A+ A-

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை நான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை பைசல் காசிம் தெரிவிப்பு





கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை நான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. தேவையைக் சுட்டிக்காட்டி உதவி கேட்டால் நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.அவர்கள் இதுவரை கேட்ட உதவியை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளேன் இவ்வாறு சுகாரார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.   

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;

2015 இல் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக வந்ததன் பின் சுகாதாரத் துறையில்  புரட்சியே ஏற்பட்டுள்ளது.பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வைத்திய சேவை ஏழைகளுக்கு இலவசமாகவும் முழுமையாகவும் போய்ச் சேர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.48 மருந்துப் பொருட்களின் விலைகளை பெரும் போராட்டத்துக்கு மத்தியில்  குறைத்துள்ளார்.

நாம் அறிந்து மஹரகமவில் மாத்திரமே புற்றுநோய் வைத்தியசாலை இருந்தது.ஆனால்,இப்போது யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய இடங்களிலும் புற்று நோய் வைத்தியசாலைகளைத் திறந்துள்ளார்.

மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலைமூலம் எமது பிரதேச மக்கள் அதிக பயன்பெறுகின்றனர்.அந்த வைத்தியசாலையை மேலும் முன்னேற்றவுள்ளோம்.

இப்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுவானது எமது பகுதி மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நான் இந்தப் பகுதிக்கு மேலும் பல வைத்திய சேவைகளை செய்யவுள்ளேன்.இது தொடர்பில் என்னிடம் எவர் உதவி கேட்டு வந்தாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.அம்பாறை மாவட்டத்தில் நான்கு வருட காலத்துக்குள் 300 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளேன்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் புறக்கணித்துவிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நான் உதவி செய்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.அவரவரின் தேவை என்னவோ அதை நான் செய்து கொடுக்கின்றேன்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ct scanner தேவை என்று சொன்னார்கள்.அதை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாட்டை நாம் செய்துள்ளோம்.-என்றார்.

[ஊடகப் பிரிவு ]