A+ A-

சாணக்கியம் சறுக்கியதா?


எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி

அண்மைய தினங்களில் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகவும், அதிக விமர்சனங்களுக்குள்ளான ஒரு செய்தியாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி கூட்டாகப்பதவி துறந்த அமைச்சர்களின் மீள் பதியேற்பு காணப்படுவதை நாம் பார்க்கலாம்.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பதவியேற்றது கட்சிப்போராளிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. மாற்றமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸியினர் பதவியேற்றதை அவர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடியமை குறிப்பிடத் தக்கது.

ரவூப் ஹக்கீம் மீதான விமர்சனத்துக்கான காரணமென்ன?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொருத்தளவில் பலருக்கும் முகவரி கொடுத்த பெருமளவிலான முஸ்லிம் மக்களின் ஆதரவைப்பெற்ற கட்சி மாத்திரமின்றி, முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பிரச்சனைகள் எழும் போது, முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் என்ன செய்யப்போகின்றதென்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுவது தவிர்க்க முடியாதவொன்று. ஏனெனில், எச்சந்தர்ப்பத்திலும் மற்றைய முஸ்லிம் கட்சிகளை விடவும் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் காத்திரமாகச் செயற்படுமென்ற அதீத நம்பிக்கை எல்லோர் மனதிலும் இருப்பதலேயாகும்.

தற்போது போராளிகள் உட்பட ரவூப் ஹக்கீமை ஏன் விமர்சிக்கிறார்கள் என்றால், கடந்த ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டு அச்சுறுத்தலுக்குள்ளான போது, சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்கும் நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தங்களின் அமைச்சுப்பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தார்கள்.

தற்போது இவர்கள் இராஜனாமாச்செய்த பின்னர் அரசாங்கத்திடம் வைத்த சமூகம் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே இவர்கள் மீண்டும் தங்களின் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என்பதுடன், குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சுப் பதவிகளை மீளப்பெறுதல் தொடர்பாக கலந்துரையாடி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கிய பின்னர் தான் அமைச்சுப்பதவிகளை ஏற்பது என்றும் அது வரை அமைச்சுப்பதவிகளை ஏற்காதிருப்பதென்ற முடிவை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த தீர்மானத்தை தலைவர் உதாசீம் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கிறார்கள். இதில் அரசியல் எதிரிகள் கூட இதனை தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைப் பொறுத்தளவில் பதவிகளுக்காக சோரம் போனமை கிடையாது. சமூக விவகாரங்களுக்காக பல தடவை பதவியைத் துறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதுடன், சமூகம் இக்கட்டான நிலைமைகளில் இருக்கும் போது, அதனைப் பயன்படுத்தி மற்றவர்கள் போல் அரசியல் செய்ய முற்படுபவரல்ல.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது மாத்திரமின்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையும் கடுமையாகச்சாடி அரசியல் செய்பவர்களும் இனவாதிகளின் குற்றச்சாட்டுக்குள் மாட்டிக்கொண்டார்கள்.

ஆனால், எந்தக்குற்றச்சாட்டுகளும் இனவாதிகளால் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கெதிராக முன்வைக்கப்படவில்லை. அவர் நினைத்திருந்தால் இச்சந்தர்ப்பத்தை தனக்குச்சாதகமாகப் பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. மாறாக, அவர்கள் மீது சுமத்தப்பட்ட போலியான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்பட்டார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இவ்வாறான சூழ்நிலை ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருந்தால், அவருக்கு உதவி செய்ய இவர்கள் முன்வந்திருப்பார்களா? என்று கேட்டால், நிச்சயமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழிதீர்திருப்பார்கள் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இவைகள் இவ்வாறிருக்க சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மார்க்கத் தலைமைகளுடன் அரசியல் தலைவர்களும் சேர்ந்து இயங்க வேண்டுமென்பதை உணர்ந்து, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்கினார். அதன் பிரகாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் ஒன்றுபட்டனர்.

அதன் பின்னர், முஸ்லிம் பாராளுமன்ற ஒன்றியத்தின் கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் அரசாங்கத்திற்கும் முக்கிய தரப்பினருக்கும் சர்வதேச சமூகத்திற்குமாக விளக்கமளிக்கும் பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு வழங்கப்பட்டது. இந்தச்சந்தர்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்கள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை பரப்பிக்கொண்டிருந்த இனவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, பௌத்த முக்கிய பீடங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தல், பாராளுமன்ற உரைகள், வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்தல் என்பவற்றினூடாக இவ்விடயங்களைச் சிறப்பாக நகர்த்திச் சென்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதன் விளைவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை அரசாங்கம் கவனஞ்செலுத்துவதாகவும், வாக்குறுதி வழங்கி அமைச்சுக்களை பொறுப்பேற்குமாறு அழுத்தங்கொடுத்தது.

ஆனாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அவசரமாக விசாரிக்கப்பட்டு, அவை தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். இந்தப்பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 
இனவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்கள், வர்த்தக நிலையங்கள், முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு நஷ்டயீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்பதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், தோப்பூர் பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக எல்லை தொடர்பான பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவைகள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் பதவிகளை எடுப்பதாகச் சொல்லப்பட்டது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் நாடு ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட்டு முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் பெரிதும் அழுத்தமாக அமைந்ததென்பதுடன், இவர்களை அமைச்சுப் பொறுப்பை ஏற்கச்செய்வதனூடாக அழுத்தத்திலிருந்து விடுபட அரசாங்கம் முயற்சி செய்தது.

ஒற்றுமையினால் சாதித்தது என்ன?

இந்த நாட்டிற்கும் இனவாதிகளுக்கும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. ஆதாவது, அரசியல் ரீதியாக நாங்கள் பிரிந்து செயற்பட்டாலும், சமூகத்தின் பாதுகாப்பு என வரும் போது, ஓரணியாகச் செயற்படுவோம் என்பத்தாகும். அரசாங்கம் குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தொடர்பான விசாரனைகளைத் துரிதமாக விசாரித்து, அவை போலிக் குற்றச்சாட்டுகள் என அறிவித்தது.

அரச துறைகளில் பணியாற்றும் பெண்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பான சுற்றுநிரூபம் முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பாக அமைந்த போது, அதனை மாற்றியமைத்து, புதிய சுற்றுநிரூபம் வெளியிடச்செய்தமை.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்த தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீவிரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

அண்மையில் குருணாகல் பிரதேசத்தில் இனவாதத்தாக்குதல் காரணமாக சேதமடைந்த பள்ளிவாயல்களுக்கு அமைச்சர் சஜித் பிரமதாசா தலைமையில் நஷ்டயீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நஷ்டயீடு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பிரதமர் முஸ்லிம் பாராளுமன்றக்குழுவிடம் உறுதியளித்திருக்கிறார்.

அதே போல, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி பிரதமர் முன்னெடுத்த நடவடிக்கைகள் தற்போதைக்கு தடுக்கப்பட்டு, அவை முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையும், அதனோடு தோப்பூர் பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சனைகளுக்கும் தீர்வைப்பெற்றுத் தர வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், இவை தொடர்பாகவும் அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகிறது.

இவ்வாறு தங்களின் கோரிக்கையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாலும், அரசாங்கம் தொடர்ந்தும் பதவிகளைப் பொறுப்பேற்கக்கோரி வருவதாலும் இன்னுமொரு முஸ்லிம் கட்சித்தலைவர் மீதான குற்றச்சாட்டுப் போலியானதென அரசாங்கம் அறிவித்த நிலையில், வைத்தியர் ஷாபிக்கு பிணை கிடைத்தவுடன், அவர்களின் கட்சித்தலைவர் உட்பட இராஜனாமாச்செய்த உறுப்பினர்கள் பதவிகளைப் பொறுப்பேற்கத் தயாராகி விட்டார்கள் அவை தொடர்பான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட முடிவு பதவியேற்பதற்குத் தடையாக அமைந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரபீடம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதற்கு அனுமதியளித்தது. எனவே, இதனால் இங்கு ஒரு முரண்பாடு தோற்றம் பெற்றது. ஒரு கட்சி ஆதரவாளர்கள் மற்றைய கட்சியை விமர்சனம் செய்யத்தொடங்கினார்கள். இதனால் முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்பட்டது.

எதிரிகள் கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எப்போது உடையுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் கங்கிரஸும் இந்தக்கூட்டிலிருந்து வெளியேறி ஒருவருக்கொருவர் அதிகாரப் போட்டியின் காரணமாக சண்டை பிடித்துக்கொள்வார்கள். இதனால் நாம் காரியம் சாதிக்கலாமென்ற எதிர்பார்ப்பிருந்தது.

எனவே தான், இவ்வாறான பல விடயங்களையும் கருத்திற்கொண்டு ஒன்றுபட்டு முன்னெடுத்த காரியங்கள் நடைபெறாது தடுப்பது சமூகத்தைப் பாதிக்கும் என்பதாலும், அரசாங்கத்தினால் தரப்பட்ட சமூகம் சார்ந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமென்ற பல்வேறு காரணங்களைக் கருத்திற்கொண்டதாகவே இருந்தது.

அதே நேரம், முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் அமைச்சரவைக்கு வரவிருக்கும் சந்தர்ப்பத்தில், அவை தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் இருக்க வேண்டும். அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் இனவாத சிந்தனையுள்ள அமைச்சர்களால் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் தீர்மானங்கள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படலாம் என்பதுடன், வரவிருக்கும் மாகாண சபைத்தேர்தல் தொடர்பான விடயம், பெண்கள் முகமூடுவதைத்தடை செய்யும் விடயம், முஸ்லிம் திருமணச்சட்டம், அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டம் ஆகியவற்றுடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரங்கள் அமைச்சரவைக்கு வரும் போது, ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் அங்கில்லையென்றால், தங்களுக்கேற்றாற்போல் தீர்மானங்களை மேற்கொள்வார்கள். அவை சமூகத்திற்குப் பாதகமாகவே அமையும்.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கேற்ப காலத்தின் அவசியம் கருதியே, தனது அமைச்சுப் பொறுப்பை ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றார். அவசரமான சூழ்நிலையில் தீர்மானமெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கட்சியின் உயர்பீடம் அனுமதியளித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு அமைச்சைப் பொறுப்பேற்க கடந்த திங்கட்கிழமை (29) நண்பகல் நேரம் அழைத்த போதும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உட்பட தங்களின் கோரிக்கைக்கு உரிய தரப்பிடமிருந்து பலமான உத்தரவாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்தி உத்தரவாதங்களைப் பெற்று மாலையில் தனது அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும், இவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்று விட்டார்கள் என்ற நினைப்பில், அரசாங்கம் தங்களின் கோரிக்கை தொடர்பில் கவனமின்றி இருந்து விடக்கூடாதென்பதற்காக இறுதி நேரத்தில் சாணக்கியமாக சில நகர்வுகளை நகர்த்தி இருந்த ரவூப் ஹக்கீம், அந்த நகர்வுகள் மூலம் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான அழுத்தமாகக் காணப்படுகிறது.

அமைச்சைப் பொறுப்பேற்று மறு நாள் அமைச்சரவைக்கூட்டத்திற்கு ரவூப் ஹக்கீம் அவர்கள் சென்ற போது அங்கு முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையை முழுமையாக தடைசெய்வதற்கான அமைச்சரவைப்பத்திரம் நீதியமைச்சர் தலதா அத்துகோரலே அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு உடன் நிறைவேற்றுவதற்கு தயாரான போது, அங்கு ரவூப் ஹக்கீம் அவர்கள் இது முஸ்லிம் சமூகம் சார்ந்தது. எனவே, இதன் உள்ளடக்கங்களை ஆராயாது நிறைவேற்றக்கூடாது.

எனவே, கால அவகாசத்தைக் கோரினார். ஆனாலும், அங்குள்ள சில அமைச்சர்கள் அதனை உடனடியாக நிறைவேற்ற முற்பட்ட போது, தன்னந்தனியாக எதிர்த்தார். அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதூர்தீன் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் எதிர்ப்பின் காரணமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சம்பவமானது அமைச்சரவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வகிபாகம் முஸ்லிம் சமூகத்திற்கு இன்றியமையாதவொன்று என்பதை உறுதிப்படுத்துகிறது. அவரின் சாணக்கியமானது சறுக்கவில்லை இறையுதவியுடன் வெற்றி பெறுமென நம்புகிறோம்.

எனவே, வீணாக விமர்சனங்களை மேற்கொண்டு நமக்காகச்செயற்படும் தலைவரின் மனதை நோகடிக்காது, அவருக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஒற்றுமைப்பட்டு எடுக்கும் முடிவுகளில் நலவுகள் நிச்சயம் இருக்கும்.