A+ A-

ஹிஸ்புல்லா பாராளுமன்றம் செல்வதற்காக வாக்குளை வீணடிக்க முடியாது: காத்தான்குடியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்ஹிஸ்புல்லா பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது வாக்குளை வீணடிக்கமுடியாது. சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடயங்களை அமுல்படுத்துவதற்கு காத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் சமூகத்துக்கு என்றும் விமோசனம் கிட்டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்றிரவு (26) காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்து நான் அறிக்கையொன்றை எழுதியிருக்கிறேன். அத்துடன் வஹாபிசம், அரபு மயமாக்கல் போன்ற விடயங்களிலும் எனது கருத்துகளை குறிப்பிட்டிருக்கிறேன். தெரிவுக்குழு அறிக்கையில் அது உள்வாங்கப்படவில்லை என்று, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அதை அறிக்கையின் பின்னிணைப்பாக இணைக்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நோக்கத்தில் களமிறங்கியுள்ள மொட்டு அணி வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்கு, முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கில் வேட்பாளர் ஒருவர் காத்தான்குடியில் களமிறங்கியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் இருப்பதால்தான், சிறுபான்மையின அரசியல் சக்தியை பேரின சக்திகள் உணரக்கூடியதாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமரும் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒற்றுமையாக செயற்பட்டார்கள். ஆனால், அவர்களது கனவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அத்துவன் தொகுதிவாரியான தேர்தல் முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறுகின்றார். இதனால் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடையும். அரசாங்கம் எங்களில் தங்கியிருக்கவேண்டிய தேவை ஏற்படாது. இது சிறுபான்மை சமூகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அவர்கள் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கை இன்னும் வராத நிலையில், இப்போது என்னையும் பயங்கரவாதிகளையும் சேர்த்து முடிச்சுப்போடும் வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் முஸ்லிம்களின் வாக்குகளை அறவே பெறமுடியாது என்று தெரிந்திருந்தும், கிராமப்புற சிங்களை மக்களை உசுப்பேற்றி வாக்குளை கொள்ளையடிக்கும் கனவில் மிதந்துகொண்டிருக்கின்றனர். அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது.

தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தமைக்கு நன்றிக்கடனாக எஜமானர்கள் எதைச் சொன்னாலும் ஹிஸ்புல்லா அதை செய்துகொண்டிருக்கிறார். ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். கடைசியில் வெளியில் வந்த ஞானசார தேரர், அளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஹிஸ்புல்லாவுக்கு உத்தரவிட்டார். எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டப்போய், கடைசியில் அவருக்கே அது ஆபத்தாக வந்துமுடிந்தது.

கடந்த ஆட்சிக் கவிழ்ப்பின்போது என்னுடைய அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது மக்காவிலிருந்த என்னிடம் அவர் வழமையான தரகர் வேலையைத்தான் செய்தார். எனக்கு தருவதற்கே அவர் அமைச்சை தற்காலிகமாக வைத்திருப்பதாகவும், உடனே வந்து அமைச்சே பொறுப்பேற்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும் தகவல் அனுப்புகிறார். உங்களைப்போல் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் வேலையை என்னால் செய்யமுடியாது என்று அவரிடம் உறுதியாக சொல்லிவிட்டேன்.

தேசியப்பட்டியல் பெறுவதற்காகவும் தனது பல்கலைக்கழகத்தை காப்பாற்றுவதற்காகவும் அதே தரகர் வேலையை அவர் இப்போதும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். சமூகம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. தனது சுயநலனுக்காக சமூகத்தின் வாக்குளை திசைதிருப்பும் கொந்தராத்து வேலையை அவர் இப்போது செய்துகொண்டிருக்கிறார். இப்படியானவர்களின் சுயலாப அரசியலுக்கு மக்கள் சாவுமணி அடிக்கவேண்டும்.

இது பாராளுமன்ற தேர்தல் அல்ல. அவர் பாராளுமன்றம் செல்வதற்காக முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை வீணடிக்கமுடியாது. இவரை பயங்கரவாதத்துக்கு துணைபோனவராக காட்டிய அதே கும்பலை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு தற்போது கொந்தராத்து வேலை செய்துகொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் தங்களது உச்சபட்ட ஜனநாயக உரிமையை காட்டவேண்டிய தார்மீகப் பொறுப்பு காத்தான்குடி மக்களுக்கு இருக்கின்றது.

இப்படியானவர்களை காப்பாற்றுவதற்காக எங்களது பதவிகளை தூக்கியெறிந்து பல தியாயங்களை செய்தோம். அதற்காக இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கின்ற பரிசுதான் பயங்கரவாத முத்திரை. இதற்கான புகைப்படங்கள், காணொளிகள் எல்லாம் தாரளமாக தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த செய்திகள் அவர்களது ஆங்கில செய்திகளில் வருவதில்லை. சிங்கள செய்திகளில் மாத்திரமே வருகின்றன. இதன்மூலமே அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.