(ஆதிப் அஹமட்)
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்ற கோறளை மத்தி பிரதேச செயலகத்துக்கான பூரண அதிகார அமுலாக்கங்களை பெற்றுக்கொள்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஓட்டமாவடி,வாழைச்சேனை பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா,சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,பைஸல் காஸிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர்,தெளபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1999ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பணம்பலன எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணித்தேவையினை முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வைத்ததற்கமைய மாவட்ட முஸ்லிம் மக்களின் காணித்தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கோரளை மத்தி பிரதேச செயலகமானது 240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கொண்டதாக உருவாக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டது.இதே வேளை ஆணைக்குழு ஊடாக மட்டக்களப்பு மாவாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அமைய கோறளை தெற்கு கிரான் பிரதேச செயலகமும் பரிந்துரைக்கப்பட்டது.இதற்கான அங்கீகாரமும் அப்போதைய அமைச்சரவையில் 2000ம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற பிரதிநிதிகள் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையினை சாதகமாக கொண்டு இப்பிரதேச செயலகத்துக்கான முழுமையான அதிகாரங்களை பெற்றுத்தரவேண்டுமென இக்கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது விளக்கமளித்த அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள்,கோறளை மத்தி பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக இதுவரை தான் மேற்கொண்ட விடயங்களை விளக்கியதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற இதே சந்தர்ப்பத்தில் கோறளை மத்தி பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அதன் பின்னர் பிரதமரோடும் இதுதொடர்பிலான விடையங்களை கலந்துரையாடுவதுடன் இதுதொடர்பான நடவடிக்கைகளை தான் தொடராக மேற்கொள்வதாக வாக்குறுதியளித்ததோடு இது தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.