A+ A-

மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் சந்திப்பு





(ஆதிப் அஹமட்)

மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுடனான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் யூனானி ஆயுர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.ஜலால்தீன், இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.இக்கலந்துரையாடலில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கையின் ஒரேயொரு யூனானி ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் இங்கு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பாரியளவு நிதி ஒதுக்கீடுகளில்  குறைபாடு காணப்படுவதையும்,இவ்வைத்தியசாலையின் விடுதி தேவையினை பூர்த்தி செய்ய மிகவும் பிரயத்தனத்துக்கு மத்தியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் காத்தான்குடி முதியோர் இல்லத்தின் காணி ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டபோதும் விடுதிக்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்ற விடயமும் இதன்போது அமைச்சர் றவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது கருத்த்து தெரிவித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும்,அமைச்சருமான றவூப் ஹக்கீம்,இவ்வைத்தியசாலை விடயம் தொடர்பாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேசி இதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.