ஜனாதிபதி தேர்தலுக்காக, பிரதான அரசியல் கட்சிகள், தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்ததன் பின்னர், அந்த வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான இயலுமை, அவர்களது கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததன் பின்பே, தமது கட்சி தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று (4) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் என்பது தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யும் தேர்தலாகும். எனவே அந்த வேட்பாளர் தொடர்பில், அவரது தூரநோக்கு, அவரது ஆளுமை தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும். எனவே, அந்த வேட்பாளரை விரைவில் வெளிப்படுத்துவது அவசியமாகும் என நாம் கருதுகிறோம், அது தொடர்பான முடிவு, மிக விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.
முஸ்லிம் வேட்பாளரைத் தனியாக முன்னிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவென்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளின் கொள்கைகள், வெற்றி பெறுவதற்கான பலம் தொடர்பில், நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பு, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புதல், நாட்டின் சுயாட்சியைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, முழு நாட்டினதும் அடையாளாச் சின்னமாக, நாட்டின் ஜனாதிபதி பதவி முக்கியத்துவம் பெறுவதால், நாட்டின் ஏனைய தேர்தல்களை விட, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
நன்றி - தமிழ் மிரர் (05.08.2019)