A+ A-

அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையையடுத்து உயர்தொழிநுட்ப கல்லூரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட்டது.





அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து உயர் தொழிநுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வார காலமாக உயர்தொழிநுட்ப கல்லூரிகளின்கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் கீழ் தேசிய மட்டத்தில் செயற்படும் 19 உயர்தொழிநுட்பவியல் கல்லூரிகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், உதவிப் பதவிவாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பாக இன்று (15) நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் உயர்தொழிநுட்பவியல் கல்லூரிகளிலுள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் குறைவாக காணப்படுவதால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் சம்பள திட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் போதிய சம்பளத் திட்டம் ஒன்றை உருவாக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது உயரதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அதனையடுத்து, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் எடுக்கபோகும் நடவடிக்கைகளில் திருப்தி கண்டு ஏற்கனவே அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு உடனடியாக கடமைகளில் ஈடுபடபோவதாக உறுதியளித்தனர்.

இக்கலந்துரையாடலில் உயர்தொழிநுட்ப கல்லூரிகளின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் பீ.எஸ்.எம்.குணரத்ன, பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கே.டீ.என்.யூ.ஹேமபால, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ.காதீர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.