A+ A-

சிறுபான்மையை அடக்கி ஆள நினைக்கும் பெருந்தேசிய வாதிகளின் கூட்டே கோட்டபாய அணி- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்


நாட்டின் அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட போதும் நடைமுறைப்பிரயோகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.அதிலும் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் தம் உரிமைகளை அனுபவிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர்.நாட்டின் சகல மக்களும் தமது உரிமைகளை அனுபவிக்க நமக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக வெற்றி பெறச் செய்வதேயாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை(19) காத்தான்குடியில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணி சார்பான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சிறுபான்மை சார்பாக வாக்குறுதியளித்த பொறுப்புக்கூறல் மற்றும் கடப்பாடுகளை தான் நிறைவேற்றப்போவதில்லை என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.யுத்தத்தில் யாரும் காணமால் ஆக்கப்படவில்லை எனக்கூறுகின்றார்.இவ்வாறான ஒருவர் எப்படி சிறுபான்மை ,மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்?

கடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு இலங்கை முஸ்லிம் சமூகம் சொல்ல முடியாத துயரங்களை எதிர்நோக்குகிறது.விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் செய்த இழிவான செயலை முழு முஸ்லிம் சமூகத்தின் தலையிலும் கட்டி அவர்களை அடிமையாக்க கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் முயற்சிக்கின்றனர்.முஸ்லிமகளை பயங்கரவாதிகள் என்று சொல்லும் அத்துரலிய ரத்ன தேரர்,முஸ்லிம்களின் ஹிஜாபுக்கும்,ஹலாலுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஞானசார தேரர்,முஸ்லிம்களின் மத்ரஸா கல்வியை கட்டுப்படுத்த நினைக்கும் பந்துல குணவர்தன,வைத்தியர் ஷாபிக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய சன்ன ஜெயமான,முஸ்லிம்களை அடிமையாக்குவோம் எனக்கூறிய மது மாதவ அரவிந்த,சிறுபான்மைக்கு உரிமை தேவையில்லை என ஓலமிடும் விமல் வீரவன்ஸ மற்றும் தேர்தல் முறமையை மாற்றி சிறுபான்மையின் அரசியல் உரிமைகளை பறிக்க நினைக்கும் தினேஷ் குணவர்தன போன்ற பல இனவாதிகள்  கோட்டபாய ராஜபக்ஷ அணியிலுள்ள முன்னணி தலைவர்கள்.இவர்கள் உள்ள அணிக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியுமா?

மேலும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்னர் குருணாகலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும்,மினுவங்கொடை போன்ற இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள்,வீடுகள்,கடைகளை தாக்கி முஸ்லிம் சமூகத்துக்கெதிராக வன்முறை செய்தவர்கள் பொது ஜன பெரமுன(மொட்டு) கட்சியின் அமைப்பாளர்களும்,அப்பிரதேசங்களின் அக்கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுமே என பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லுகின்றனர்.

எனவே சகல சமூகங்களுக்கும் சம உரிமையுடன் நாம் இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழ நமக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு சஜித் பிரேமதாஸவே என முபீன் மேலும் தனதுரையில் தெரிவித்தார்.


(ஆதிப் அஹமட்)