A+ A-

இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Video Link: https://bit.ly/2J2n6TY

என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்வதில்லை. எங்களுக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால், அவர்களாகவே களங்கப்பட்டுப் போகின்ற நிலைமைதான் ஏற்படும்.

ஏகாதிபத்திய சக்திகளின் கூலிப்படையான தாக்குதல்தாரிகள் எங்களுக்குள் ஒளிந்திருந்த செய்தி யாருக்கும் விளங்கவில்லை. காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புல்லா, சிப்லி பாறுக், நல்லாட்சிக்கான முன்னணி உள்ளிட்ட யாருக்கும் இவர்களது உண்மைமுகம் தெரியாமல், இரண்டாயிரம் வாக்குகளுக்காக தேர்தல் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தனர்.

ஈஸ்டர் தினத்தில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட இந்தக் கும்பல், வெளிச்சக்திகளின் எடுபிடிகளாக மாறுவார்கள் என்று அப்போது யாரும் யூகிக்கவில்லை. பாராளுமன்ற தெரிவிக்குழுவில் நாங்கள் செய்த ஆய்வின் பின்னணியில், நிறைய விடயங்களை சிபார்சுகளாக உள்ளடக்கிய அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வெளிவரவுள்ளது.

குறித்த அறிக்கையில், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மீது எல்லாப் பழிகளையும் சுமத்துவது நியாயமற்றது. அதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதிக் கூட்டத்திலும் வாதிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அரசியல் ரீதியில் எங்களுக்கு முரண்பாடுகள் இருந்தாலும், சமூகத்தின் தலைமை ஒன்றின்மீது அநியாயமாக பழிசுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெருந்தலைவர் உருவாக்கிய இந்த மகா விருட்சத்தின் நிழலில் வளர்ந்த யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் வேலையை நாங்கள் செய்வோம். அரசியல் மேடைகளில் எங்களுக்குள் விமர்சனம் இருக்கலாம். ஆனால், இனவாதிகள் அவர்கள் மீது அநியாயமாக பழிசுமத்துகின்றபோது, அவர்களை பாதுகாக்கும் பணியை நாங்கள் பெருந்தன்மையுடன் செய்வோம்.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரத்திலும் உயர் கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் அதனை மெத்தனப் போக்குடன்தான் கையாண்டேன். பல்கலைக்கழகத்தின் பொதுநலம் மீதான இனவாத சக்திகளின் காழ்ப்புணர்ச்சிக்கு இடமளிக்க முடியாது. அவரையும் முஸ்லிம் சமூகத்தையும் காப்பாற்றும் பணியை செய்கின்றவர்களாகத்தான் நாங்கள் இருந்துவருகிறோம்.

ஆனால், இவர்கள் தெரிவுக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்கும்போதும் எனக்கு விரல்நீட்டும் வேலையைத்தான் செய்தார்கள். இதுகுறித்து நான் அலட்டிக்கொள்ளவில்லை. இதில் சலனம் ஏற்படுகின்ற தலைமையாக நான் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

தனிமனித அரசியலின் பின்னால் செல்வதன் பேராபத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். குறுநில மன்னர்கள் கூடாங்களுக்குள் கட்சிகளை அமைத்துக்கொண்டு தங்களை மாத்திரம் சந்தைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இயக்க ரீதியான அரசியலுக்கு மக்கள் தயாராகவேண்டும். பரந்து விரிந்த ஆலவிருட்சத்தை அனைவரும் ஆரத்தழுவ வேண்டும்.

தனித்தனி கட்சிகளாக பிரிந்துநின்று எதையும் சாதிக்கமுடியாது. எல்லா கட்சிகளும் அணிதிரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்ற அறைகூவலை நான் விடுக்கின்றேன். ஏப்ரல் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் தலைமைகள் ஒட்டுமொத்தமாக பதவிதுறந்து சமூகத்தைக் காப்பாற்றியபோது மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர். அப்போது, இந்த குறுநில மன்னர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஏகாதிபத்திய அரசியலுக்காக சமூகத்தை பலிபீடத்தில் நிறுத்தும் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். பிரச்சினைகள் வருகின்றபோது அதற்கெதிராக முன்னிற்கின்ற இளைஞர்களை அடையாளம் காண்பதற்காக கிறீஸ் பூதங்களை கொண்டுவந்ததை இன்னும் மறந்துவிடவில்லை. இவர்களிடம் சரணாகதி அரசியல் செய்வதற்கு நாங்கள் எப்போதும் தயாரில்லை. எமது இருப்பை தீர்மானிப்பதற்காக கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை புத்திசாதுரியமாக பயன்படுத்தவேண்டும்.