A+ A-

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையில் உறவுப்பாலமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்: அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்



இந்தியா அரசாங்கத்தின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் சுகயீனமுற்று மரணமடைந்த செய்தியைக் கேள்வியுற்று அதிர்ச்சிடைந்தேன். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலமாக திகழ்ந்த இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாட்டு முயற்சிக்கு ஏற்பாட்டாளராக செயற்படுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் எங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று சந்திந்து கலந்துரையாடிய வேளையிலேயே இதுவிடயமாக எங்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டார்.

சுஷ்மா சுவராஜ் அம்மையாரை நான் 2012ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் இலங்கையில் சந்தித்ததோடு, 2018ஆம் ஆண்டு எமது சபாநாயகர் தலைமையில் இந்தியாவில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எத்தகைய வேலைப்பளுவுக்கும் மத்தியில் எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் காணப்பட்ட அவர், மிகவும் புத்துசாதுரியமாகவும் ராஜதந்திரத்துடனும் விடயங்களை கையாள்வதில் சிறந்து விளங்கினார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அவரது வகிபாகம் இன்றுவரை உணரப்படுகிறது. வழக்கறிஞரான இவர் மாநில அரசிலிருந்து மத்திய அரசுவரை முன்னேறி ஒளிபரப்பு, குடும்பநலம், வெளியுறவு ஆகிய பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்துள்ளார்.

இவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.