• பிக்தால் காதிர்
சமகால இலங்கையின் அரசியல் தளத்தில் சகல தரப்பினராலும் முஸ்லிம் சமூகம் பகடைக் காய்களாக பாவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடு. சமூகம் தற்போது தன்னுடைய மிகக் காத்திரமான சமூக உணர்வையும் நாட்டுப்பற்றையும் தன்னிலை தளர்வுறாத சமச்சீரோடு வெளிப்படுத்தி வருவதை நடுநிலை நோக்கர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு அதன் கோட்பாடுசார் சாணக்கியத் தலைமையான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதானமானதும் உறுதியானதுமான தலைமைத்துவ அரவணைப்பும் அணுகுமுறையுமே காரணமாகும்.
எனினும், ஏப்ரல் 21ஆம் திகதிய அனர்த்தம் இலங்கை மக்களிடையே இஸ்லாமோபோபியா எனப்படும் காரண காரியமற்ற பீதியை ஏற்படுத்தியுள்ளமை இலங்கையின் சமகால வரலாறாகப் போயிற்று. 1999 செப்டம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் சர்வதேசம் அடங்கலாக, கலாசார முதிர்ச்சியடையாத நாடுகளில் மட்டுமன்றி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கலாசார முதிர்ச்சியும் ஆன்மீக செல்நெறி வளர்ச்சியும் பாரம்பரியமாகவே ஏற்பட்டுள்ள நாடுகளில்கூட முஸ்லிம் விரோத மனப்பாங்கு பல்வேறு வழிகளிலும் விதைக்கப்பட்டுவிட்டது.
தற்போது அத்தகைய சர்வதேச சமாந்திரப் போக்கானது, ஸஹ்ரான் என்பவரின் முதிர்ச்சியற்ற செயற்பாடுகளால் இலங்கையிலும் தவிர்க்கமுடியாமல் புரையோடிப்போயிற்று. இந்தக் கட்டத்தில் ஏனைய சமூகத்தவரோடும் சமயத்தவரோடும் கலந்து உரையாடத்தக்க சாணக்கியமானதும் சமயோசிதமானதுமான ஒரு தலைமையின் வெற்றிடம் ரவூப் ஹக்கீமினால் நிரப்பப்பட்டுவருவதும் கண்கூடு.
இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும்; நிகழ்ந்திராத நெருக்கடியான இந்தக்கட்டத்தில் தத்தம்; அரசியல் அதிகார வெறிக்கு முஸ்லிம் மக்களின் புவியியல் மற்றும் வாழ்வியல்சார் முழு இருப்பையும் தீனியாக்கி ஜனாதிபதிக் கனவு காணும் அரசியல்வாதிகள் முதல், ரத்ன தேரரின் பாராளுமன்ற சிம்மாசனத்தை தனதாக்கிக்கொள்ள எத்தனிக்கும் ஞானசாரர் வரை இரத்தக் காட்டேறி விளையாட்டை முஸ்லிம் அப்பாவி சமூகத்தின் மீது அரங்கேற்றியுள்ளனர்.
முஸ்லிம்களின் உயிர்கள் மீதும் உடைமைகள் மீதும் கலாசாரத்தின் மீதும் எவ்விதமான சட்டம்சார் கூச்சமும் அச்சமுமின்றி ஒற்றைப்பாதைப் போர்ப் பிரகடனத்தோடு இப்போது பல்வேறு பேரினவாதத் தரப்பினரும் படர்ந்தேறுகின்றனர். தொழிற்சாலைகளில் மட்டுமல்லாது பாடசாலைகளிலும் மற்றும் ஏனைய பயிலரங்குகளிலும்கூட இஸ்லாமோபோபியாவின் அச்சத்தால் பல்வேறுபட்ட தொடர்நிலைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய அடர்த்தியான தாக்குதலை எதிர்கொள்வதற்கான எவ்வித முன்னாயத்தங்களும் இல்லாது, வெசாக் பௌர்ணமி தினத்தை தங்கள் தேசிய கலாசார அடையாளமாக காட்சிப்படுத்தி சரணாகதி அடையும் அளவுக்கு தங்களுடைய கலாசார இறுக்கத்தை தளர்த்திவிட அப்பாவி முஸ்லிம் வெகுஜனம் முன்வந்தமை எமது தலைமுறையின் மிகப்பெரிய கலாசார அவமானமாகும்.
போதாக்குறைக்கு, இந்தக் காட்டுத் தீயானது முஸ்லிம் சமூகத்தின்மீது விளைவித்த இப்பலவீனத்தில் ஏற்பட்ட புகைக்குள்ளே தாங்களும், ஒருமுறை தங்கள் அரசியல் பட்டாசுகளை வெடிக்க வைக்க முயல்கின்றனர் தம் இனத்தையே காட்டிக்கொடுத்த அரசியல்வாதிகள். அதிலும் 51 நாள் அரசியல் கூத்து அரங்கேற்றத்தில் வழிதவறிப்போன முதலாம் சிறுபான்மையின் வெள்ளாடுகளான ஓய்வுபெற்ற பயங்கரவாதிகள் இதன் பிரதான கோமாளிகளாவர். அத்துடன், உலகயே ஆச்சரியத்துள் ஆழ்த்திய மூன்று தசாப்தகால யுத்தத்தின் ஆணிவேரை தனது இருட்டு அறைகளின் சுகபோக சில்மிஷங்களுக்காக காட்டிக்கொடுத்தவர்களும் தங்கள் இனத்தையே அழித்த வெறிபிடித்த சாமிமார்களின் துணையுடன் கல்முனை மாநகரை போர்க்களமாக மாற்ற அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த புதிய பாரம்பரியத்தின் பக்கவிளைவாக, கல்முனை விகாராதிபாதியின் வழிகாட்டலுடனும் ரத்ன தேரரின் ஆசியுடனும் ஞானசார தேரரின் பக்கவாத்தியத்துடனும் ஓய்வுபெற்ற பயங்கரவாதிகளின் துருப்பிடித்த அச்சுறுத்தல்களுடனும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் என்ற கோஷம் கபடத்தனமாக வெளிப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன்கூடிய விடுதலைப் போராட்டம் வலுவிழந்த நிலையில் சாத்வீகத் தலைமைதாங்கும் இராஜதந்திரத்தின் முள்முடி சூட்டப்பட்ட தமிழ்த் தலைமைகளான சட்ட நிபுணர்களை பல வகைகளிலும் அடிபணியச் செய்வதே இப்போக்கின் பிரதான நோக்கமாகும். அவர்களை அடிபணிய வைப்பதன்மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இப்பலவீனமான அரசாங்கத்தின் உச்சந்தலையில் குட்டி பணியவைத்து தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கொடுக்கும் கனவில் ஓய்வுபெற்ற பயங்கரவாதிகள் தாங்களே ஸ்கலிதமாக்கித் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.
அதுமட்டுமன்றி, ஜனநாயக சூழலை அவாவி நின்ற அரசியலை பயங்கரவாதமாக்கி, அதன் ஆட்சியை அழகுபார்த்த ராஜபக்ஷமார்களின் தோற்றுப்போன இனவாத சாணக்கியங்கள் இன்று மீண்டும் புனர்ஜென்மம் பெற்றுவருகின்றன. தென்கிழக்கின் தெருக்கோடிகளில் நின்றுகொண்டு கனாக்காணும் இந்த இந்திரன்களையும் ஈஸ்வரன்களையும் தங்களின் ‘றோல் கோல்ட்’ அரவணைப்புக்களால் மாசாலையாக்கி தாம் அதிகாரத்தை அமுக்கிப்பிடிக்க ராஜபக்ஷக்கள் வலைபின்னுகின்றனர்.
தமிழ் மக்களின் அங்கீகாரத்துடன் ஆட்சியை மீட்டெடுக்கும் அவர்களின் நாசமாய்ப்போன எதிர்பார்ப்புக்களுக்கு இவர்கள் ‘எதை’இழந்தாலும் ஒத்துழைப்பு வழங்கப் போகப்போகின்றார்கள் என்ற அச்சம் சாத்வீக மதியூகிகளான தமிழ்த் தலைமைகளுக்கு தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த அச்சம்தான் உப பிரதேச செயலகத்துக்கான கணக்காளர் நியமனம் என்ற ஒரு சில்லறை விடயத்தை நம்பிக்கையில்லா பிரேணைக்குரிய சமன்பாட்டுச் சீராக்கத்துக்கு காய்நகர்த்தும் மாற்றீடாகப் பாவிக்கப்பட வகைசெய்துள்ளது.
இதனை தங்களின் கூர்மையான உணர்திறன்கள் மூலமாக அறிந்து, அதற்கான மாற்று உபாயங்களைப் பிரயோகிக்காது தங்களை இதயசுத்தியுடன் நேசிக்கும் உப இனக்குழுக்களின் வாத்சல்யமான தலைமைகளின் தன்மானத்தோடு விளையாடும் கபடநாடகத்தை அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தற்போது அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறியுள்ளனர்.
இதன்மூலம் இழக்கப்படப்போகும் தோழமைகளின் நன்னம்பிக்கையும் ‘அறம் கூற்றாகும்’ஆபத்தும் பொருட்படுத்தப்படாத ஒரு நெருக்குவாரத்தில் தமிழ் சாத்வீகத் தலைமைகள் தங்களை அறியாமலேயே, ஆனால் வலிந்து சிக்கியுள்ளன.
இதனாலேதான், நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தில் அக்கறைகொள்ளும் தேரர்மார்களின் வெளிப்படையான வேண்டுகோளையும் மற்றும் 2015இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றம் என்ற பொறிமுறையின் பல்லும் சில்லும் என இயங்கிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளின் தொடர்ச்சியான நேசக்கரங்கiயும் மீறியதுடன், அண்மைக்காலங்களாக அதிருப்தி கொண்டிருக்கும் ஜனாதிபதியின் அன்பான அறிவுரையையும்கூட கௌரவிக்க முடியாமல் போய்விட்டது. மீதியாக இருக்கின்ற காலங்களுக்கு அரசியல் இயல்புநிலையை உறுதிப்படுத்த ஏனையோர்களுடன் ஒத்துழைத்து, அமைச்சுப் பதவிகளைத் திரும்பப்பெறல் என்னும் நிலைப்பாடு மீண்டும் மிகுந்த மனவருத்தத்துடன் கைவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் மேற்படி அனைத்து ஏமாற்றங்களுக்கும் முடிவுகட்டுவான் வேண்டி அமைச்சர் பதவிகளை மீளக் கையேற்பது தொடர்பான பல தீர்மானங்களை நிபந்தனையாக்கி இருக்கின்றது.
கல்முனை, வாழைச்சேனை, தோப்பூர் ஆகிய பிரதேச செயலகங்கள் அடாத்தாக அடர்ந்தேறி வந்து அரசியல் இலாபமடையும் மனிதாபிமானம் அற்றவர்களின் அராஜகமான நிபந்தனைகளுக்கு உடன்படாது, செயற்கையாக ஆயுததாரிகளால் வலிந்தெடுக்கப்பட்ட எல்லைகளை நிராகரித்து பாரம்பரிய எல்லைகளுடன் உருவாக்கப்படல் வேண்டும். அத்துடன் கல்முனை நகரை மையப்படுத்திய சபையுடன் பாரம்பரியமான உள்ளூராட்சி சபைகளும் குறிப்பிட்ட எல்லைகளோடு பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.
மேலும், ஏப்ரல் 21க்குப் பின்னர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களில் மட்டுமன்றி முஸ்லிம்கள் சிதறுண்டு வாழும் பிரதேசங்களிலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை முற்றாக ஒழிக்கப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மிகவிரைவில் மீள்வதற்கு உச்சக்கட்ட வழிமுறைகள் தீவிரமாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.
அத்துடன் ஏப்ரல் 21இன் அனர்த்தத்தை காரணம்காட்டி கைதுசெய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களும் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் சிறைக்கூடங்களிலும் தடுப்புக்காவல் அரண்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருக்கெடுத்தோடும் தாய்மார்களின் கண்ணீருக்கிடையே அமைச்சர்களாக மீண்டும் முடிசூடிக்கொள்ளல் ஒரு முரண் நகையே.
ஆகவே, தடுப்புக்கவலில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்படல் வேண்டும். மற்றும் கைதின் பின்னர் பொதுஅறிவித்தல் மூலம் கோரப்பட்டு முறைப்படுத்தப்பட்ட வாக்குமூல நாடகங்களால் சிக்கி அவதியுற்றுக் கொண்டுள்ள உயர் பதவிகளை வகித்த முஸ்லிம் அதிகாரிகள் திட்டமிடப்பட்டபடியே சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் உடன் கைவிடப்பட்டு அவர்களும் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.
மேலும் புதிய சட்டவாக்கங்கள் என்ற முனைப்பில் முஸ்லிம்களின் கலாசார வாழ்வியல் அனுஷ்டானங்களின்மீது ஏவப்படும் எறிகணைகள் உடனடியாக வாபஸ் வாங்கப்பட வேண்டும். குறிப்பாக மத்ரஸாக்களின்மீதும் தனியார் சட்டங்களின்மீதும் ஒற்றைப் பாதையாகச் செய்யப்பட்ட போர்ப்பிரகடனம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல்கள் அண்மிக்கும்போது சிறுபான்மை மக்களின் கட்சிகளை உடைத்துச் சிதறடிக்க சூட்டோடு சூட்டாக நிகழ்த்தப்படும் வன்முறை அரசியல் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் விதித்துள்ள இந்த இயல்பான நிபந்தனைகளுக்கு சுமுகமாகத் தீர்வு காணப்படும்பட்சத்தில் நமது அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் தேசிய நீரோட்டத்துடன் இணங்கிச்செல்ல முடியும் என்ற பொது ஒப்புதலை வழங்கியுள்ளதாக அறிய வருகின்றது. இந்த தீர்மானங்களை நோக்கி சபையை மு.கா.வின் தலைமை வழிநடாத்தியதால் இவற்றின் பக்கவிளைவாக எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலை நோக்கிய தனியாள் நிகழ்ச்சி நிரல்கள்கூட பூச்சியத்தால் பெருக்கப்பட்டுவிட்டன.
ஓர் அரசியல் கட்சியின் குறுகிய அரசியல் பயணத்தின் பிரலாபங்களாக இத்தீர்மானங்கள் இல்லாது முஸ்லிம் வெகுஜனம் அண்மைக்காலமாக அனுபவித்துவரும் துன்பியல் நாடகத்தின் வேக்காடுகளையே பிரதிபலித்துள்ளன.
முற்காலங்களில் நிகழ்ந்ததனைப்போல தலைப் பாகைகளுக்காக தங்களின் கோவணங்களை அடகுவைக்க முஸ்லிம் மக்கள் இனியும் தயாரில்லை என்பதே அவர்களின் தற்போதைய நிலைப்பாடாகும்.
நன்றி
விடிவெள்ளி
24.07.2019