A+ A-

பயங்கர(வாத) கைதுகள்• பிறவ்ஸ்

முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் பயங்கரவாத இயக்கத்துடன் சேர்ந்துகொண்டு இலங்கையில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் சமூகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் பெயரால் வெடித்தவர்களுக்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்பதை மாற்று சமூகத்தின் மத்தியில் நிரூபிப்பதற்கு பெரிதும் போராட வேண்டியுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட ஒருசிலர் கைதுசெய்யப்பட்டாலும், அப்பாவிகள் பலர் அநியாயமாக அகப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில்தான் அந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கத்தக்க நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே இவ்வாறு அப்பாவிகள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேரடியாக பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கின்றதா என்ற சந்தேகத்தின் பேரில், இவர்களை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு காலஅவகாசம் கோரி குற்றப்பத்திரிகைகள் (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதால், எந்தவொரு பாதுகாப்புத் தரப்பும் நீதிமன்ற அனுமதியின்றி சந்தேகத்தின் பேரில் யாரையும் கைதுசெய்யமுடியும். அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகளுக்கு பிணை வழங்கவும் முடியாது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பலர் இன்னும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படாமல் புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மாவனல்லையைச் சேர்ந்த சாதிக் மற்றும் சாஹித் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆரம்பகாலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் கீழுள்ள ஜம்இய்யா மாணவர் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான இவர்கள், அந்த இயக்கத்தின் கொள்கைளுடன் முரண்பட்டு தலைமைத்துவத்தை விமர்சித்து இரகசிய கூட்டங்கள் பலவற்றை நடாத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை 22.08.2015 அன்று தங்களது அமைப்பிலிருந்து நீக்கியதாக ஜமாஅதே இஸ்லாமி அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆரம்பகாலங்களில் ஜம்இய்யா கருத்தரங்குகளில் பங்குபற்றிய அப்பாவி இளைஞர்கள் பலர் இன்று கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பிடிக்கப்பட்ட படங்கள் சிங்களப் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஆதாரமாக வைத்தும் தற்போது கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

கைதுசெய்யப்படும் அப்பாவிகள்

புத்தளம், நுரைச்சோலையில் அரபு நாட்டு நிதியமொன்றின் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட குழாய் கிணற்றில் அரபு மொழியிலான பெயர்ப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அதை வைத்து ஏதாவது பிரச்சினைகள் எழலாம் என்ற அச்சத்தில் அதன் வீட்டு உரிமையாளர் அதனை உடைத்தபோது, ஏன் உடைத்தீர்கள் அதில் ஏதாவது பயங்கரவாத கருத்துகள் இருந்தனவா என்ற தோரணையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியில் வெசாக் கூடுகளை படம்பிடித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். வெலிமடை மருந்தகமொன்றில் மயக்கம் விளைவிக்கக்கூடிய மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக அதன் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைடயக்கத் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டைகள் பலவற்றை வைத்திருந்தாகக்கூறி பலரும் கைதாகியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் அதிகளவான கடவுச் சீட்டுகளை வைத்திருந்தமை பயங்கரவாத குற்றம் என்ற பெயரிலும் கைதுகள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் தங்களது கடவுச்சீட்டுகளை இவ்வாறான முகவர் நிலையங்களில் ஒப்படைப்பது வழமை. ஆனால், அங்கீகாரம்பெற்ற இவ்வாறான முகவர் நிலையங்களில் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பது கூட இன்று பயங்கரவாத குற்றமாக பார்க்கப்படுகிறது.

தெஹிவளையில் ஒருவர் பல்வேறு தேவைகளுக்காக பல இறப்பர் முத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்தார். தேவையற்ற பொருட்கள் என்று அவற்றை எரித்த நிலையில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். நுவரெலியாவுக்குச் சென்ற மத்ரசா மாணவர்கள் அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தை படம்பிடித்த காட்சிகள் சி.சி.ரி.வி. காணொளியில் பதிவாகியிருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி, மோதர பிரதேசத்தில் குடிநீரில் விசம் கலந்திருப்பதாகவும் அதை அருந்தியதில் ஆறு பேர் மரணித்துவிட்டதாகவும் பெரும்பான்மை சகோதரர் முஸ்லிம் நபரொருவரிடம் கூறி, அதை பள்ளிவாசலில் அறிவிக்குமாறு கூறியுள்ளார். அவரும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல், பள்ளிவாசல் ஒலிபெருக்கியை சரிசெய்துவிட்டு மெளலவியிடம் அறிவிக்குமாறு கூறியுள்ளார். பின்னர் சத்தத்தை கூட்டிவைத்து மீண்டுமொரு தடவை அறிவிப்புச் செய்துள்ளனர். அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக்கூறி சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமொன்றின் ஆசியப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக கண்டியைச் சேர்ந்த ஒருவர் செயற்பட்டு வந்துள்ளார். ஆசிய நாடுகளில் குறித்த நிறுவனத்தில் இயந்திரங்கள் பழுதடைந்தால், அங்குசென்று அதனைத் திருத்துவதுதான் அவரது வேலை. இதற்காக அவர் பழுதுபார்க்கும் கருவிகளுடன் (Toolkit) விமான நிலையத்துக்கு சென்றபோது, மோப்ப நாய் அதில் வெடிமருந்து இருப்பதற்கான சைகையை காண்பித்துள்ளது. பின்னர், அதற்குள் கிடந்த பழைய துகள்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் அந்நூர் சமூக சேவை நிலையம் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று இயங்கிவந்த நிலையில் அதன் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முறையான தகவல்களை வழங்காமையினால் அதிலுள்ள மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர் மஹரகம வீதியில் நின்றுகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புத் தரப்பு விசாரித்தபோது, சிங்கள மொழி தெரியாமல் தடுமாறியதால் அவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறையைச் சேர்ந்த ஒருவர் பொருத்து (Fitting) வேலைகள் செய்து தனது குடும்பத்தை நடாத்தி வந்துள்ளார். அவர் பாவிக்கும் துளையிடு கருவியில் பொருத்துகின்ற கூர், தோட்டாவின் வடிவத்தை ஒத்திருப்பதாகவும், அது பயிற்சி தோட்டா எனவும் கூறி குறித்த அப்பாவி தொழிலாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளம் மூலம் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்பவர்களை இலக்குவைத்தும் தற்போது கைதுகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.

மாத்தறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஒரு கோடியே இருபது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை வீட்டில் வைத்திருந்தார். அந்தப் பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது என்ற காரணங்களுக்கு சரியான பதிலளிக்காமையினால் அவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தப் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்பட்டதா என்ற தோரணையில் இப்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை உறுப்பினரொருவர், இராணுவ சீருடையொத்த மேலங்கியுடன் இந்தியாவிலுள்ள தாஜ்மஹாலுக்கு முன்னால் நின்று படம்பிடித்தமையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் பயங்கரவாத பயிற்சிகளில் கலந்துகொண்டவரா என்ற தோரணையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய புலனாய்வுப்பிரிவின் அறிக்கை வரும்வரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அலட்சியம் வேண்டாம்

வெள்ளவாய, குடாஓயா பிரதேசத்தில் சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த வெற்றுக் காணிக்குள் பட்டம் விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்குச் சென்றவர்கள் காணிக்குள் கிடந்த சந்தேகத்துக்கிடமான கோணிப்பை தொடர்பில் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். பொலிஸார் கைப்பற்றிய அந்தப் கோணிப்பைக்குள் 7 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்திகள், துருப்பிடித்த கைவிலங்கு ஒன்றும் இருந்துள்ளன.

பின்னர் நடைபெற்ற விசாரணைகளில், அமெரிக்காவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள தெஹிவளையைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவருக்கு அந்தக் காணி சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மகன் விமானப் படையில் பணியாற்றிய ஒருவர். தற்போது தனியார் விமானத்தின் விமானியாக பணியாற்றி வருகிறார். பாட்டன், தந்தை என்று வேட்டைக்காரர் பரம்பரையில் வந்தவருக்கு இப்படியான ஆயுதங்களை பொழுதுபோக்குக்காக சேகரிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

பிரச்சினைக் காலம் என்பதால் சேகரிக்கப்பட்ட ஆயுதங்களை என்னசெய்வது என்று காவலாளி கேட்டபோது, அதனை ஒரு கோணிப்பைக்குள் கட்டி வளவு மூலைக்குள் போடுமாறு கூறியுள்ளார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அவர் கைதுசெய்யப்படுவதை தவிர்த்திருக்கலாம். அலட்சியமாக செய்த வேலை இப்போது சிறைவாசம் அனுபவிக்க வைத்துள்ளது.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ஷாபி ரஹீம் சில இலத்திரனியல் உபகரணங்களை வைத்திருந்தமையினால் அவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் சமிக்ஞைகளை (Singal) செயலிழக்கச் செய்யும் கருவி (Mobile Jammer) மற்றும் போக்குவரத்துப் பொலிஸார் வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டை அளவிடும் மானியை தூரத்திலிருந்து கண்டுபிடிக்கும் கருவி என்பவற்றை சட்டரீதியிற்ற முறையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கருவி விமானங்களின் சமிக்ஞைகளைக்கூட கட்டுப்படுத்தக்கூடியது என்றதொரு வதந்தி பரவியது. இதனை உண்மையென நம்பி, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதுபற்றி அமைச்சரவையில் கேள்வியெழுப்பியுள்ளார். இது அந்தளவுக்கு பாரதூரமான உபகரணம் அல்ல எனவும், அதன் செயற்பாடுகள் என்னவென்பது பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவருக்கு விளக்கமளித்தாகவும் தெரியவருகிறது.

அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் ஷாபி ரஹீம், வியாபார நோக்கிலேயே இவற்றை கொள்வனவு செய்து இலங்கைக்கு கொண்டுவந்திருக்கிறார். இப்படியான பொருட்களை வைத்திருப்பதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டிருந்தால் இந்த கைதை தடுத்திருக்கலாம். இலங்கையில் கட்டாயம் அமைதி பேணப்படவேண்டிய இடங்களில் இப்படியான தொலைபேசி சமிக்ஞை செயலிழப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக்கான கைதுகளாம்

வத்தளை, ஹுனுப்பிட்டியவில் காரணமே இல்லாமல் பத்து பேர் குடும்பத்துடன் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காரணமில்லாமல் தடுத்துவைத்துள்ள எங்களை விடுவியுங்கள் என்று பொலிஸாரிடம் கேட்டபோது, உங்களது பாதுகாப்புக்காகத்தான் இங்கு வைத்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியதாக கைதுசெய்யப்பட்டுள்ள பெண் என்னிடம் கவலையுடன் தெரிவித்தார்.

தனது பிள்ளைகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் இக்குடும்பம், பெண்களின் உடைகளைத் தைத்து அதற்கு சாயம்போட்டு விற்பனை செய்து வந்துள்ளது. பெளத்த பிக்குகள் அணியும் காவி உடைகள் இவர்களிடம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் சென்றுள்ளது. பொலிஸார் விசாரணைக்கு வந்தபோது, இவர்களிடம் காவி ஆடை இருப்பதாக பெரும்பான்மை சகோதரியொருவர் கத்திக்கொண்டு ஊரைக் கூட்டியுள்ளார். பின்னர் அந்த வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸாரும் அங்கு வந்திருந்த விசேட அதிரடிப்படையினரும் அவர்களை கிரிபத்கொட பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது குற்றம் இல்லாவிட்டாலும், ஊர் மக்களின் எதிர்ப்பினால் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறைக்குள் அடைக்கப்படாவிட்டாலும் சிறைக்கு அருகிலுள்ள விராந்தைக்குள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் பொலிஸ் அதிகாரிகளின் அறைக்குள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொலிஸ் நிலையத்திலுள்ள ஆண் அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்குச் செல்லும்வரை, அதாவது நள்ளிரவு இரண்டு மணிவரை பெண்கள் அறைகளுக்காக காத்திருக்கின்றனர். அத்துடன், அதிகாலை ஐந்து மணிக்கு அதிகாரிகள் கடமைக்கு திரும்புவதால் அதற்கு முன்னர் எழும்பவேண்டியுள்ளது. ஆண்கள் பொலிஸ் நிலையத்தில் விரும்பிய இடங்களில் தூங்குகின்றனர்.

கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இவர்களுக்கு நோன்பு நோற்கும் வசதிகள், தொழுகை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் எந்தக் குற்றமும் செய்யாமல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அப்பாவிக் குடும்பம் மிகுந்த கவலையடைந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் குழு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

தெளஹீத் ஜமாஅத் பற்றிய தெளிவு

அக்குறணையைச் சேர்ந்த ஸ்ரீலங்கா தெஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தான் கலந்துகொண்ட பயற்சி முகாம்களில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், வெளீயிடுகளை வைத்திருப்பதன் ஆபத்தை உணர்ந்து அதை என்னசெய்வேண்டும் என்று தலைமையகத்திடம் கேட்டுள்ளார். அதை தலைமையகத்துக்கு கொண்டுவருமாறு கூறியபோது, அவற்றை கையளிப்பதற்காக கொண்டுசென்றபோது வழியில் இடைமறித்த பாதுகாப்புத் தரப்பினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞன், தான் தௌஹீத் ஜமாஅத் அங்கத்தவர் என்றும் பல பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டதாகவும் மாவனல்லையில் பிரத்தியேக நிறுவனமொன்றில் தொழிற்பயிற்சி பெறுவதாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இவர் வெறுமன தெளஹீத் ஜமாஅத் எனக் கூறியிருப்பதால் தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்பினர் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அளுத்கமயில் அமைந்துள்ள பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல் ஒன்றை சோதனையிட்டபோது, பயங்கரவாத இயக்கத்தின் பிரசுரங்கள், நிதி சேகரித்தமைக்கான ரசீதுகள் சகிதம் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். உண்மையில் அங்கு இருந்தது சிலோன் தெஹீத் ஜமாஅத் நிர்வாகத்தின் பள்ளிவாசலாகும். ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்திலிருந்து பிரிந்துசென்ற அவர்கள், அந்தப் பள்ளிவாசலை பதிவுசெய்வதற்கு போதிய காலஅவகாசம் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் ஏது, ஏனைய தெளஹீத் ஜமாஅத் அமைப்புகள் எதுவென்பது தொடர்பில் மாற்று சமூகத்துக்கோ அல்லது பாதுகாப்புத் தரப்புக்கோ பூரண தெளிவு/ அறிவு இல்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக தோற்றம் பெற்றுள்ள பல்வேறு தெளஹீத் ஜமாஅத் அமைப்புகளும் தாங்களை யாரென்பதை பொதுவெளியில் குறிப்பாக மாற்று சமூகத்தின் மத்தியில் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

தனியே தெளஹீத் ஜமாஅத் என்ற பதத்தை விடுத்து, அமைப்பின் முழுப்பெயரையும் பாதுகாப்புத் தரப்பினருக்கு சொல்லவேண்டும். தங்களது கொள்கைகள் பயங்கரவாதத்துடன் எந்தவிதத்திலும் தொடர்புபடவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும். சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்கும் வழங்கிவரும் ஒத்துழைப்புகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும்.

கொள்கை முரண்பாடுகள் காரணமாக, ஒரு சமூகம் பல கூறுகளாக பிளவுபடும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் வைக்கோல்போல அந்த சமூகம் மாறிவிடுகிறது. இயக்கவெறி காரணமாக தங்களுக்கு பிரிந்து, முட்டி மோதிக்கொள்ளாமல் ஒரே குடையில் கீழ் ஒற்றுமையாக செயற்படவேண்டும். கொள்கை ரீதியில் முரண்பட்டிருந்தாலும், சகல தெளஹீத் ஜமாஅத் அமைப்புகளுக்கும் பயங்கரவாத முத்திரை குத்துவதை ஏனைய இயக்கங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

கைதுகளின் பின்னாலுள்ள பாடங்கள்

இங்கு மேற்கொள்ளப்படும் கைதுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்தான் எல்லா கைதுகளும் இடம்பெறுகின்றன. சில ஊடகங்கள் இந்த கைதுகளை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதால், முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற தோரணை மாற்று சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படுகிறது. எல்லாம் ஏதாவொரு முஸ்லிம் விரோதப் போக்கில் நடைபெறுகிறது என்பதில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்.

முஸ்லிம்கள் வைத்திருக்கும் கத்தி, வாள், அரபு நூல்கள், சஞ்சிகைகள், கெமா ஆடைகள் எல்லாம் இப்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்களாக பார்க்கப்படுகின்றன. வீடுகளில் அழகுக்காக அல்லது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் ஏன் நம்மை சிறைக்கு தள்ளவேண்டும். அதை வைத்திருக்காமல் இருப்பதுதான் இன்றைய காலத்தில் பாதுகாப்பான அணுகுமுறையாகும்.

அவசரமான முடிவுகள், தடுமாற்றத்தினால் செய்யப்படும் நடவடிக்கைகள் பலவற்றை புத்திசாதுரியமாக கையாண்டிருந்தால் மேற்கொள்ளப்பட்ட பல கைதுகளை தடுத்திருக்கலாம். பொலிஸார் வாக்குமூலம் பெறும்போது, தெரியாத மொழியில் உளறாமல் தெரிந்த மொழியில் பேசுங்கள். தேவையாயின் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்ககோரும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. பேசும்போது நிதானமாகவும் பயமின்றியும் தைரியமாகப் பேசுங்கள். செய்யாத குற்றத்துக்காக நீங்கள் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை.

விடுதலை முயற்சியில் மு.கா.

வரைமுறையற்ற ரீதியில் கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் குதித்துள்ளது. 7ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கூட்டத்தில், கைதுசெய்யப்பட்டவர்களில் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கான முற்சிகளை மேற்கொள்வதற்கு கட்சியின் சட்டத்தரணிகள் குழு தீர்மானித்தது.

இதன் முதற்கட்டமாக தகவல் திரட்டுவதற்கான அறிவிப்புகள் பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டன. கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கும் குற்றப் பத்திரிகை (B-Report) விடுதலை அல்லது பிணை பெறுவதை இலகுவாக்குமென முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழு தீர்மானித்தது.

கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பெரும்பாலான உறவினர்கள் சட்டத்தரணியொருவரை நியமித்திருந்தனர். இவ்வாறான வழக்குகளுக்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் ஆஜராகுவதற்கு பின்வாங்கினார்கள். இந்நிலையில் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள் சிலர் ஒட்டுமொத்தமாக பணத்தை வாங்கியுள்ளதாகவும் தெரியவந்தது. ஆகவே, காலநேரம் கருதி அந்தந்த சட்டத்தரணிகள் ஊடாக கைதானவர்களின் குற்றப் பத்திரிகைகள் (B-Report) இலகுவாக பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்பிறகு 21ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம், இராஜாங்க அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக் , முஜிபுர் ரஹ்மான், எம்.ஐ.எம். மன்சூர், இஷாக் ரஹ்மான், ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரிய, பிரதி சொலிசிட்டர்ர் ஜெனரல் நவவி, பொலிஸ் திணைக்களத்தின் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்), பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எம்.எம். விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.

பொலிஸார் வழங்கிய குற்றப்பத்திரிகையின் பிரகாரம், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத குற்றங்களை சாதாரண குற்றத்தின் கீழ் கொண்டுவந்து, பிணை வழங்க முடியுமானவர்களுக்கு பிணை வழங்குவதற்கும், குற்றமற்றவர்கள் எனக் கருதப்படுவோரை விடுதலை செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதற்கென சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் குழுவினால் இவர்களுக்கு உதவுவதெனவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அவற்றை வகைப்படுத்தி, குற்றப் பத்திரிகையுடன் தனித்தனி கோப்புகளாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கும். அதேபோன்று அவர்களின் பொலிஸ் அறிக்கைகள் அந்தந்த பொலிஸ் அலுவலகங்கள் ஊடாக பெறப்பட்டு, இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் குழுவினால் பரிசீலிக்கப்படும்.

இந்தப் பரிசீலனையின் பின்னர், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத கைதுகள் எனக் கருதப்படும் வழக்குகள் சாதாரண குற்றங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு பிணை வழங்கப்படும். அத்துடன் குற்றமற்றவர்கள் எனக் கருதப்படுவோர் வழக்கிலிருந்து நேரடியாக விடுதலை செய்யப்படுவர். இதுதொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் வழங்கும். இதற்கான இணக்கப்பாடுகள் அலரி மாளிகை கூட்டத்தின்போது எட்டப்பட்டன.

இதன் முதற்கட்டமாக கைதுசெய்யப்பட்டவர்களின் 64 கோப்புகள், கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் குழுவினால் கையளிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான முடிவுகள் தெரியவரும். அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்கள குழுவுடனான முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாம் கட்ட சந்திப்பு, இந்தக் கட்டுரை எழுதப்படும் வியாழக்கிழமையன்று பிற்பகல் நேரத்தில் நடைபெறுகிறது.

இதுதவிர, முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டினால் தலங்கம பிரதேசத்தில் ஒருவரும், வாரியபொல பிரதேசத்தில் எட்டுப் பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் புத்தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்ணொருவர் சட்டத்தரணிகளின் தலையீட்டினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழிருந்து சாதாரண குற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார். 

நன்றி: நவமணி (31.05.2019)