- மர்சூக் அகமட் லெவ்வை
எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேட்பாளர் என்ற புதுக் கோட்பாட்டோடு ஹிஸ்புல்லா புறப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியை வாக்காளர்கள் தெரிவு செய்வதைவிட வேட்பாளர்கள் தெரிவு செய்யும் காலமிது. இதற்காக இவர் தான் ஒரு 3 லட்சம் வாக்குகளை திரட்ட இருப்பதாகவும், சென்றமுறை நாலரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் மைத்திரி தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், இந்தக் கணக்கின் அடிப்படையில் தனக்குக் கிடைக்கும் 3 லட்சம் வாக்கானது ஒரு ஜனாதிபதியை வெற்றியடையச் செய்யும் வாக்குகளாக இருப்பதாகவும் பாமர மக்கள் மத்தியில் ஹிஸ்புல்லா கணக்குக் காட்டுகின்றார். அதாவது எந்த வேட்பாளரும் 50% இற்கு அதிகமான வாக்குகளை பெற மாட்டார்கள் என அடித்துக் கூறுகின்றார் ஹிஸ்புல்லா.
சென்ற உள்ளூராட்சித் தேர்தலில் மொட்டு 50 லட்சம் வாக்குகளை பெற்றது. மைத்திரி அணியினர் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றனர். இப்போது இருவரும் சேர்ந்திருப்பதால் கோட்டாவுக்கு 65 இலட்சம் வாக்குகள் இலகுவாகக் கிடைக்கும் என்று ஹிஸ்புல்லா சொல்கின்றார். ஹிஸ்புல்லா சொல்கின்ற இந்தக் கணக்கு உண்மை என்று ஒரு எடுகோலுக்காக எடுத்துக்கொண்டாலும் கோட்டா 65 லட்சம் வாக்குகளைப் பெற்றால் 50% இற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விடுவார். 50% வாக்குகள் கோட்டா பெற்றால் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்குகள் தேவைப்படாது. ஹிஸ்புல்லாவின் கணக்குப்படி கோட்டா 65 லட்சம் வாக்குகளை பெற்றால் 50% வாக்குகளைப்பெற்று கோட்டா தெரிவுசெய்யப்படுவார். இங்கே ஹிஸ்புல்லா ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்கு ஹிஸ்புல்லாவின் தேவைப்பாடு தேவைப்படாது.
மேலும் சென்ற தேர்தலில் நாலரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் மைத்திரி வென்றார். இம்முறையும் நாலரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் ஒரு ஜனாதிபதி வெற்றிபெறுவார் என கணக்கு காட்டுகின்றார். சென்றமுறைக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த வென்றார். இவ்வாறு பாரிய வித்தியாசத்தில் ஜனாதிபதி செல்கின்றபோது ஹிஸ்புல்லா முழு முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த வாக்குகளைப் பெற்றாலும் தீர்மானிக்கின்ற சக்தியாக வர முடியாது.
எவரும் 50% ஆன வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்றும், வெற்றி தோல்வி நாலரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் இருக்குமெனவும் ஆருடம் கூறுகின்றார். ஹிஸ்புல்லாவால் எவ்வாறு இவ்வாறு கூறமுடியும்? சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வெறும் 45 வாக்குகளினால் ஹிஸ்புல்லா தோற்கடிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் தான் 45 வாக்குகளினால் தோற்கடிக்கப் படுவோம் என இவரினால் அனுமானிக்க முடியாமல் இருந்தது.
ஹிஸ்புல்லாவுக்கு 45 வாக்குகளினால் தான் தோற்கடிக்கப் படுவோம் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் இந்த 45 வாக்குகளுக்கும் ஒரு வாக்குக்கு ஒரு கோடி ரூபா கொடுத்து 45 வாக்குகளுக்கும் 45 கோடி ரூபாய் கொடுத்து அவரினால் வெற்றி பெற்றிருக்க முடியும். இது தெரியாதவர் தற்போது மூன்று லட்சம் வாக்குகள் தனக்குக் கிடைத்தால் தான் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதாக கூறுகின்றார். இது மாத்திரமல்லாமல் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் எப்படியும் மஹிந்த வெல்லுவார் என்று கணிப்பீடு செய்து, முழு முஸ்லிம் சமூகமும் மைத்திரியை ஆதரிக்கும் போதும் மஹிந்தவை ஆதரித்து தோல்வி கண்டார். இதைக் கூட ஹிஸ்புல்லாவினால் கணிக்க முடியாமல் இருந்தது.
கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக பதவி ஏற்கும்போது தான் ஒரு வருடத்திற்கு மாத்திரம் தான் ஆளுநராக இருக்கப் போவதாகவும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டார் ஆனால் இவரின் ஆல் 5 மாதங்கள் கூட ஆளுநர் பதவியை பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்தார் இதனைக் கூட முன்கூட்டியே இவரினால் கணிப்பிட முடியாது இருந்தது.
ஒக்டோபர் சதியில் அதாவது 52 நாட்கள் சதியில் முஸ்லிம் தலைமைகள் எல்லாம் பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டனர். ஆனால் இதற்கு மாற்றமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சையும் பெற்றார். தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பௌசி கூட ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டார். ஹிஸ்புல்லா எஞ்சிய இரண்டு வருடங்களுக்கும் மஹிந்த பிரதமராக இருப்பார் என கணிப்பிட்டு இருந்தார். இந்தக் கணிப்புக் கூட இவருக்கு பிழையான கணிப்பாகியது.
பொதுபல சேனா தலைவர் ஞானசார ஹாமதுருவை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையின் பேரில் வெளிவந்த ஞானசார ஹாமதுரு வந்து மறுதினம் ஹிஸ்புல்லா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதற்கு 12 மணி நேரம் காலக்கெடு விதித்தார். அத்துரலியே ரத்தன ஹாமதுரு ஏற்கனவே 48 மணி நேரம் ஹிஸ்புல்லாவுக்கு கால அவகாசம் வழங்கிய நிலையில் அதனை 12 மணி நேரமாக குறைத்தவர் ஞானசார ஹாமதுரு. தனது கோரிக்கையின் பேரில் விடுதலையான ஞானசார ஹாமதுரு விடுதலையானவுடன் முதன்முதலாக தனது ஆளுநர் பதவியைப் பறிப்பார் என ஹிஸ்புல்லாவினால் முன்கூட்டியே கணிப்பிட முடியாது போனது.
ஞானசார ஹாமதுருவை ஹிஸ்புல்லா விடுதலை செய்யக்கோரி விடுதலை செய்தது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வையும் ஹிஸ்புல்லா தனது காலுக்கு கீழ் போட்டு மிதித்தார் என்பதேயாகும்.
இவ்வாறு கடந்த சில வருடங்களில் நடைபெற்ற பல விடயங்களை ஹிஸ்புல்லாவினால் கணிப்பிட முடியாமல் போயுள்ளது. இவர்தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்றும், பிரதான வேட்பாளர்களுக்கிடையான வாக்கு வித்தியாசம் நாலரை லட்சம் ஆகும் என்றும் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.
தற்போது "முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தருகின்றார்கள். நான் அவ்வாறு செயற்பட முடியாது. இரண்டு வேட்பாளர்களிடமும் பேசி, ஒப்பந்தம் பண்ணி எவர் கூடுதலாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைத் தர முன்வருகிறாரோ அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வேன்" என ஹிஸ்புல்லா கூறுகின்றார். அவ்வாறு எவர் முன்வந்தார் என்பதை எதிர்வரும் 2ஆம் திகதி அறிவிப்பேன் என்கின்றார். இப்போது என்ன பேசவிருக்கிறார், என்ன ஒப்பந்தம் செய்யவிருக்கிறார் என்பது இதுவரைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படவில்லை.
ஹிஸ்புல்லா நேரடியாகப் பேசுவார் என்றும் சொல்லப்படுகின்றது அல்லது சிவில் சமூகத்தின் ஊடாக இந்த வேட்பாளர்களிடம் பேசுவார் என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு பேசுகின்ற சிவில் சமூகம் யார் என்பது இதுவரைக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. சிவில் சமூகத்தின் ஊடாகப் பேசி, வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் பண்ணி தேர்தலின் பின் வெற்றி பெற்றதன் பின் தான் அவ்வாறு சிவில் சமூகத்திடம் கூறவில்லை என ஹிஸ்புல்லாவினால் வெற்றிபெற்ற ஜனாதிபதி கூறினால் இவர் என்ன செய்வார்? எதிர்வரும் 2ஆம் திகதி 2ஆம் இலக்கத்தை யாருக்கு வழங்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்திற்கு அறிவிக்க இருப்பதாக ஹிஸ்புல்லா கூறுகின்றார். அதாவது வெற்றி பெறுகின்ற வேட்பாளர் யார் என்பதை கணித்து அந்த வேட்பாளருக்கு இரண்டாம் இலக்கத்தை வழங்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்தைக் கேட்க இருப்பதாகவும் கூறுகின்றார். 2ஆம் திகதியே வெற்றிபெறும் வேட்பாளர் யார் என்பதை ஹிஸ்புல்லா அனுமானித்து விடுவாரா?. ஹிஸ்புல்லாவுக்கு ஊர் ஊராக சென்று இந்த கணிப்பை செய்பவர்கள் யார்?.
இந்தத் தேர்தலிலே இவர் எதிர்பார்க்கின்ற 3 லட்சம் வாக்குகளையும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து ஹிஸ்புல்லாவுக்கு கிடைக்கப்பெறுமா? தேசிய ரீதியாக வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்ற முஸ்லிம் கட்சிகளுக்கு கூட இந்த அளவு வாக்குகள் கிடைப்பதில்லை. தேசிய ரீதியாக செயற்படாத காத்தான்குடிக்கு மாத்திரம் சேவை செய்கின்ற ஹிஸ்புல்லாவுக்கு மூன்று இலட்சம் வாக்குகள் கிடைக்கப் பெறாது. வழக்கமாக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்ற வேட்பாளர்களான இல்யாஸ், ரசூல் என்பவர்களுக்கு முஸ்லிம் என்ற ரீதியில் 20000 வாக்குகள் வழக்கமாக கிடைக்கப்பெறும். அந்த வாக்குகள் இம்முறை ஹிஸ்புல்லாவுக்குக் கிடைக்கும்.
மேலும் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவுக்கு 8000 வாக்குகள் கிடைக்கும். ரவூப் மௌலவி ஹிஸ்புல்லாவை ஆதரித்தால் மாத்திரம்தான் 8000 வாக்குகள் காத்தான்குடியில் கிடைக்கும். ரவூப் மௌலவி ஆதரிக்காவிட்டால் இந்த 8000 வாக்குகளும் குறைந்துவிடும். மேலும் ஆங்காங்கே கிடைக்கப்பெறும் வாக்குகளைப் பார்க்கும்போதும் 40 000 வாக்குகள் ஹிஸ்புல்லா மொத்தமாகப் பெறுவார். இவ்வாறெல்லாம் ஹிஸ்புல்லா திட்டமிட்டு, இரண்டாவது விருப்பு வாக்கை தன்னுடைய ஜனாதிபதி வேட்பாளருக்கு வழங்கி, தான் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய நடவடிக்கைகள் எடுத்து வரும்போது தேர்தல் ஆணையாளர் புதிய சட்டத்தை அறிவித்திருக்கின்றார். அதாவது ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. அவ்வாறு வேறு ஒரு வேட்பாளருக்கு அந்த வேட்பாளர் தேர்தலில் வேலை செய்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையோடு எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார். எனவே ஹிஸ்புல்லா 2ஆம் திகதி 2ஆம் இலக்கத்தை அளிப்பது யாருக்கு என்ற விடயமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அதுமாத்திரமல்லாது வாக்கு எண்ணும் போது 50% ஒரு வேட்பாளரும் பெறாத பட்சத்தில் இரண்டாவது வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் போது முதல் இரண்டு இடங்களையும் பெற்ற வேட்பாளர்களைத் தவிர்ந்து மற்ற 33 வேட்பாளர்களினதும் வாக்குச் சீட்டில் 2ஆம் 3ஆம் விருப்பத்தேர்வைப் பயன்படுத்திய வாக்குச்சீட்டுகளை தெரிவு செய்வார்கள். இவ்வாறு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளைத் தெரிவு செய்யும் போது ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்த வாக்குகளில் எத்தனை வாக்குகள் 2ஆம் விருப்பத் தெரிவாக ஹிஸ்புல்லா 2ஆம் விருப்பத் தெரிவிக்கு தெரிவு செய்திருக்கும் வேட்பாளருக்கு வழங்கியிருக்கின்றார்கள் என்பதை தனியாக எண்ண மாட்டார்கள்.
இரண்டாம் எண்ணிக்கையின்போது 33 வேட்பாளர்களின் வாக்குகளையும் மொத்தமாக கலந்து இதில் எத்தனை வாக்குகள் பிரதான வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்றுதான் கணிப்பீடு செய்வார்கள். ஹிஸ்புல்லா சொல்வதுபோல் ஹிஸ்புல்லாவுக்கு விழுந்த வாக்குகளில் 2ஆம் விருப்ப தெரிவு எத்தனை வாக்குகள் விழுந்திருக்கிறது என்ற தகவல் ஒருபோதும் தனியாக ஹிஸ்புல்லாவின் வாக்கை எண்ணி வெளியிடமாட்டார்கள். எனவே ஹிஸ்புல்லா ஊடாக எத்தனை வாக்குகள் பிரதான வேட்பாளருக்கு கிடைத்தது என்பது தெரிய வரவே வராது. வாக்கு எண்ணும் முறை இவ்வாறு இருக்கும்போது தனது வாக்கினால் தான் ஜனாதிபதி தெரிவானார் என எவ்வாறு ஹிஸ்புல்லாவினால் உரிமை கோர முடியும்?
எனவே ஹிஸ்புல்லா தான் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் போது இல்லாத இரண்டு புதிய சட்டங்களினால் ஹிஸ்புல்லாவின் திட்டம் பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மற்ற வேட்பாளருக்கு வாக்குக் கேட்க முடியாது. ஒரு வேட்பாளர் மற்ற வேட்பாளருக்கு தனது இரண்டாவது விருப்ப தேர்வாக எத்தனை வாக்குகளை பெற்றுக் கொடுத்தார் என்பதை தனியாக அறியமுடியாது என்ற புதிய சட்டங்கள் வந்த பின்பும் ஹிஸ்புல்லா தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வாக்குகளை சேகரிப்பாராக இருந்தால் அது சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்தைத் தவிர வேறு காரணமாக இருக்கமுடியாது.
எனவே ஹிஸ்புல்லா இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் எந்தப் பலனையும் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. ஆனால் சஜித்துக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை இவ்வாறு தான் கேட்பதால் அந்த வாக்குகளை சஜித்துக்கு கிடைக்காமல் செய்யலாம். இதனால் முழு முஸ்லிம் சமூகமும் சஜித்தின் வெற்றியை எதிர்பார்த்திருக்கின்றபோதும் அந்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பில் ஒரு லொறி மண்ணை அள்ளிக் கொட்டிய கைங்கரியத்தை ஹிஸ்புல்லா செய்வார்.
ஆனால் இன்னொரு விடயத்தையும் நாங்கள் இவ்விடத்தில் அவதானிக்க வேண்டும். காத்தான்குடியில் இவரின் ஆதரவாளர்கள் ஹிஸ்புல்லா தேர்தலில் வேட்பாளராக இல்லாதபோதும் அந்த வாக்குகளை நிச்சயமாக கோட்டாவுக்கே அளிப்பார்கள். ஏனெனில் ஹிஸ்புல்லா 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோற்ற போதிலும் மைத்திரி ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதோடு இல்லாமல் இராஜாங்க அமைச்சர் பதவியையும் வழங்கியிருந்தார். ஆனால் இவ்வாறு ஹிஸ்புல்லாவுக்கு அரசியல் ரீதியாக மைத்திரி மறுவாழ்வு வழங்கியிருந்தபோதும் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் ஒருபோதும் மைத்திரிக்கு நன்றி பாராட்டவில்லை. எப்போதும் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் மைத்திரிக்கு ஏசிக் கொண்டும் மஹிந்தவை புகழ்ந்து கொண்டும் தான் திரிவார்கள்.
எனவே ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இல்லாதிருந்தால் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் வாக்குகள் கோட்டாவுக்குத் தான் கிடைத்திருக்கும். எனவே கோட்டாவுக்கு நேரடியாக கிடைக்கக்கூடிய 8 000 வாக்குகள் ஹிஸ்புல்லா தேர்தலில் போட்டியிடுவதால் கோட்டாவுக்கு கிடைக்காமல் போகின்றது. எனவே இந்த 8 000 வாக்குகளினால் கோட்டா தோல்வி அடையக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்படலாம். அவ்வாறு நிலைமை ஏற்பட்டால் சஜித்தின் வாக்குகளை பிரிக்க எடுக்கின்ற முயற்சிக்கு நேர்மாறான விளைவையே தரும்.
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்தோடு செயற்படும் ஹிஸ்புல்லா இதன்மூலம் கோட்டாவின் வாக்கையும் சிதறடிக்கும் நிலை ஏற்படும். ஹிஸ்புல்லாவின் நோக்கம் அவருக்கே எதிர்வினையாக செயற்படலாம். (அதாவது இவரது சதி இவருக்கே சதியாகலாம். அல்லாஹ் சதிகாரனுக்கெல்லாம் சதிகாரனாக இருக்கின்றான்.)
எனவே ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தான் பிடித்த ஒட்டகத்துக்கு மூன்று கால்தான் என அடம் பிடிக்காமல் இந்தத் தேர்தலில் இருந்து ஒதுங்கி விடுவது என எதிர்வரும் 2 ஆம் திகதி அறிவிக்க வேண்டும். இதுதான் சமூகத்திற்கு நல்லது.