரத்தின்போது காடையர்களினால் உடைக்கப்பட்டிருந்தது" என்று அப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறினார்.

பின்னர் நாங்கள் பிரதான வீதியிலிருந்து கிராமப் பகுதிக்குள் நுழைந்தோம். அங்கு பல வீடுகள் தாக்கப்பட்டிருந்தன. தங்களுடன் பழக்கமுள்ளவர்களும் நன்கு தெரிந்தவர்களுளே தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். அதனால் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாமல், தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகள் குறித்து எம்மிடம் மனம்திறந்தனர்.

"காடையர் கும்பல்கள் எங்களது வீடுகளுக்கு வரும்போது, அயலிலுள்ள பெரும்பான்மையின குடும்பங்கள், எங்களை அவர்களது வீடுகளுக்குள் வருமாறு அழைப்பு விடுத்தன. அவர்களது வீடுகளில் எங்களை பாதுகாப்பாக இருக்குமாறு கூறிவிட்டு, பின் கதவால் சென்று வந்திருந்த காடையர் கும்பல்களுடன் சேர்ந்து யாருமில்லாத எங்களது வீட்டை அடித்து நொறுக்கினார்கள்" என்று கூறினார் பிரதேசவாசி ஒருவர்.

"எங்களுடன் நன்றாகப் பழகிய அயலவர்கள் கூட, பிரச்சினை நடக்கும்போது அவர்களின் வீடுகளுக்கு வரவேண்டாம் என்று கூறினார்கள். உயிரைப் போக்காமல் வீடுகளுக்கு மட்டும் அடியுங்கள் என்று வந்திருந்தவர்களுக்கு உத்தரவிட்டனர். எப்படித்தான் பழகினாலும் ஈமான் இல்லாதவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது" என்று மனம்நொந்துகொண்டார் குடும்ப பெண்மணி ஒருவர்.

18 – 25 வயதுக்குட்பட்ட இளைஞர் குழுக்களே தவறாக வழிநடாத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள். எங்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் இங்குதான் வாழவேண்டியுள்ளது. அதனால், முடியுமானளவு பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறோம் என்று பலரும் தெரிவித்தனர்.

நிவாரணத்தை மோப்பம்விடும் இராணுவம்

நிக்கவரெட்டிய, மில்லகொட பிரதேசத்திலுள்ள பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு செல்லும்போது, நாங்கள் இருந்த வீட்டுக்கு திடீரென இராணுவத்தினர் வந்து குவிந்தனர். எங்களை விசாரித்துவிட்டு, அந்த வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். ஏதும் ஆயுதங்கள் இருப்பதாக வதந்தி போயிருக்குமோ என்று யோசித்தோம். ஆனால் நடந்ததோ வேறு.

குறித்த பிரதேசத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் தனவந்தர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அவற்றை பங்கிடுவதை மாற்று சமூகம் வேறுவகையில் பார்க்கும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கி அங்கிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்கள். அயலிலுள்ள யாரோ ஒருவர் இதுகுறித்து இராணுவத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார். அதனால்தான் இராணுவத்தினர் வந்து வீட்டை சோதனையிட்டனர்.

இதுதவிர, இன்னும் சில பள்ளிவாசல்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாம் வேலைசெய்து சீவியம் நடத்துவோருக்கு இந்த நிவாரணப் பொருட்கள் ஆறுதலாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

வசமாக மாட்டிய புறா திருடன்

நிக்கவரெட்டிய நகரில் விகாரைக்கு அருகில் சிறிய பெட்டிக் கடையொன்றில் சோளம் அவித்து விற்றுவருபவர் ஹரீஷா பேகம். இவரது கணவர் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஒருவர். இருவரும் சேர்ந்தே இந்த சோளம் கடையை நடாத்தி வந்துள்ளனர். ஜீவனோபாயத்துக்காக இருந்த ஒரேயொரு கடையும் தற்போது உடைக்கப்பட்டுவிட்டதாக அவர் கவலைப்பட்டார்.

"எனது கடையில் அதிகளவான சிங்களவர்கள் வந்து சோளம் சாப்பிடுவதுடன், தண்ணீரும் குடித்துவிட்டுச் செல்வார்கள். விகாரைக்கு அருகில் கடை இருந்தாலும் நான் அபாயா அணிந்துகொண்டுதான் வியாபாரம் செய்துவந்தேன். இப்போது எனது கடையை உடைத்துவிட்டனர். ஆனால், சிங்கள சகோதரர்கள் பலரும் இதற்காக கவலைப்பட்டனர்" என்றார் ஹரீஷா பேகம்.

அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் ஒரு சோடி புறா காணாமல்போய்விட்டது. நன்கு பழக்கமுடைய சிங்கள நண்பர் ஒருவரிடம், இங்கிருந்து எடுத்துச்சென்ற புறாக்களை தாருங்கள் என்று நகைச்சுவைக்காக கேட்டுள்ளார். எதுவும் பேசாமல் வீட்டுக்குச் சென்ற அவர், தனது மகனிடம் அந்தப் புறாக்களை கொடுத்து அனுப்பியுள்ளார். அதை படம்பிடித்திருந்ததை காண்பித்து, “சும்மா சொன்ன விடயம்தான் உண்மையில் நடந்திருக்கிறது" என்றார் ஹரீஷா பேகம்.

சிங்களக் கிராமங்களுக்கே பாதுகாப்பு

மடிகே அனுக்கண பிரதேசத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.எம். றிஸ்வி மெளலவி கூறியதாவது;

"பழிவாங்கக்கூடிய நிலையில் நாங்கள் அவர்களுடன் பழகவுமில்லை, அவர்கள் எங்களுடன் பழகவுமில்லை. அதனால் எங்களது பள்ளிவாசல் தாக்கப்படாது என்று நினைத்திருந்தோம். ஆனால், ஒரு லொறி, ஒரு வான், ஒரு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் 200 பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் வந்து பள்ளிவாசலை தாக்கினார்கள்.

பள்ளிவாசல் சொத்துக்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். புனித அல்குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தினார்கள். அத்துடன் குர்ஆன் பிரதிகள், வுழூ செய்யும் தடாகம் என்பவற்றுக்குள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தார்கள். பள்ளிவாசலுக்கு அருகில் நின்ற எங்களையும் தூசண வார்த்தைகளால் திட்டி அடிப்பதற்கு விரட்டினார்கள். அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வீட்டைவிட்டு அயலிலுள்ள காடு, வயல்களுக்குள் ஓடினார்கள்.

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் இந்த தாக்குதலை செய்தார்கள். இதில் அதிகமானவர்கள் எங்களது பிரதேசங்களை அண்மித்து வாழ்பவர்கள். பழிவாங்கும் எண்ணம்கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் நோக்கங்கள் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். நாங்கள் விட்டுச் செல்லும் எமது இளம் தலைமுறையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதுதான் இன்று கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த பள்ளிவாசலுக்கு மாத்திரம் 20 மில்லியன் ரூபா சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் விசேட அமல்களை நடாத்துவதற்கு எங்களுக்கு பயமாக இருக்கின்றது. பயத்தின் காரணமாக உரிய நேரத்துக்கு தொழமுடிவதில்லை, நோன்பு நோற்பதற்கு சாப்பாடு வசதிகள் இல்லை. இதனால் நோன்பின் மாண்பை இழந்துவிடுவோமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர்ந்து அவர்களை தாக்கவுள்ளதாக இப்போது பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட கிராமங்களை விடுத்து, பெரும்பான்மை சமூகத்தின் கிராமங்களுக்கே பாதுகாப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. தாக்குதல் நடந்த பின்னரும் முஸ்லிம் கிராமங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

அன்றாட கூலித்தொழில் செய்பவர்களை பெரும்பான்மை சமூகத்தினர் அடித்து விரட்டுகிறார்கள். சலாம் கூறினாலோ அல்லது முஸ்லிம் கடை என்று தெரிந்தால் வாங்கிய சாமான்களை வைத்துவிட்டுச் செல்கின்றனர். மடிகே அனுக்கண பிரதேசத்தில் வாழும் 350 குடும்பங்களும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.

காடையர்களை எதிர்த்துநின்ற மூதாட்டி

மடிகே அனுக்கண கிராமத்தில் தாக்குதல் நடைபெறும்போது, ருக்கையா பீபி என்ற மூதாட்டி, "உயிர் ஒரு தடவைதான் போகும்" என்று கூறிவிட்டு காடையர்களை எதிர்த்து குரல்கொடுத்த பெண்மணியாக பேசப்பட்டார். பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று நாங்கள் பேச்சுக் கொடுத்தோம்.

"தாக்குதல் நடைபெறும்போது நான் வீட்டுக்குள்தான் இருந்தேன். ஆனால், பிள்ளைகள் என்னை வயலுக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சின்னச் சின்னப் பிள்ளைகள்தான் வந்து அடித்தார்கள். எனது பிள்ளைகளின் திருமண வீடுகளில் பந்தல் நாட்டியவர்களும் எங்களின் வீடுகளுக்கு அடித்தார்கள். இப்படிப் பழகிவிட்டு அடிக்க அவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ" என்று மனம் நொந்துகொண்டார்.

பிள்ளையின் வாயைப் பொத்தினோம்

மடிகே அனுக்கண பிரதேசத்தின் உட்பகுதிக்குள் சென்றபோது வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்று எரிந்து சாம்பலாக காட்சியளித்தது. அதன் உரிமையாளரான என்.எம். சவாஹிரை சந்தித்து, என்ன நடந்ததென்று கேட்டோம்.

"கொழும்பில் துணிகளை வாங்கிவந்து, அதை இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறேன். எனது வானுடன் சேர்த்து, அதற்குள் வைத்திருந்த 25 இலட்சம் ரூபா பெறுமதியான துணிகளையும் காடையர்கள் தீயிட்டுக் கொழுத்திவிட்டனர். இப்போது வானும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வானை எரிக்கக்கூடாது என்றும் இல்லை எரிக்கவேண்டும் வந்தவர்களுக்குள் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் வானை எரித்துவிட்டனர். வீட்டையும் தாக்குவதற்கு முற்பட்டபோது, அவர்களில் சிலர் அதனை தடுத்துள்ளார்கள். எனது மனைவி, குழந்தைகள், தாய் மிகுந்த பயத்துடன் வீட்டுக்குள் இருந்திருந்தனர். பிள்ளை சத்தம் போட்டுவிடும் என்ற பயத்தில் அதன் வாயைப் பொத்திக்கொண்டு வைத்திருந்தனர்" என்றார்.

மீன்தொட்டிக்கு நஷ்டயீடு தாருங்கள்

"சுமார் 20 பேரளவில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் மீன்தொட்டியை உடைத்துவிட்டு, வீட்டையும் உடைத்தார்கள். அவர்களை எங்களை துரத்திக்கொண்டு வந்தனர். நாங்கள் பயத்தில் காட்டுக்குள் ஓடினோம். அப்போது எங்களது வீட்டில் மேசன் வேலை செய்த ஒருவரும் வந்திருந்தார்" என்றார் மடிகே அனுக்கண பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரான முஹம்மட் சம்ரின்.

நாங்கள் இழப்பீடு தொடர்பான படிவத்தை நிரப்பிக்கொண்டிருக்கும்போது, "உம்மா மீன்தொட்டியையும் சொல்லுங்கள்" என்றான் அந்த மாணவன். அதற்கு அவரது தயார் சிரித்துக்கொண்டே, "பாடசாலைக்குச் செல்லும்போது செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமித்துதான் அவர் இந்த மீன்தொட்டியை வாங்கினார். அதை உடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது. அதுதான் வருகின்ற எல்லோரிடமும் மீன்தொட்டிக்கு நஷ்டயீடு கேட்கிறார்" என்று விளக்கமளித்தார்.

தலைகால் புரியாமல் ஒரு இனத்தின் மீது பாரபட்சமின்றி காட்டுகின்ற இனவாதம், உளவியல் ரீதியில் பிஞ்சு நெஞ்சங்களையும் பாதித்துள்ளது. அந்த மாணவனுக்கு மீன்தொட்டி ஒன்றை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், சூழலும் நேரமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை என்பதுதான் எங்களுக்கு மிகப்பெரிய கவலை.

ஆத்திரப்பட்ட இளைஞர்களை ஆசுவாசப்படுத்தினோம்

பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய பண்டுவஸ்நுவர, நிக்கப்பிட்டிய பள்ளிவாசல் யுத்தம் நடந்து ஓய்ந்த இடம்போல காட்சியளித்தது. இமாமின் அறை சாம்பல் மண்டலமாக கிடந்தது. அல்குர்ஆன் பிரதிகள் எரித்து வீசட்டப்பட்டிருந்தன. தற்காலிகமாக மேல் மாடியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளிவாசலின் இமாம் சாதிக் மெளலவியைச் சந்தித்து அங்கு நடந்த விடயங்கள் குறித்து கேட்டோம்.

“அன்றாடம் கூலித்தொழில் செய்கின்ற, வறிய மக்கள் செறிந்துவாழும் இப்பிரதேசத்தில் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேகரித்து இந்தப் பள்ளிவாசலை கட்டினோம். இப்போது பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்பட்டு, அல்லாஹ்வின் கலாம் எரிக்கப்பட்டுள்ளன. நான் சுமார் எட்டு வருடங்களாக இங்கு இமாமாக கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்தப் பள்ளிவாசலின் நிலைமையை பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது.

எமது இளைஞர்கள் ஆத்திரப்பட்டார்கள், ஆவேசப்பட்டார்கள். இது புனித ரமழான் பொறுமையை கடைப்பிடிக்கமாறு ஏவுகின்ற மாதம். பொறுமையுடன் இருக்குமாறு எங்களது இளைஞர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தினோம். இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கீழ்த்தரமான செயலை செய்தார்கள். நாங்கள் அந்நிய சமூகத்தினருடன் சமாதானமாக வாழவேண்டும் என்பதற்காக அவர்களை காட்டிக்கொடுக்கவில்லை” என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மதம் மாறியதால் மரண பயத்தில் இருந்தோம்

நிக்கப்பிட்டிய பள்ளிவாசலுக்கு முன்னால் இருப்பதுதான் லுக்மானின் வீடு. இவர்கள் சிங்கள கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்போது அவரது மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் திருமணம் முடித்துக்கொண்டு போய்விட்டார். ஏனைய இரு பிள்ளைகளுடன் குடும்ப சகிதம், சுயவிருப்பின் பேரில் இஸ்லாத்தை தழுவியுள்ளார். அதில் ஒரு மகள் மத்ரஸா ஒன்றில் மார்க்க கல்வியை கற்றுக்கொண்டிருக்கிறார்.

தங்களது ஜீவனோபாயத்துக்காக வீட்டு முற்றத்தில் சிறிய பெட்டிக் கடையொன்றை நடாத்தி வந்துள்ளார். காடையர் கும்பல் அந்தக் கடையை எரித்து சாம்பலாக்கிவிட்டது. இந்நிலையில், தனது வீட்டு நுழைவாயிலில் சிறிதளவு மரக்கறிகளை வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந் காட்சி எங்கள் மனதை நெருடியது. அத்துடன் உடைக்கப்பட்ட அவரது மோட்டார் சைக்கிளையும் எம்மிடம் காண்பித்தார்.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்தில் இணைந்து கொண்டேன். இஸ்லாத்துக்கு வந்தமைக்காக பெரும்பான்மை சமூகத்தவர்கள் என்னை அடித்தார்கள். எனது கடையை தீயிட்டுக் கொளுத்தினார்கள். எனது வீடுவாசல், பொருட்கள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் இப்போது உடைத்துவிட்டனர். நாங்கள் இப்போது பல்வேறு துயரங்களுக்கு முகம்கொடுத்துள்ளோம்.

நான் தற்போது கூலி வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனது சிறிய பெட்டிக்கடை மூலம் மரக்கறிகளை விற்று போதியளவு உழைத்துக் கொண்டிருந்தேன். தற்போது அந்தக் கடையை எரித்துவிட்டார்கள். நான் மீண்டும் கடையை நடாத்தவே எதிர்பார்க்கிறேன். அதற்கு யாராவது உதவி செய்வீர்களானால் மிகுந்த நன்மையாக இருக்கும்” என்று தனது சோகக் கதையை எங்களிடம் பகிர்ந்துகொண்டார் லுக்மான்.

“நாங்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியதால் இனவாத காடையர் கும்பல் எங்களை இலக்கு வைத்திருந்தது. அவர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என்று நாங்கள் அஞ்சினோம். இதனால் நான் அயல் வீடு ஒன்றிலும் எனது கணவர் பள்ளிவாசலிலும் தஞ்சமடைந்திருந்தோம். இறைவன் உதவியால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்” என்று தனது பயத்தை பகிர்ந்துகொண்டார் லுக்மானின் மனைவி.

மகளின் திருமண நகைகளை திருடிவிட்டனர்

புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதிக்குட்பட்ட கொட்டாரமுல்லை,
மொரக்கல பிரதேசத்திலுள்ள முதலாவது முஸ்லிம் வீடு ஆறு பிள்ளைகளின் தந்தையான ஏ.ஜே.எம். ஹாரிஸ் என்பவருக்கு சொந்தமானது. இவரது வீடு முற்றாக எரிந்து சாம்பலாக காட்சியளித்தது. தனது மனைவி மற்றும் பிள்ளைகள் சூழ அனைவரும் எங்களை மிகுந்த ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நாங்கள் நோன்பு திறக்க தயாராகும்போது ஓடிவருமாறு முஸ்லிம்கள் எங்களைக் கூப்பிட்டனர். பின்னால் வந்தவர்கள் எங்களை துரத்திக்கொண்டு வந்தார்கள். நான் விழுந்து, விழுந்து ஓடினேன். நாங்கள் எல்லோரும் வீதியில் நின்றுகொண்டுதான் நோன்பு திறந்தோம். மறுநாள் காலையில் வந்து பார்த்தோம் எங்களது வீடு முற்றாக எரிந்து சாம்பலாகக் கிடந்தது” என்று தெரிவித்தார் ஹாரிஸ்.

“தனது மகளின் திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் அடையாளம் போட்ட நகைகள் மற்றும் கூடவைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீடுகளில் தங்கி வருகிறோம். வீடு இல்லாமல் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று அவரின் மனப்பாரத்தை எம்மிடம் இறக்கிவைத்தார் ஹாரிஸின் மனைவி.

…. மாமா வீட்டுக்கு நெருப்பு போட்டார்

கொட்டாரமுல்லை முற்றாக எரிந்த நிலையில் பல வீடுகள் என் கண்முன் காட்சியளித்தன. அதன் உரிமையாளர்களை தேடிச்சென்றபோது 24 வயதுடைய பாத்திமா அஷ்ரிபா இரண்டு கைக்குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்தார். கணவர் இல்லாத நிலையில், தந்தையின் உழைப்பில் வாழ்ந்துவரும் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“கொட்டாரமுல்லைக்கு அடிக்க வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தோம். ஆறு மணியளவில் சிங்களப் பெண் ஒருவர், வீட்டுக்கு அடியுங்கள்… வீட்டுக்கு அடியுங்கள்… அப்போதுதான் உள்ளே இருப்பவர்கள் வெளியில் வருவார்கள் என்று சிங்களத்தில் கத்திக்கொண்டு போனார். பின்னர் நோன்பு திறக்கும்போது, வீடுகளுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் பயத்தில் வீட்டை பூட்டிவிட்டு பின்கதவால் வெளியேறினோம்.

அப்போது வந்த கடையர்கள் எங்களை நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு எங்களது ஆட்களும் கல்வீசி அவர்களை விரட்டினார்கள். அப்போது வந்த பொலிஸார் வானத்தை நோக்கி சுட்டு, முஸ்லிம்களை விரட்டினார்கள். அப்போது வந்திருந்த காடையர்கள் இலக்குகளை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள். நாங்கள் பின்னாலுள்ள வீடு ஒன்றில் தஞ்சமடைந்திருந்தபோது, எனது வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசினார்கள். வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

ஹைராத் பள்ளிக்கு அருகில் கொஸ்வத்தை பொலிஸ் ஓ.ஐ.சி. இருந்தார். எங்களது வீடு எரிகிறது, தீயணைப்பு படையை வரவழைத்து வீட்டை காப்பாற்றித் தாருங்கள் என்று கேட்டேன். இங்குள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தும்மோதர பகுதியில் தீயணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அவை முடிந்த பின்னர்தான் இப்பகுதிக்கு வரும் என்றும் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். வீடுகளில் தீயை அணைக்காமலிருக்க வந்தவர்கள் நீர்க் குழாய்களை உடைத்திருந்தார்கள்.

எனது ஆண் குழந்தை வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ ஆவணங்களுடன், பிள்ளைகளின் இரண்டு உடுப்புகளை சரி எடுத்து தாருங்கள் என்று கேட்டேன். அங்கிருந்த இராணுவத்தினரிடம், உங்களில் கால்களில் வேண்டுமானாலும் விழுகிறேன் அதை எடுத்து தாருங்கள் என்று கேட்டேன். அப்போது இரண்டு அறைகள் மட்டும்தான் எரிந்துகொண்டிருந்தன. அவர்கள் நினைத்தால் அதை எடுத்து தந்திருக்கலாம். ஆனால், தீயணைப்பு படையினர் வரும்வரை வீட்டுக்குள் யாரும் செல்லமுடியாது என்று பொலிஸார் கைவிரித்து விட்டனர்.

சப்பாத்துகளை ஒட்டிக்கொடுப்பதால் அதன்மூலம் எனக்கு சிறியளவு கமிசன் பணம் கிடைத்துக்கொண்டிருந்தது. எனது தந்தை சந்தையில் வியாபாரம் செய்பவர். தூர இடங்களுக்கு சென்று விற்பனை செய்வதற்காக ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியாக சாமான்களை வாங்கி வைத்திருந்தார். இவை எல்லாமே சாம்பலாகிவிட்டன. காசோலைக்கு பணம் கட்டுவதற்கு 50 ஆயிரம் ரூபா கடன் வாங்கி வைத்திருந்தார். அத்துடன் வைத்திருந்த நகைகளும் காணாமல்போய்விட்டன.

நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்களுக்கென தனியான வீடு இல்லை. ஆனால், காணி இருக்கிறது. அந்த காணிக்குள் இருப்பதற்கு தற்காலிக வீடையாவது அமைத்து தந்தால் மிகவும் பேருதவியாக இருக்கும்” என்று தனது ஒட்டுமொத்த கண்ணீர் கதைகளை எம்மிடம் ஒப்புவித்தார் பாத்திமா அஷ்ரிபா.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே மூன்று வயதான அவரது மகள் “எனது உடுப்பு, மோதிரம், காப்பு, தம்பியின் உடுப்பு எல்லாம் போய்விட்டது. எங்கள் வீட்டுக்கு …. மாமா நெருப்பு போட்டார்” என்று மழலை மொழியில் பேசியது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவளது தம்பி “என்னுடைய சைக்கிளும் போய்விட்டது. எனக்கு சைக்கிள் வேணும்…” என்று சொன்னதும் எங்களது கண்கள் கலங்கின.

சோறு போட்ட அப்பக் கடையை உடைத்தனர்

எஹல கொட்டராமுல்லையில் ஏழு பேர்கொண்ட குடும்பம் பாதிக்கப்பட்ட வீடொன்றில் வசித்து வந்தது. வயதான தாய் உம்மு பரீதா, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவரது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் விவாகரத்துப் பெற்ற தனது மகள் ஆகியோர் திருமணமான இன்னுமொரு மகளின் வீட்டில் வசித்து வந்தனர். மிகவும் வறுமைப்பட்ட இந்தக் குடும்பம், அப்பக் கடை மூலமே தங்களது ஜீவனோபாயத்தை நடாத்திவந்தள்ளது. கடையும் வீடும் சேதமாக்கப்பட்ட சோகத்தில் மூழ்கியிருந்த அந்த கூட்டுக் குடும்பத்தை சந்தித்தோம்.

“எனக்கு 16 வயதாகும்போது நான் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இஸ்லாத்துக்கு வந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த மகளின் கணவர், மூன்று பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்றுவிட்டார். கொழும்பில் பல இடங்களில் துப்பரவாக்கும் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் இந்த வீட்டுப் பொருட்களை வாங்கினேன்.

எனது கணவருக்கு சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் புற்றுநோய் வந்துவிட்டது. அவருக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருக்கும் போது, நோன்பு திறக்கும் வேளையில் சிங்கள பெண் ஒருவர், நான் முன்னால் போகிறேன். நீங்கள் எல்லோரும் பின்னால் வாருங்கள். பள்ளியிலிருந்து தாக்குவோம் என்று கூறிக்கொண்டே எமது வீடுகளை தாக்கினர். 8 மணிக்குப் பின்னர்தான் பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஆனால், எவருக்கும் பாதிப்பில்லை.

பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் கடையை உடைத்தனர். வீட்டை எரித்தனர். என்னுடைய வீட்டையும் சேதமாக்கினார்கள். ஆனால், குர்ஆன் இருந்த இடத்துக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. அல்லாஹ் அதனைப் பாதுகாத்தான். இங்கு பத்து பள்ளிகள் இருக்கின்றன. அவைகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் அல்லாஹ் பாதுகாத்து தந்தான்.

எமது உடைமைகள் இல்லாமல் போனாலும் சரி, இந்த அநியாயத்தை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நான் அல்லாஹ்வை நம்பி இருக்கிறேன். நோய்வாய்ப்பட்ட எனது கணவரையும் இங்கு அழைத்து வந்துள்ளேன். இனி ஒருபோதும் சிங்கள ஊருக்கு திரும்பிப்போக மாட்டேன். என்னுடன் சேர்ந்து 21 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அதில் எனது சகோதரியின் மகளும் மகனும் இப்போது நல்ல முறையில் இருக்கின்றனர்.

தாக்குதலை நடத்த வந்தவர்கள் என்னுடைய கடையிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் இந்த அநியாயத்தை செய்தார்கள். அவர்களுக்கு அரசாங்கமோ, அதிகாரிகளோ தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நான் அல்லாஹ்வை மட்டுமே நம்புகிறேன். அவனே அந்த தண்டனையை வழங்க வேண்டும்” என்று உம்மு பரீதா கூறிமுடிக்கும்போது, அவரின் கண்ணிலிருந்து கண்ணீர் பொலபொல என வடிந்துகொண்டிருந்தது.

“ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினர் இருக்கத்தக்க நிலையில்தான் எங்களுக்கு இந்த அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவேண்டும். அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முதல் அரசாங்கம் இவர்களை தண்டிக்கவேண்டும். இதன்மூலம்தான் எதிர்காலத்தில் இப்படியான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும்” என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் அவரது விதவை மகள்.

அநியாயமாக ஒரு உயிரை பறித்துவிட்டனர்


மத்திய கொட்டாரமுல்லையில் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காலஞ்சென்ற பெளசுல் அமீரின் வீட்டுக்குச் சென்றோம். வெளியாட்கள் யாருமின்றி மையான அமைதியாக இருந்தது அந்த வீடு. அங்கு ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதே அவரது இளைய மகன் முஹம்மட் அஜ்மல் வந்தார். இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு, நடந்த சம்பவங்கள் பற்றி அவரிடம் கேட்டோம்.

“பக்கத்திலிருந்த றிழ்வான் ஹாஜியாரின் வீடு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. யாரும் வெளியில் வரவேண்டாம், உள்ளே இருங்கள் என்று கூறிவிட்டு வாப்பா வெளியில் சென்றார். அப்போது எங்களது கேட் உடைக்கும் சத்தம் கேட்டது. பின்னர் வீட்டு கண்ணாடிகளை உடைத்தனர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த லொறிக்கும் தீவைத்தனர். கடைசியில் எங்களது வாப்பாவின் உயிரும் அநியாயமாக பறித்துவிட்டனர்.

சத்தம் எல்லாம் முடிந்தவுடன் நாங்கள் வெளியில் வந்தோம். அப்போது வாப்பா வீதியில் விழுந்து கிடந்தார். முகத்திலும் தலையிலும் வெட்டிவிட்டு, தளபாடங்களுக்கு பூசுவதற்கு வைத்திருந்த டினர் கலந்த வார்னிஸ் பூச்சை முகத்தில் ஊற்றியிருந்தனர். அதைக் கண்டு உம்மா சத்தம்போட்டுக் கத்தினார். அருகிலிருந்த நானாமார் வந்து, லொறியில் பிடித்திருந்த தீயை அணைத்துவிட்டு, அதில் வாப்பாவை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றனர்” என்று அவரது மகன் தழுதழுத்த குரலில் எங்களிடம் கூறினார்.

கஞ்சிப் பானைக்குள் சிறுநீர் கழித்தனர்

“கொட்டம்பபிட்டிய மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் 250 ஆயிரம் ரூபா பெறுமதியான கண்ணாடி நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து, 13 இலட்சம் ரூபா செலவுசெய்து நிர்மாணித்த வுழூ செய்யும் தடாகத்தை முற்றாக உடைத்துள்ளனர். அனைத்து ஜன்னல்களையும் பெண்கள் தொழுகையறை, கழிவறைகள் போன்றவற்றையும் முற்றாக சேதப்படுத்தியுள்ளனர். புனித குர்ஆன் பிரதிகளை எரித்து, அதன்மேல் சிறுநீர் கழித்துள்ளார்கள். இப்தாருக்கு தயார்செய்யப்பட்டிருந்த கஞ்சிப் பானையைத் திறந்து அதற்குள்ளும் சிறுநீர் கழித்துச் சென்றுள்ளனர்.

கொட்டம்பபிட்டிய பிரதேசத்தில் 20 கடைகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. 20 வாகனங்கள், 80க்கு மேற்பட்ட வீடுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய அநியாயங்களை செய்தவர்களுக்கு அல்லாஹ் கூலி கொடுத்தே ஆகவேண்டும். அதுவும், புனித ரமழான் காலத்தில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும்” என்று முஹம்மட் பர்ஹான் தெரிவித்தார்.

சி.சி.ரி.வி. பதிவு இல்லையென்று தாக்கினர்

“ஐ.எஸ். தாக்குதலின் பின்னர், கொட்டம்பபிட்டிய பிரதேசத்திலுள்ள எங்களது மத்ரஸா புலனாய்வுத்துறையினரால் நான்கு தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஐந்தாவது தடவையாக சுமார் ஆயிரம் மாற்றுமத சகோதரர்கள் பொலிஸ் மேலதிகாரியுடன் மத்ரஸாவுக்குள் வந்தனர். இங்கிருந்த மூன்று கிணறுகளில் இருந்த நீரை இறைத்தனர். அதிலிருந்து சந்தேகத்துக்கிடமான எந்தப் பொருட்களும் இருக்கவில்லை.

பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகளை பதிவுசெய்யப்பட்ட நினைவகத்தை பொலிஸார் எடுத்துக்கொண்டு சென்றனர். 23ஆம் திகதி மத்ரஸாவுக்கு விடுமுறை கொடுத்திருந்தோம். பொலிஸார் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் சி.சி.ரி.வி. கமெரா வேலைசெய்துகொண்டிருந்தது. ஆனால், 25ஆம் திகதிக்குப் பின்னர் சி.சி.ரி.வி. பதிவுகள் நிறுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன் பின்னர்தான் அல்ஜமாலியா அரபுக் கல்லூரியும் மஸ்ஜித் சாரா பள்ளிவாசலும் காடையர்களினால் தாக்கப்பட்டது” என்று தெரிவித்தார் மத்ரஸா அதிபர் நிஃமதுல்லாஹ்.

இல்லாத ஆயுதத்தைக் கேட்டு தாக்கினார்கள்

பிரச்சினை நடைபெற்றபோது கினியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் தொழுகை நடாத்திய மெளலவி பதுர்தீன் அஸ்மியை சந்தித்து நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் கேட்டோம்.

“கினியம பிரதேசத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என்று முதலில் தேடினார்கள். பின்னர் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடினார்கள். பாதுகாப்புத் தரப்பினர் எவ்வளவு தேடியும் சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை. மூன்றாவதாக குளத்தில் ஆயுதங்கள் கிடப்பதாக பெரும்பான்மை சமூகத்தினர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தினத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சூழ்ந்திருக்கும் நிலையில் முழுநாளும் குளத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. அன்றையதினம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜும்ஆ தொழுகையை தவிர்த்து, பள்ளிவாசல்களில் ளுஹர் தொழுகையை நடாத்தினோம். மறுநாள் சனிக்கிழமையும் குளத்தை சல்லடை போட்டுத் தேடினார்கள். இரண்டு நாட்கள் தேடியும் அவர்கள் எதிர்பார்த்த எந்த ஆயுதங்களும் அகப்படவில்லை. உங்களது ஊரில் எந்த ஆயுதங்களும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பொலிஸார் சார்பில் எமது பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை, குளத்தில் மீண்டும் ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி சுமார் 30 பேர்கொண்ட குழுவினர் மாலை நேரத்தில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்தனர். பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித அறிவித்தலும் கொடுக்காமல், அவர்களாகவே ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி அவர்களாகவே தேடிக்கொண்டிருந்தார்கள். பின்னர் குளத்திலிருந்து 256 தோட்டாக்கள் கிடைத்ததாக பொலிஸாருக்கு அறிவித்தனர்.

வேண்டுமென்றே தோட்டாக்களைப் போட்டுவிட்டு, எங்களை குற்றவாளிகளாக சித்தரித்து, எங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அவர்கள் தயாராகுவதாக நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்தோம். பின்னர் இரண்டு பொலிஸார் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டனர். பள்ளியின் பாதுகாப்புக்காக பொலிஸாரின் அனுமதியுடன் நாங்களும் குழுவொன்றை நியமித்திருந்தோம்.

பெரிய பள்ளியை தாக்கிவிட்டு, எங்களது பள்ளிவாசலை தாக்குவதற்கு காடையர் கூட்டம் வந்தது. நாங்கள் அவேசமாக சத்தம்போட்டு அவர்களை உள்ளே வரவிடமால் திருப்பியனுப்பினோம். அப்போது பொலிஸாரும் அங்கே சாட்சியாக இருந்தனர். பின்னர் ஒரு மணிநேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாங்கள் சட்டத்தை மதித்து, காவலுக்கு நின்ற எமது குழுவை பள்ளிவாசலுக்குள் அழைத்துக்கொண்டோம்.

அப்போது ஒருசாரார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்க, இன்னொரு சாரார் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டோம். நான்தான் இமாமாக முன்னின்று தொழுகை நடாத்தினேன். பிரார்த்தனை முடியும் தருவாயில், இராணுவத்தினர் முன்னாலும் ஆயிரக்கணக்கான பெரும்பான்மை சமூகத்தவர்கள் கத்தி, தடிகளுடன் பின்னாலும் வந்துகொண்டிருந்தனர்.

கலகக்காரர்களை விரட்டுமாறு வந்திருந்த இராணுவத்திடம் நாங்கள் கூறினோம். ஆனால், உங்களிடம் இருக்கின்ற ஆயுதங்களை வெளியில் போட்டால் அவர்கள் போய்விடுவார்கள் என்று இராணுவத்தினர் பதிலளித்தனர். நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காத நிலையில், உயிரைப் பாதுகாப்பதற்காக வெளியில் ஓடினோம். பின்னர் காடையர்கள் பள்ளிவாசலுக்குள் புகுந்து முற்றாக சேதப்படுத்தினார்கள்” என்று தெரிவித்தார்.

தனிப்பட்ட ரீதியில் உதவ முன்வாருங்கள்

குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இனவாத வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் தொழில்செய்து வாழ்க்கை நடாத்துபவர்களாகவே இருந்தனர். உதாரணமாக பெட்டிக்கடை, வண்டில் கடை, குடிசைக் கைத்தொழில் என சிறு சிறு வியாபாரங்களை செய்து வந்துள்ளனர்.

வன்செயலின் பின்னர் பலரின் ஜீவனோபாய திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நிவாரணப் பொருட்களை மாத்திரம் வழங்குவதை விடுத்து, அவர்களின் தொழில்களை மீள ஆரம்பிப்பதற்கு அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கு மற்றும்ற வீடுகளில் அவசரமாக குடியேற்றுவதற்கு இந்த புனித ரமழான் மாதத்தில் உதவ முன்வாருங்கள்

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சில தனவந்தர்கள் உதவிசெய்து வருகின்றனர். இதுதவிர, பள்ளிவாசல்களை புனரமைக்கும் பணிகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் விரைவாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நம்மால் முடியுமான உதவிகளைச் செய்வோம்.

நிவாரணம் தவிர்ந்த, ஜீவனோபாயம் மற்றும் மீள்குடியேற்றத்துக்கு தனிப்பட்ட ரீதியில் உதவிசெய்ய விரும்புவோர் firows@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களை பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்புபடுத்துகிறோம். அதன்பின் அவர்களுக்கு வேண்டுமான உதவிகளை நீங்கள் செய்யமுடியும்.

நன்றி: விடிவெள்ளி