A+ A-

முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விட நிம்மதியையே எதிர்பார்க்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்





அபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. சீர்குழைந்துள்ள இயல்பு வாழ்க்கையை மீட்டிக்கொள்வதற்கான தருணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பன்னவ சந்தி – லோலன்வௌ வரையிலான வீதி மற்றும் பன்னவ கிராமிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை (28) திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருந்தால், எமது தீர்மானம் எந்த விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஆராயவேண்டும். அந்த தெரிவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனிநபர்களைப் பொறுத்த விடயமல்ல. சமூகம் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுத்தாக வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகங்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கின்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டன. இதன் விளைவாக நாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இனியும் இந்தமாதிரியான நெருக்கடிகள் வரமாட்டாது என்பதற்கு எங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இப்படியானதொரு சூழலில்தான் நாங்கள் தீர்மானமிக்க இன்னுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பேராபத்துதான் எங்களது மனதில் நிலைத்திருக்கும். அதேமாதிரியான ஒரு பயங்கரவாதத்தையே ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த நாட்டில் நடத்தினார்கள். அதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். அதில் உயிர்கள் கொலை செய்யப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. இப்படியான அட்டகாசங்கள் நடந்ததை நாங்கள் மறந்துவிட முடியாது.

நான் 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் நடத்திய அட்டாகசத்தை நான் வேறெந்த நாளும் கண்டதில்லை. பாராளுமன்றத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் நடந்தாலும், இப்படியொரு ஜனநாயக மீறல் அட்டூழியம் நிகழ்ந்ததை யாரும் பார்க்கவில்லை.

நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருந்த காரணத்தினால் நாங்கள் எல்லோரும் தைரியமாக வாதாடி, சட்டவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தோம். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் தற்துணிவைப் பாவித்து, பின்கதவால் ஆட்சியை பறிக்க வந்தவர்கள், இப்போது முன்கதவால் ஆட்சியைத் தாருங்கள் என்று உங்கள் முன் வந்திருக்கிறார்கள். இவர்களை நாங்கள் தெளிவாக அடையாளம்காண வேண்டும்.

இந்த அரசாங்கம் செய்தது போதாது. அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், ஊழல்கள் என்று பல கதைகள் வந்தாலும், எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இருப்பது நாட்டின் பாதுகாப்பு. இதைத்தான் எல்லோரும் தேர்தலில் தூக்கிப் பிடிப்பார்கள். பயங்கரவாத்தை இனி தலைதூக்க விடமாட்டோம். எல்லோரும் புதர்களுக்குப் பின்னாலும் பிசாசைப் பார்ப்பதுபோல் மாறிவிட்டது. அதிலும் முஸ்லிம் சமூகத்துக்குள்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாத கும்பலை கூலிக்கமர்த்திய சக்திகள் யார் என்பதையும் நாங்கள் அடையாளம் காணவேண்டும். இது வெளியிலிருந்து கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு கும்பல். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், நாங்கள் எங்களுக்குள் ஒரு சுயவிமர்சனம் செய்து இனிமேல் இதுபோன்ற விடயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதற்கு மற்றவர்களைவிட நாங்கள் உசாராக இருக்க வேண்டும்.

இப்படியான சூழலில் எங்களுடைய வேட்பாளர் தெரிவில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். எங்களால் மட்டும்தான் ஒழுக்கத்தையும், புதுவிதமான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க முடியும். நாங்கள்தான் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற ஆட்களினால் அவற்றை செய்ய முடியாது. நாங்கள் பீதியும் பயமும் உள்ளதொரு வாழ்க்கைக்கு மீண்டும் செல்லமுடியாது.

தற்போதைய அரசாங்கத்திலும் எங்களுக்கு பெரியதொரு நிம்மதி இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அளுத்கம, பேருவளை சம்பவங்களை காரணம்காட்டி அரசாங்கத்தை மாற்றினோம். ஆனால், திகன, கண்டி, அம்பாறை, குருநாகல், புத்தளம் போன்ற இடங்களில் அடி வாங்கினோம். இந்த அரசாங்கம் தொடர்பில் திருப்திப்படுவதற்கு எங்களுக்கு எந்த விடயங்களும் இல்லை.

எங்களது அமைச்சர்கள் எல்லோருமாக ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்துதான், எங்களுக்கு எதிரான அர்த்தமில்லாத பழிகளை ஓரளவுக்கு சமாளித்தோம். எங்களுக்கெதிராக மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் கூட்டாக பதவிகளைத் துறந்தோம்.

எங்களுக்கு இந்த அரசாங்கத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது. ஆனால், ஒரு குழுவாக இருந்து சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நிறைய படிப்பினையை நாங்கள் படித்திருக்கிறோம். இவ்வளவு அராஜகம் செய்த கும்பல் இப்போது எந்த தரப்பிலிருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னர்தான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

முன்னைய யுகங்களைவிட பல மடங்கு துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். ஆனால், கடந்த ஒரு வருட காலமாக அனுபவித்த கஷ்டங்களுக்குப் பின்னாலிருக்கும் சக்திகள் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு திட்டம்போட்டு செய்த சதிகளில் நாங்கள் எல்லோரும் மாட்டிக்கொண்டோம்.

சமூகத்துக்கு இதுவரை காலமும் இருந்துவந்த சுதந்திரங்களை பறிக்கவேண்டும் என்ற நோக்கில் இப்போது மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்று பேசுகின்றனர். வேட்பாளர்கள் இப்படியான பிரசாரங்களையே முன்னெடுத்து வருகின்றனர். இவற்றை முறியடிப்பதற்கு எங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டும். எங்களுடைய வாக்குகளை ஒன்றுதிரட்டி இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.