A+ A-

இலங்கையில் தீவிரவாதம் தானாக உருவெடுத்தது என சிலர் சொல்ல வருகின்றனர். ஆனால் எங்களைப் பொருத்தமட்டில், இது இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதம். இதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற ரவூப் ஹக்கீம் கூறினார்.

திருச்சி எம் கே. ஷாகுல் ஹமீது


இலங்கையில் தீவிரவாதம் தானாக உருவெடுத்தது என சிலர் சொல்ல வருகின்றனர். ஆனால் எங்களைப் பொருத்தமட்டில், இது இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதம். இதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த அரசியல் நோக்கமும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு இல்லை. இனியும் இந்தத் தீவிரவாதச் செயல்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த அடிப்படைத் தளமும் இந்தக் கும்பலுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதையே புலனாய்வுத் துறையும் ஊர்ஜிதம் செய்திருக்கிறது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற ரவூப் ஹக்கீம் கூறினார்.


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸடாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 

பின்னர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : எனது இந்தக் குறுகிய விஜயத்தில், நண்பர் சேகர் பாபு அவர்களது அழைப்பையேற்று, கலைஞர் அவர்களது பிறந்த நாளைத் தமிழினத்தின் விடிவு நாளாகக் கொண்டாடுகிற இவ்விழாவில் கலந்துகொண்டேன்.
தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சிறப்பானதொரு வெற்றியை அடைந்திருப்பதையிட்டு நாங்கள் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எங்கள் இலங்கையின் இன்றைய நிலை குறித்து அவரிடம் நீண்ட விளக்கமளித்திருக்கிறோம்.

இவ்வாண்டு இறுதியில் இலங்கையின் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் தமிழர்கள், முஸ்லிம்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பதைப் பொருத்து அதிபர் தேர்தல் முடிவுகள் நிச்சயம் அமையும் என்ற ஒரு பின்னணி இருக்கிறது. இந்தப் பின்னணியில், இலங்கையின் இன்றைய நிலை, நாட்டில் அண்மையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல், அதன் பிறகு முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை நிகழ்வுகள், அவற்றால் அவர்கள் படும் அவஸ்தைகள், முஸ்லிம்களை இலக்காக வைத்து அங்கு மீண்டும் மீண்டும் நடத்தப்படும் பெரும்பான்மைத் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டோம்.

கேள்வி: இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள், ஏழு முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருக்கிறீர்களே...? இதனால் அரசுக்கு நெருக்கடி எந்தளவில் உள்ளது?

பதில்: முஸ்லிம் சமூகத்திற்குள் ஒளிந்திருந்த சில சமூக விரோதிகள் செய்த அடாத செயல்களை முன்னிலைப்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல், துர்ப்பிரச்சாரங்களை அங்குள்ள சில தீவிரவாத அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. அரசும் அதை முறைப்படி கட்டுப்படுத்துவதற்குத் தேவையான போதிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்ற விசனத்தோடுதான், இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் கட்சி பேதங்களையெல்லாம் மறந்து, இந்த அநியாயங்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்... நாட்டில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்... இதுபோன்ற செயல்களால் சர்வதேச நண்மதிப்பையும் நாங்கள் இழக்காதிருக்க, சட்டத்தை மீறி நடப்போருக்கு எதிராக அரசு கடுமையான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... குறிப்பாக, சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும்  வகையில் பேசி வருகிற பெரும்பான்மையின தீவிரவாதிகளை, தீவிரவாத அமைப்புகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை  வலுவாக வைப்பதே இந்தக் கூட்டுப் பதவி விலகலின் அடிப்படை நோக்கம்.

கேள்வி: இலங்கை உளவுத்துறைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்துள்ளது பற்றி...?

பதில்: நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணையைப் பாராளுமன்றத் தெரிவுக் குழு செய்து வருகிறது. அக்குழுவில் உள்ள 9 உறுப்பினர்களுள் நானும் ஒருவன். 

இப்படியொரு தாக்குதல் இலங்கையில் எங்கெங்கு, யார் யாரால் நிகழ்த்தப்படவுள்ளது என்பது வரை இந்தியப் புலனாய்வுத் துறையால் தகவல் அளிக்கப்பட்டும், அத்தகவல்கள் போதிய அளவில் அரசாங்கத்தால் சட்டை செய்யப்படவில்லை... அவதானத்தோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை முழுக்க பரவலாக இருக்கிறது. எனவே, இதன் பின்னணியைக் கண்டறிவதும், இதற்குப் பிற்பாடு இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பன குறித்தும் ஆராய்வதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருக்கிறோம். இத்தெரிவுக்குழு விசாரணைப் பிரிவின் மேலதிகாரிகள் சிலர் தெரிவித்த தகவல்கள் குறித்து அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்பது குறித்துதான் இப்பொழுது விமர்சனம் செய்யப்படுகிறது. 

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டது போல, இலங்கையிலுள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கமும் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக! ஏனெனில், இந்த நாட்டில் தீவிரவாதம் தானாக உருவெடுத்தது என சிலர் சொல்ல வருகின்றனர். ஆனால் எங்களைப் பொருத்தமட்டில், இது இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதம். இதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த அரசியல் நோக்கமும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு இல்லை. இனியும் இந்தத் தீவிரவாதச் செயல்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த அடிப்படைத் தளமும் இந்தக் கும்பலுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதையே புலனாய்வுத் துறையும் ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

எங்களைப் பொருத்தமட்டில், இவ்வாறான நிலமைகள் மீண்டும் தலைதூக்கி விடக் கூடாது என்பதற்கான பூரண கருத்தொருமைப்பாடு முஸ்லிம் சமூகத் தலைமைகள் மத்தியில் உள்ளக ரீதியாகவே வந்திருக்கிறது. இவர்கள் இனியும் நிலைகொள்வது அல்லது தீவிரவாதச் செயல்களை முன்கொண்டு செல்வதற்கு இயலாத – அதற்கு அடிப்படையே இல்லாத பின்புலம் தெளிவாக இருக்கின்ற நிலையில், தொடர்ந்தும் முஸ்லிம்களையே பலிவாங்கும்  அடிப்படையிலும், முஸ்லிம் சமூகத்தின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்தையும் அரசும், ஏனைய அமைப்புகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்  என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி: முஸ்லிம்களுக்கெதிரான இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் சிங்களர்களா?

பதில்: நாங்கள் ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்ட வரவில்லை. ஆனால், சமூகத்திற்குள்ளேயே தீவிரவாதம் இருக்கிறது. அதன் காரணமாகக் கடந்த காலங்களில் தமிழர்கள் பட்ட அவஸ்தையைத் தற்போது முஸ்லிம்கள் பூரணமாக அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது  சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கிழக்கு மாவட்ட பொருளாளர் இசட். ஆசாத், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது,
நெல்லை மேற்கு மாவட்ட எம்.எஸ்.எப். பொருளாளர் ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி உள்பட பலர் உடன் இருந்தார்கள்.