A+ A-

பல்வேறு பாத்திரங்களில் தனிமனிதனாக சாதித்தவர் ஏ.எச்.எம். அஸ்வர்: நினைவேந்தல் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
- எப்.பஸ்னா ஆதீப்

பல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரை மட்டுமே காணமுடியும். அவர் பல்வேறுபட்ட பாத்திரங்களில் தனியொரு மனிதனாக நின்று சாதித்து காட்டினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மறைந்த ஏ.எச்.எம். அஸ்வரின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (30) கொழும்பு வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் மேலும் கூறியதாவது;

பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். அது மட்டுமன்றி, பல்வேறு சமூக அமைப்புகளில் இயங்குநிலை உறுப்பினராக இருந்து பாரிய சமூக பணிகளை புரிந்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாகட்டும் அல்லது பிரதமராகட்டும் அவர்களை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆகவேண்டிய நன்மைகளை பெற்றுக்கொடுப்பதில் அவர் முன்னிலை வகித்தார்.

அவரின் இறுதிகால கட்டத்தில் குறிப்பாக இரண்டு வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு ஒரு நெருக்கமான உறவை பேணினார். அக்காலம் முஸ்லிம்களை பொறுத்தவரை பல்வேறு நெருக்கடிகள் நிறைந்த காலகட்டமாக இருந்தது. அக்காலத்தில் நிகழ்ந்த நெருக்கடிகளை பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தவர்களும் எதிர்மறையாக அணுகியபோதிலும், அஸ்வர் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவோடு கூடவிருந்து பெரும் ஆபத்துகளிலிருந்து சமூகத்தை பாதுகாத்தார்.

கடைசி நிமிடங்களில் அஸ்வர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் வைத்தியசாலையில் அவரின் அருகே தன்னுடைய கரங்களை கோர்த்தவாறு நின்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ மிகவும் துயருற்றவராக காணப்பட்டார். தன்னுடைய ஆத்மார்த்த நண்பரொருவரை இழக்கின்ற துர்ப்பாக்கியமான ஒரு சோகம் அவரின் முகத்தில் குடிக்கொண்டிருந்தது.

அவருடன் தொடர்பு கொண்டிருந்த எல்லோருமே கட்சி பேதங்களுக்கு அப்பால் அவரை மிகவும் நேசித்தனர். இலங்கையில் தலைசிறந்த முஸ்லிம் தலைவர்களாக கருதப்பட்ட எம்.எச். முஹம்மட், பார்க்கீர் மாக்கார், ஏ.சி.எஸ். ஹமீட் உட்பட அனைவருடனும் அஸ்வருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது.

அத்தகைதொரு ஆளுமை நிறைந்த சமூகத் தலைமையை நாம் இழந்திருக்கிறோம். ஆட்சிபீடத்தோடு தனக்கிருந்த நெருக்கத்தை ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கு உதவியை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த மிகப்பெரிய ஆளுமை தனக்கென்று எதனையும் சேமித்து வைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். ஆனால் உண்மையாகும்.

அவருடைய நண்பர்கள் மட்டுமன்றி, அவரது எதிரிகள்கூட அவரின் உன்னதமான நற்பண்பை வியந்து பாராட்டுகின்றனர். இத்தகைய பண்பு பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் காணப்பட்டிருக்கவில்லை. அந்த விதத்தில் அஸ்வர் உச்சமான மதிப்பை எல்லோரிடமும் பெற்றிருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த அஸ்வரை நான் முதன்முதலாக பார்த்த அனுபவமானது மறக்க இயலாதது. கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஷாபி மரிக்கார் தலைமையில் இடம்பெற்ற அகில இலங்கை கல்வி மாநாடு கூட்டங்களில் ஒன்றையேனும் தவறவிடாமல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கலந்து கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக இருந்து அவர் சாதித்த விடயங்கள் ஏராளமானவை. முஸ்லிம் சமய, கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்தபோது முஸ்லிம் கலைஞர்களை பட்டமளித்து கௌரவிக்கும் விடயங்களில் மிகச் சிறப்பாக செய்தார்.

அவர் அதிகமான அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார். ஆகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளம், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர்கள் சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், விளையாட்டு அமைப்புகள், முஸ்லிம் கல்விசார் அமைப்பு போன்ற பல வகையான அமைப்புகளிலும் அவர் அங்கம் வகித்துள்ளார்.

அவர் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய பின்னணி, வரலாறு பற்றி பக்கம் பக்கமாக பேசமுடியும். அவ்வாறே அஸ்வரின் பாராளுமன்ற உரைகளை எடுத்து நோக்கினால், அவருடைய கோட்பாடுகளை ஆணித்தரமாக நிறுவுவதற்காக அல்குர்ஆன் உட்பட பகவத்கீதை, பைபிள், திரிபீடக போன்ற அனைத்து மத வழிபாட்டு நூல்களிலிருந்தும் அடிக்கோடிட்டு காட்டுவார். தனது கருத்துகளை மிகவும் அறிவுபூர்வமாகவும், காரசாரமாகவும் முன்வைக்கும் திறமை கொண்டவர்.

மும்மொழிகளிலும் சரளமாக உரையாடுவது அவருக்கு கிடைத்த பாக்கியம். பாராளுமன்றத்தில் பணிபுரியும் ஹன்சார்ட் மொழிபெயர்ப்பாளர்களை பொறுத்தவரை, அஸ்வர் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார். ஒரு மொழியில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென இன்னொரு மொழிக்குள் சென்றுவிடுவார். இவ்வாறான அவரது உரைகளை பாராளுமன்ற ஹன்சார்ட்களைப் பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம்.

பாராளுமன்றத்தில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும்போது தொடர்ந்தும் பேசவிடாமல் குளப்பிக்கொண்டே இருப்பார். ஆனாலும், பாராளுமன்ற கூட்ட நேரங்களை தவிர்த்து இதர நேரங்களில் பாராளுமன்றத்துக்குள் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் தோளில் கையை போட்டுக்கொண்டு ஒய்யாரமாக கதைத்துக்கொண்டு வருவார்.

அவருடைய மறைவு எமது முஸ்லிம் சமூகமே முகம்கொடுக்க நேரிட்ட இழப்பாகும். ஆரவரமில்லாமல் சாதித்த அரசியல்வாதி என்று அவரை இனம்காணலாம். சாதாரண அரசியல்வாதியைப்போல் நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பேசித் திரியாமல், முக்கியமாக மூன்றாம் நபருக்கு எட்டப்படாமல் காரியங்களை செய்துமுடிப்பார்.

நாட்டின் அதிகாரங்கள் குவிந்திருந்தவர்களோடு நெருங்கிப் பழகிய காரணத்தினால் எத்தனையோ பேரை, எத்தனையோ நாட்டுக்கு ஜனாதிபதியிடம் இனம்காட்டி வெளிநாட்டு தூதுவராக அனுப்புவதற்கு அஸ்வர் உதவி செய்துள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் தூதுவராக இருந்ததில்லை. இதனை அவர் ஒருபோதும் தம்பட்டம் போட்டுக் காட்டியதில்லை.

ஒளிவு மறைவில்லாத அவரது பேச்சுகள் ஒரு சிலருக்கு ஒரு சில சந்தர்ப்பங்களில் எரிச்சலைத் தந்திருக்கலாம். தான் சார்ந்த தரப்பை பாதுகாத்து பேசுவதிலே அவருக்கு நிகர் அவரேதான். அதனை அவர் மிக நேர்த்தியாக கையாண்டார். எமது சமூகத்தில் அதிகமானோரிடம் சகிப்புத்தன்மை இல்லாமையினால் பிழையான கண்ணோட்டங்களில் கண்டு விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர் எமது சமூக விவகாரங்களில் செலுத்திய அக்கறை அளவிடமுடியாத விடயம். அதுமாத்திரமல்ல, மாசுபடையாத கரங்களை கொண்ட ஓர் அரசியல்வாதி என்றால் அஸ்வரை சுட்டிக்காட்டலாம். இதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அவர் எளிமையாக வாழ்ந்த அரசியல்வாதியாவார். எங்கும் சொத்துச் சேர்க்கும் ஆசையில்லாத ஒரு மனிதனாக வாழ்ந்தார். மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு அரசியல்வாதியைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்கிறோம்.

ஒருவரின் இழப்பின் பின்னர்தான் அவருடைய பெறுமதியை உணர்வார்கள். அந்தவகையில், இன்று அஸ்வருடைய நண்பர்கள் வட்டம் இவ்வாறானதொரு ஞாபகார்த்த சொற்பொழிவு நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்தமையானது பாராட்டத்தக்கது என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்