A+ A-

இனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்: திருகோணமலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்பதற்கு எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளனர். சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கிண்ணியாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நெருக்கடி நிலைக்குள்ளான முஸ்லிம் சமூகம், தற்போது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளது. பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்போம் என்ற வாசகமே இத்தேர்தலின் முக்கிய கோசமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை வைத்துத்தான் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

முஸ்லிம்களின் உரிமைகளில் மூக்கை நுழைப்பதற்கு இன்று எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளனர். பள்ளிவாசல்கள், மத்ரசா பாடத்திட்டம், கலாசார உடைகள் என்று எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு தலைப்பட்டுள்ளனர். சட்டமூலம் தயாரிப்பது, அதற்கு எதிராக பேசுபவர்களை தயார்படுத்துவது என்று பல வேலைத்திட்டங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைக் கவனிப்பதற்கு யாரும் தேவையில்லை, எங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம்.

பாதுகாப்புத் துறையோ அல்லது புலனாய்வு துறையோ வந்துதான் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலையை இப்போது முஸ்லிம் சமூகமே கையில் எடுத்திருக்கிறது. யாராவது பயங்கரவாதத்தை நோக்கிச்செல்ல எத்தனித்தால், அவர்களை தண்டிப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் சமூகம் தயாராக இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றன.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் எந்தப் பக்கம் குவிந்திருக்கின்றன என்று பாருங்கள். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தவர்கள், காவி உடையுடன் அட்டூழியம் செய்தவர்கள், நீதிமன்றங்களை அச்சுறுத்தியவர்கள் என எல்லோரும் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றனர். சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

எங்களைத் தவிர வேறு யாராலும் இந்த நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்த முடியாது. நாங்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவோம் என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டினார்கள் என்பதே முழுநாடே அறியும். இவர்களை நம்பி எவ்வாறு ஆட்சியை ஒப்படைக்க முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தேர்தலை பகிஷ்கரிப்பதன் பின்விளைவுகளை தமிழ் சமூகம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு, சிறுபான்மை மக்கள் அதிகூடிய வாக்களிப்பு விகிதாசாரத்தை தங்களது பிரதேசங்களில் பதிவுசெய்ய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சாதகமான ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்றால், நமது வாக்களிப்பு விகிதாசாரம் உச்சத்தில் இருக்கவேண்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான, நிம்மதியாக வாழ்வதற்கு நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும். நிம்மதியான, சுபீட்சமான சகவாழ்கை உறுதிப்படுத்தும் வேட்பாளராக நாங்கள் இவரை அடையாளம் காண்கிறோம். அதைவிடுத்து, அடிமைத்தனமான சகவாழ்வுக்குள் மக்களை தள்ளிவிட நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. நமக்கு கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை மிகவும் புத்துசாதுரியமாக பயன்படுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்தின்மீது எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எங்களது கட்சியினூடாக அதிகளவான அபிவிருத்திகளை தாராளமாக செய்திருக்கின்றோம். கடந்த ஆட்சியை விட ஒப்பீட்டளவில் அதிகளவான அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். எதிர்காலத்தில் இதைவிட இன்னும் பல மடங்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு நாங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும்.

மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ஏப்ரல் தாக்குதலின்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திராணியில்லாத அவர், பள்ளிவாசல் ஒன்றில் வைத்து பேசிய பேச்சு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடைய தலைமையின் ஆணைக்கு கட்டுப்பட்டு, ஞானசார தேரரை வெளியில் விடுமாறு அவர் உத்தரவிட்டார். இப்போது அவரே இவருக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

தன்னையும் தனது சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்ளவும், அடுத்த தேர்தலில் தேசியப்பட்டியல் வாங்கவும்தான் இவர் தேர்தலில் போட்டியிடுகிறார். மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விடயம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரான என்னுடனும் அவர் பேசியிருக்கிறார். சமூகத்தின் நன்மைகருதி நாங்கள் அதனை சாதுரியமாக கையாண்ட நிலையில், இப்போது எதிரணியிடம் சரணடைந்து அதைக் காப்பாற்றிக் கெள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.