A+ A-

பாராளுமன்றில் வெள்ளி விழாக்காணும் ரவூப் ஹக்கீம்!


எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.

இலங்கை நாட்டில் பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரே வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் முஸ்லிம் அரசியலைப் பொறுத்தளவில் பல தலைவர்கள் தோன்றி வரலாற்று கதாநாயகர்களாக இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

அவ்வாறானவர்களில் சேர் ராஸிக் பரீத், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், எம்.ஸீ.எம்.கலீல் மற்றும் டாக்டர் டீ.பி. ஜாயா, ஏ.சீ.எஸ்.ஹமீத், எம்.எச்.எம்.அஷ்ரஃப் போன்றவர்கள் முக்கியமானவர்களாகும்.

இவ்வாறன அரசியல் பின்னணியைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் தற்காலத் தலைவர்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக தேசிய, சர்வதேசளவில் பார்க்கப்படும் ஒரு தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மக்கள் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  25 வது வருடங்கள் பூர்த்தி செய்து வெள்ளி விழாக்காணுகிறார்.

               யார் இந்த ரவூப் ஹக்கீம்? 

கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டியில் இஸ்லாமிய பாரம்பரியங்களைக் கொண்ட குடும்பத்தில் அப்துல் ரவூப்  ஹாஜரா தம்பதிகளுக்கு 1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் நாள் அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீம் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியாகவும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

               அரசியல் பிரவேசம்...

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கட்சியாக தோற்றம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே அரசியலுக்குள் பிரவேசித்தார். இவர் முதல் முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரபை  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டார். அதன் பிற்பாடு ரவூப் ஹக்கீம், அஷ்ரபின்   சமூக உணர்வுகளால் கவரப்பட்டு அவரின் அரசியல்  பயணத்தில் 1988 இல் இணைந்து கொண்டார். 

 ரவூப் ஹக்கீமின் மொழித்திறமை கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அவரின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி 1992 இல் வழங்கப்பட்டது. 

1994 ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேர்தல்  உடன்படிக்கை செய்து கொண்டது. இத்தேர்தல் வெற்றியின் பின்னர் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியலூடாக ரவூப் ஹக்கீம் முதன் முதலாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார். இந்தச்சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த ரவூப் ஹக்கீமின் வாழ்வில் திருப்புமுனையாக திடீரென்று ஏற்பட்ட தலைவர் அஷ்ரபின் மரணம் அமைந்தது. ஆம், 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் அஷ்ரப் மரணித்த போது, முஸ்லிம் சமூகம் மீளாத்துயருக்கு ஆளானது. இத்துயரிலிருந்து விடுபட்டு தலைவரின் வழியில் கட்சியையும் போராளிகளையும் வழிநடாத்திச் செல்லும் பொறுப்பை கட்சிப்போராளிகள் பல சவால்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்தார்கள். இதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இன்றுவரை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்துகிறார்.

 அஷ்ரபின் மரணத்தின் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில்  தேசிய ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அதன் பின்னர் அமைக்கப்பட்ட சந்திரிக்கா பண்டார்நாயக்க குமாரதூங்க அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீம் உள்ளக மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 இவ்வாட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற மாவனல்லை கலவரத்தைக் கண்டித்து செயற்பட்டதனால் அமைச்சரவையிலிருந்து ரவூப் ஹக்கீம் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவால் நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கியது. இதன் காரணமாக, ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி பாராளுமன்றத்தை கலைத்தார். பின்னர் மீண்டும் 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அதன் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் கப்பல்துறை, துறைமுக அபிவிருத்தி, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் தனித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவானார்.
பொதுத்தேர்தலின் பின்னர் சந்திரிக்கா தலைமையில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அமைந்தது. இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர்ந்தது.

பின்னர் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவராகவும் ஜனாதிபதியுமாக இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில்  முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக, ரவூப் ஹக்கீம் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த அரசாங்கத்திலிருந்து குறுகிய காலத்திலேயே வெளியேறி எதிர்க்கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் அமர்ந்து, முஸ்லிம்களின் குரலாக எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்துச் சென்றது.

வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாண சபைத்தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்த போது, பல சவால்களை எதிர்கொண்டது.இதன்போது அதனை முறியடிக்கும் நோக்கில் ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜனாமா செய்து, கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன்  இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலூடாக மீண்டும் அதே வருடம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் பின்னர் ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் அதனைத்தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலித்தது. அதாவது, முஸ்லிம் சமூகத்தைப்பாதுகாப்பதில் தவறிழைத்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு ஆதரவை வழங்கியது. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களுடன் உடன்பட்டுச் செயற்பட்டார்கள்.

இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டு, பிரதமாராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு, நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் போது நூறுநாள் திட்டம் அமுல் செய்யப்பட்டது. இக்காலப்பகுதிக்கு என அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு தேசிய அரசாங்கம் அமையப்பெற்று இரண்டு வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கு பிளவேற்பட ஆரம்பித்தது. ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் விரிசல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை பதவி விலக்கி மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்தார். இதன் காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் நாட்டின் ஜனநாயகத்தையும், பாராளுமன்ற அதிகாரத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டார். இவ்வாறு ஏற்பட்ட குழப்பம் 52 நாட்களுடன் முடிவடைந்து ஜனநாயகம் வெற்றி பெற்றது. பிரதமராக மீண்டும் ரணில் விக்கிர சிங்க நியமிக்கப்பட்டு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. இவ்வரசாங்கத்தில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவ்வரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தவில்லையென்பது இவ்வரசாங்க காலத்திலும் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சனைகளை எதிர்கொண்டதை நாம் பார்க்கிறோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி தங்களின் அமைச்சுப்பதவிகளை இராஜனாமாச் செய்தவர்களில் முதன்மையானவராக ரவூப் ஹக்கீம் செயற்பட்டார் என்பதோடு, பிரச்சனைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதில் காத்திரமாகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலமைகள் சற்று தனிந்த பின்னர் அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மீண்டும் தங்களுடைய அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு 1994 ஆம் ஆண்டு தொடர்க்கம் இன்று வரை சுமார் 25 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், சிறுபான்மைச் சமூகத்திற்காகவும் அமைச்சர் ஹக்கீம் குரல் கொடுத்து வருகின்றார்.