A+ A-

அஷ்ரஃப், பிரேமதாசவை ஜனாதிபதியாக்கியதுபோல முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும்: நிந்தவூரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான அவரது மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (13) நிந்தவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது சபாநாயகரோ போட்டியிடாமல் புதிய முகங்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுவும் பிரதான கட்சிகள் தங்களுக்கு இருந்த பலவிதமான உள்ளக முரண்பாடுகளுக்கு முகம்கொடுத்த பின்னணியில்தால் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஆட்சிக் கவிழ்ப்பின்போது பல இடங்களில் நாங்கள் கூட்டங்களை நடாத்தினோம். அந்த இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு காணப்பட்டது. பிரதமரை பேசுவதை விட சஜித் பேசுவதையே மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால், நிகழ்ச்சிநிரலை மாற்றி இறுதியில் சஜித் பேசுகின்ற அளவுக்கு நிலைமை காணப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்ற வரவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். கட்சிக்குள் இருப்பவர்களே அதை பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள். இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்னிலையில் நான் தைரியமாக கூறினேன். அன்றுமுதல் இன்றுவரை எனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்துகொண்டிருக்கிறேன்.
 
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்து 1988இல் முதலில் எதிர்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசவை மறைமுகமாக ஆதரித்தது. அவர் எங்களது வாக்குகளினால்தான்  வெற்றிபெற்றார் என்பது, பின்னர் வந்த பாராளுமன்ற தேர்தலில்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் மூலம் நிரூபணமானது.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெளிப்படையாக மோதினாலும், ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசவுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். அட்டாளைச்சேனை கல்வியில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ரணசிங்க பிரேமதாச மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவரின் முன்னாலேயே தலைவர் அஷ்ரஃப் கூறியிருந்தார்.

தற்போது போட்டியிடும் அவரது மகனை வெல்லவைப்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கடமையாகும். சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும். அஷ்ரஃப் உருவாக்கிய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாச இருந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை நாம் அடையாளப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விரல்நீட்டிய அனைத்து தரப்புகளும் ஒட்டுமொத்தமாக சங்கமித்திருக்கும் அணிக்கு எதிராகத்தான், நாங்கள் இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறோம். முஸ்லிம் தரப்பு அடிமை சமூக இருக்க வேண்டுமா, இல்லையா என்ற போராட்டம்தான் இந்த தேர்தலின் பின்னால் இருக்கிறது.

முஸ்லிம் விரோத சக்திகளின் பின்னால் மறைந்துகொண்டால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களது கெளரவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. நீதி, நியாயத்துக்காக போராடும் இயக்கம் தப்பிப் பிழைப்பதற்காக அநியாயக்கார கும்பலிடம் சரணடைய முடியாது. தனது சொத்துகளை காப்பாற்றுவதற்காக சிலர் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இது முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டமாகும்.

சஜித் பிரேமதாச வெற்றுபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் தங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அண்மையில் கல்முனை தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. அதுபோல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அதியுச்ச வாக்குப்பதிவு இடம்பெற வேண்டியது அவசியாகும். அப்போதுதான் நமது வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும்.

முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.பி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும். ஜே.வி.பி. வேட்பாளர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. சமூகத்துக்காக குரல்கொடுத்து பேசினார்கள் என்பதற்காக வெற்றிபெறாத ஒருவருக்கு வாக்களித்து உங்களது பொன்னான வாக்குளை வீணாக்கவேண்டாம். ஜே.வி.பி.யினர் வெளிப்படையாக எதையும் கையாள்வதற்கு தயக்கம் காட்டினார்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.