அண்மைய சம்பவமொன்றில் மகப்பேற்று, பெண்நோயியல் மருத்துவ நிபுணர் சங்கம் மௌனம் சாதித்தது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பெரிதும் வாய்ப்பாக அமைந்து விட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், புதன்கிழமை (21) கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்குபற்றிய பிரதான நிகழ்வொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
கொழும்பு-08 இல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு, கற்கை மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இதனைக் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் நடைபெற்ற சம்பவமொன்றின் போது நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மகப்பேற்று, பெண்நோயியல் மருத்துவ நிபுணர் சங்கத்திற்கு இருந்தது. ஆனால் அச்சங்கத்தினர் மௌனம் காத்தார்கள். அந்த மௌனத்தின் விளைவாக மக்கள் மனங்களில் சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டது மட்டுமல்ல, கௌரவமான வைத்தியத்துறைக்கு அதனால் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. மக்கள் தேவையற்ற மனப்பதிவுகளுக்கு வருவதற்கான பின்புலத்தை அது தோற்றுவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் என்ற முறையில் நாங்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளானோம்.
இந்த சம்பவத்தின் விளைவு இந்த நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு மருத்துவ சஞ்சிகைகளில் கூட அந்த சம்பவம் பற்றிய இட்டுக்கட்டப்பட்ட விடயங்கள் குறித்து விமர்சிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. அத்துடன் நாட்டுக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது.
இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களின் உன்னத ஸ்தானம் உச்சத்தை தொட்டுவிட்ட போதிலும் இவற்றால் பயனடைவர்களில் பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக பலர் இல்லை என்பது கவலைக்கரியது.
கொழும்பு பல்கலைகழக மருத்துவ பீடத்தில் மாலைதீவைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பேராதனை, மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் கடல்கடந்த பீடங்களை மாலைதீவில் அமைப்பதற்கும் அங்கு ஒரு பகுதி பயிற்சி நெறியை மேற்கொண்டு விட்டு அடுத்த பகுதியை இலங்கையில் பிரஸ்தாப பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். எமது பல்கலைக்கழகங்களின் பீடங்களை மாலைதீவில் நிறுவுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் ஒரு தனித்தீவையே ஒதிக்கியிருக்கின்றது. இது தொடர்பான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
மருத்துவபீடங்களுக்கு இவ்வாண்டில் மேலதிகமாக 250 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். றுஹுண பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு மேலும் 100 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக மருத்துவபீடத்தை ஆரம்பித்தோம். அடுத்த வாரம் வயம்ப பல்கலைக்கழகத்திலும் புதிதாக மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சென்ற அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் விடவும் இரு மடங்கு பண ஒதுக்கீடு எங்களது அரசாங்கத்தில் பல்கலைக்கழகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ பின்படிப்பு நிறுவனம் ஆண்டு தோறும் 130 பரீட்சைகளை நடாத்தி வருவது இலேசான காரியமல்ல. அதனை பாராட்டுகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் டீ.எம்.பி.கே.மாயாதுன்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் பேராசிரியர் பீ.எஸ்.எம்.குணரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியை சந்திரிகா என்.விஜயரத்ன, சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.