அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்கருதி அட்டாளைச்சேனை ,கோணாவத்தையில் படகுகளைத் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றுவதற்கு கடற்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் பி.ஹரிசனினதும் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
ஒலுவில் துறைமுகத்தையும் மீன்பிடித் துறைமுகத்தையும் முழு வசதிகள்கொண்ட மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பைசல் காசிம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய பிரதமர் தலைமையில் கூடிய குழு இது பற்றிக் கலந்துரையாடியது.இந்தத் துறைமுகம் தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அந்தக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிக்கை வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாது.இதனால் இப்போதைக்கு அட்டாளைச்சேனை,கோணாவத்தை வாய்க்காலை படகுகளைத் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பைசல் காசிம் கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் பி.ஹரிசன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன பெர்னாண்டோவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[ஊடகப் பிரிவு ]