A+ A-

ரவூப் ஹக்கீம் காணொளி விவகாரம்: சகவாழ்வுக்கான சமூகத்தின் குரலை நசுக்குவதற்கான சதி– துருவன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாதிகளினால் இலக்குவைக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான் எஞ்சியிருந்தார். இனவாதிகள் மிதவாதி என்று விட்டுவைத்திருந்த ஒருவர் மீது இனவாத முத்திரை குத்துவதற்கு முஸ்லிம் பெயர்தாங்கிய சிலர் முன்வந்திருப்பது வேதனையான விடயம். முஸ்லிம்களின் பிரச்சினைகளை சிங்களவர்கள் மத்தியில் பேசுவதற்கு எஞ்சியிருந்த ஒற்றைக்குரலும் நசுக்குவதற்கு சமூக விரோதிகள் மேற்கொண்ட முயற்சியாகவே இதனைப் பார்க்கவேண்டும்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை இனவாத சக்திகளினால் ஜீரணிக்க முடியாமலிருந்தது. குறிப்பாக கூட்டு எதிரணி என்று சொல்லப்படும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அதில் வழங்கப்பட்ட உறுப்புரிமையை வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டனர். அதன்பின்னர் தெரிவுக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினர். ஆனால், பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடகவியலாளர்களை முன்னிலையில் தங்களது சுயாதீனத்தன்மையை நிரூபித்துக்காட்டியது.

தாக்குதல் பிரதானியாக அறியப்படும் சஹ்ரான் ஹாசிம் மற்றும் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த அவனது சகோதரன் றிழ்வான் ஹாசிம் ஆகியோரை ரவூப் ஹக்கீம் சந்தித்திருப்பதாகவும் அவருக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறி, ரவூப் ஹக்கீமை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மெளலவி என அடையாளம் காணப்படும் இப்றாஹிம் மிப்ழார் அல்லது இப்றாஹிம் மிப்ழால் என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இனவாத ஊடகங்கள் என மக்களால் அடையாளம் காணப்படும் சில தொலைக்காட்சிகள் இதனை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புச் செய்தன. வில்பத்து பிரச்சினை, டொக்டர் ஷாபி விவகாரம், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் போன்ற விடயங்களில் இந்த ஊடகங்கள் ஊடக நெறிமுறை தவறி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டன என்பதை எல்லோரும் அறிவர். அரசியல் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இயங்குவதாக குற்றம்சாட்டப்படும் இந்த தொலைக்காட்சிகளுக்கு ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டு இனிப்பான செய்தியாக மாறியுள்ளது.

முதலில் ரவூப் ஹக்கீம் சஹ்ரானுடன் இருக்கும் காணொளியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியொன்று, பின்னர் அவனது தம்பி றிழ்வான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை பார்வையிடும் புகைப்படமொன்றை வெளியிட்டது. காத்தான்குடி இணையத்தளமொன்றிலிருந்து பெறப்பட்ட குறித்த புகைப்படத்தில் பொதுஜன பெரமுனவின் தற்போதைய காத்தான்குடி அமைப்பாளர் எம்.எஸ்.எம். சியாத்தும் ரவூப் ஹக்கீமுக்கு அருகிலிருக்கின்றார். அது செய்தியில் வெளிவந்த பின்னரே தெரியவந்தது. தற்போது அந்த தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் குறித்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.

சரி. சஹ்ரான் மற்றும் றிழ்வானை ரவூப் ஹக்கீம் ஏன் சந்திந்தார், எதற்காக சந்திந்தார் என்பது தொடர்பில் பாராளுமன்றத்திலும், தெரிவுக்குழு அறிக்கையின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்தப்பிலும், தொலைக்காட்சி விவாதத்திலும் தெரிவித்த கருத்துகளை நோக்குவோம்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா பின்கதவால் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசியப்பட்டியல் அசனத்தை பெற்றுக்கொண்டார். இதன்பின் அவரது குண்டர்கள் (21.08.2015 அன்று) மாற்றுக்கட்சி ஆதரவாளர்களை வீடு வீடாக தேடிச்சென்று தாக்கினார்கள். கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் இத்தாக்குதலில் காயமடைந்தனர். இதில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் உள்ளடங்குகின்றனர். இத்தாக்குதலை கண்டித்து ஜம்மியத்துல் உலமா கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.

ஹிஸ்புல்லா தனது அரசியல் பலத்தை பிரயோகித்தமையால் அடாவடித்தனம் குறித்து பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தச் செய்தி, தேர்தல் வெற்றியின் பின்னர் கண்டி மற்றும் திருகோணமலையில் மக்களை சந்தித்துக்கொண்டிருந்த ரவூப் ஹக்கீமின் காதுகளுக்கு எட்டியது. அவர் திருகோணமலையில் இருந்தவோறே உலங்கு வானூர்தி மூலம் காத்தான்குடிக்கு விரைந்தார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபர் யூ.பி. திசாநாயக்கவை சந்தித்து வன்முறை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பின்னர், தாக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதிப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விஜயம் குறித்து ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அதனால், நான் சென்ற இடங்கள் அனைத்துக்கும் பொலிஸாரும் வந்திருந்தனர். இதன் ஒரு அங்கமாகவே தேசிய தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கும் செல்ல நேரிட்டது. அப்போது அவர்கள் பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. அவர்கள் யாரென்பதை அறிந்திருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களை சந்தித்ததாகவும் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

இப்போது மொட்டு அணியின் அமைப்பாளராக இருக்கும் எம்.எஸ்.எம். சியாத்தும் இச்சந்திப்பில் பிரசன்னமாயிருந்தார். பள்ளிவாசலில் நடந்த சந்திப்பை ஊடகவியலாளர்கள் சிலர் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கும் பொலிஸார் வருகைதந்திருந்தனர். இச்சந்திப்பு இரகசியமாக நடந்திருந்தால் இவ்வாறான ஏற்பாடுகள் இருந்திருக்காது. ஊடகவியலாளர் ஒருவர் மாத்திரமே இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அவர் தற்போது ஹிஸ்புல்லாவின் ஊடகப் பிரிவில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கத்துக்காக அந்த காணொளி பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காணொளி, புகைப்படங்கள் அனைத்திலும் மொட்டு அணியின் தற்போதைய காத்தான்குடி அமைப்பாளரும் தன்னடுன் காணப்படுகிறார். அதனை அம்பலப்படுத்தியவர்கள் இப்போதுதான் அதனை கவனிக்க ஆரம்பித்துள்ளனர் என்கிறார் ஹக்கீம்.

தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதை கேள்வியுற்று அவரை பார்வையிடுவதற்காக ரவூப் ஹக்கீம் சென்றிருந்தார். அங்குதான் தாக்குதலில் காயமடைந்த றிழ்வானும் இருந்திருக்கிறார். அவர் யாரென்பது தனக்குத் தெரியாது. கட்சிபேதம் பார்க்காமல் பாதிக்கப்பட்ட எல்லோரையும் பார்த்துவிட்டு வந்ததாகவும், அங்கும் மொட்டு கட்சியின் அமைப்பாளரும் பொலிஸாரும் அங்கு வந்திருந்ததாகவும் கூறுகிறார்.

இந்தக் காணொளியை வைத்து சிங்களவர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தால், அதை இனவாதப் பிரச்சினையாக கருதி பின்தள்ளியிருப்பார்கள் எனக்கூறும் மிப்ழாலின் பின்னணி குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல ஆதாரங்களை அம்பலப்படுத்தியிருந்தார். முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவராக தன்னை அடையாளப்படுத்தும் மிப்ழால், அப்பாவி பெளத்த சிங்கள மக்களின் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக கொந்தராத்து அடிப்படையில் களமிறக்கப்பட்டுள்ள தரகர் என்று கூறியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு செல்லாமல் சிதறடிப்பதற்காக இவரை மஹிந்த அணி களமிறக்கியிருந்தது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சி சார்பாக வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் போட்டியிட்டு 14,379 வாக்குகளை சூறையாடியிருந்தார். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய ரவூப் ஹக்கீம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற பிரசாரத்தை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசென்று கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கள வாக்குகளை அதிகரிக்கும் தந்திரோபாயத்துக்கு இம்முறை மிப்ழால் விலைபோயிருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற அணியொன்றுக்கு மிப்ழார் தனது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியை விற்பனை செய்திருந்தார். அந்தக் கட்சியை கொள்வனவு செய்தவர்களில் சிலரும் இந்த சதித் திட்டத்தின் பின்னாலிருப்பதாக ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியிருந்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டு மேடையில் மு.கா.விலிருந்து பிரிந்துசென்ற செயலாளர் நாயகத்துக்கு அடுத்த கதிரையில் மிப்ழால் அமர்ந்திருக்கும் மற்றும் நெஞ்சில் கைவைத்து சத்தியப்பிரமாணம் செய்யும் புகைப்படங்களை ஊடகங்களிடம் காண்பித்தார்.

மிப்ழால் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமானவர். மொட்டு அணிக்கு வாக்குச் சேர்க்கும் நிகழ்ச்சிநிரலுக்காகவே தன்மீது அபாண்டமாக அவரால் பழிசுமத்தப்படுவதாக ரவூப் ஹக்கீம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். இவர் ஜம்மியத்துல் உலமாவை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், மொட்டு அணியின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் ஹிஸ்புல்லா ஜனாதிபதி தேர்தலின் போட்டியிடுவதாக ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் வைத்து கடுமையாக சாடியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ரவூப் ஹக்கீமுடன் விவாதிப்பதற்கு தயாரென ஹிஸ்புல்லா ஒரு வாரம் காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், ரவூப் ஹக்கீம் அந்த சவாலை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்நிலையில் அந்த காணொளி வெளியாகியிருப்பது பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது.

இனவாத ஊடகங்கள் தேர்தல் காலத்தில் ரவூப் ஹக்கீமை நோக்கி விரல் நீட்டியிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைவர்களை றிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை இனவாதிகள் இலக்குவைத்து வன்முறைகளை பிரசாரம் செய்தபோது, ரவூப் ஹக்கீம் முன்னின்று குரல்கொடுத்திருந்தார். இவர்களில் றிஷாத் பதியுதீன் மற்றும் அசாத் சாலி இப்போது ரவூப் ஹக்கீமுக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர். ஆனால், ஹிஸ்புல்லா மாத்திரம் மெளனம் சாதித்துவருகிறார்.