இறக்காமம் அஷ்ரப் மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த பைசல் காசிம் நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிக மாணவர்களைக் கொண்டதுமான இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் நடவடிக்கையை சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் எடுத்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் வழிகாட்டலுடனும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க,கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம்,கல்வி அமைச்சின் செயலாளர்-திட்டமிடல், மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோருடன் இது தொடர்பில் பைசல் காசிம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் 1100 மாணவ,மாணவிகள் கல்வி பயிலுகின்றனர்.60 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையில் அதிகமான வறிய மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
இந்த வறிய மாணவர்களுக்கு கல்வி புகட்டு ஒரேயொரு மத்திய கல்லூரியாக இந்தப் பாடசாலை மாத்திரமே இந்தப் பகுதியில் உள்ளது.யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியே இது.
இந்தப் பகுதி மாணவர்கள் கல்வி பொதுத் தராதர உயர்தரக் கல்வியைக் கற்பதற்கு வேறு பாடசாலைகளுக்குச் செல்வதாக இருந்தால் மூன்று பஸ்கள் ஏறி, இறங்க வேண்டும்.
இந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை வகுப்புகள் இடம்பெறுகின்றபோதிலும் இது தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்படாமையால் விரிவான கல்விச் சேவையை வழங்க முடியாமல் இந்தப் பாடசாலை சிரமத்தை எதிர்நோக்குகிறது.
இந்தப் பாடசாலை தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்படுவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளது என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
அடுத்தது.மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி.தரமான ஆசியர்கள் குழாமுடன் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வரும் இந்தப் பாடசாலை தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்படுவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளபோதிலும் இன்னும் தரமுயர்த்தப்படாமால் இருப்பது கவைக்குரிய விடயமாகும்.
இந்தத் தரமுயர்த்தலுக்கு கிழக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.தேசிய பாடசாலையாக இதைக் கொண்டு நடத்துவதற்கான அணைத்து வளங்களும் இதில் உள்ளன என்று கல்வி அமைச்சின் அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே,இந்த இரு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் விரிவான கல்விச் சேவையை வழங்குவதற்கு உடனடியாக தேசிய பாடசாலைகளாக இவற்றைத் தரமுயர்த்தித் தர வேண்டும் என்று பைசல் காசிம்,தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலுடன் பிரதமரிடமும் கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
[ஊடகப் பிரிவு ]