A+ A-

ஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்வியின் போது துவண்டுவிட முடியாது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்






ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அட்டாளைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.



நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஒரு புறத்தில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுகின்றனர், மறு புறத்தில் தோல்வியடைந்தவர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த இரு கொண்டாட்டங்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான போட்டியில் ஏதோ வித்தியாசத்தில் ஒருவர் தான் வெற்றியடைய முடியும். அதற்காக எதிர்த்தரப்புக்கு வாக்களித்தவர்கள் தோற்றுப்போய்விட்டார்கள் எனக் கூறிவிட முடியாது.



ஏனென்றால், நாங்கள் மாகாண சபை தேர்தலையும், பாராளுமுன்ற தேர்தலையும் எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் தேர்தல்களுக்கான வெள்ளோட்டம் பார்க்கின்ற ஒரு முயற்சியாகும். அதற்கான தயார்படுத்தலை நாங்கள் சிறப்பாகவே செய்து இருக்கின்றோம் என்பதை இந்த தேர்தலின் முடிவு எமக்கு பறைசாற்றியுள்ளது.



இந்த தேர்தலை விமர்சன ரீதியாக பார்ப்பவர்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டது என பரவலாக பேசுவதையும், சமூக வலைத்தளப் பதிவுகளையும் காண்கின்றோம். இதை யதார்த்தபூர்வமாக நோக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறே வெற்றி பெற்ற ஜனாதிபதியும் யதார்த்தமாகவும், இந்த முடிவில் உள்ள நியாயங்களையும் புரிந்துக்கொண்டு சரியாக பொருள்கோடல் செய்யவேண்டும். அதுவே மிக முக்கியமானது. அதுவே ஜனநாயகத்தை விரும்புகின்றவர்களின் அபிலாஷையாகவும் உள்ளதை நான் இங்கு தெளிவாக வலியுறுத்துகின்றேன்.



யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர்; 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அடைந்த வெற்றி, பிறகு 2015ஆம் ஆண்டு எதிர்பாராத விதத்தில் மைத்திரிபால சிறிசேனவிடம் அடைந்த தோல்வி, இப்போது கோட்டாபய ராஜபக்ஷ அடைந்துள்ள வெற்றி என்பவற்றின் பின்னணியில் வடகிழக்கில் வாழும் சிறுபான்மை மக்கள் ஒரே செய்தியை தான் சொல்லியிருக்கின்றார்கள்.



வடகிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்த வேட்பாளருக்கு மிகக் கூடிய வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ள விவகாரத்திலுள்ள யதார்தத்தை நாங்கள் பொருள்கோடல் செய்வதை விடவும், ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ சரியாக பொருள்கோடல் செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 



இதனை இவர்கள் எவ்வாறு பொருள்கோடல் செய்யப் போகின்றார்கள் என்றால், கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் வாழும் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை விடவும் குறைந்த அளவில் தான் வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தார்கள். ஏனெனில், தங்களுக்கு அன்று இருந்த தார்மீக பொறுப்பு அந்த பௌத்த மக்கள் சொல்ல வருகின்ற செய்தியை உரிய முறையில் புரிந்துகொண்டு அவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அரசியலை செய்ய தாங்கள் தவறியிருந்ததாக கூற வருகின்றார்கள்.



2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியின் போதும் இதே தவறை இழைத்தார். தனக்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் அதிகபட்சமாக வாக்களிக்கவில்லை என்ற விவகாரத்தில் அவர்களை தம் பக்கம் கவர்ந்து ஈர்க்கக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளாதது 2015ஆம் ஆண்டு அவரது தோல்விக்கு வழிவகுத்தது என்பதை புரிந்துகொண்டு அதற்கான சரியான அணுகுமுறையை அவர்கள் இம்முறையாவது கையாண்டு சிறுபான்மையினரை தம்வசப்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.



இரு தரப்புக்களும் தவறிழைத்துள்ளன. எங்களுடைய தரப்பு பௌத்த சிங்கள மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை கவர்வதற்குரிய சரியான அணுகுமுறையை கையாளாமல் விட்டமையும், இன்றைய ஆளும் தரப்பு சிறுபான்மை சமூகங்கள் தேர்தலில் எதிர்பார்க்கின்ற செய்தியை புரிந்துகொள்ளமால் நடந்துகொண்டதும் தான் இத்தேர்தலின் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயுள்ள உண்மையான உள் அர்த்தங்களாகும்.



ஜனாதிபதியாக வெற்றிபெற்றிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அண்மை காலமாக சில ஜனரஞ்சகமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கின்றது. சாதாரண விடயத்தை கூட, இன்று மக்கள் நல்ல விடயமாக பாராட்டுவதை பார்க்கின்றோம். இந்த சிறிய விடயங்களை அடையாளத்திற்காக செய்வது மக்கள் மத்தியில் வரவேற்கப்படுவனவாக இருந்தாலும், இவற்றை விடவும் பெரிய விடயங்களை தான் அவர் செய்ய வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.



அரசாங்க அலுவலகங்களில் அரச தலைவர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதை தடுத்திருப்பது, தனக்கு பின்னால் வருகின்ற பாதுகாப்பு பரிவாரங்களையும், வாகன பேரணிகளையும் வெகுவாக குறைத்திருப்பது, தமக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்திருப்பது, அரச வைபவங்களின் போது வீதிகளில் போக்குவரத்தை தடை செய்யாதிருப்பது போன்ற விடயங்கள் சிறிய அடையாள நடவடிக்கைகளாக இருந்தாலும் கூட, அவை மக்கள் மத்தியில் பாராட்டத்தக்கவையாகப் பார்க்கப்படுகின்றன.

ஆனால், கடந்த தேர்தலில் ஏகோபித்த அடிப்படையில் தனக்கு வாக்களிக்காமல் விட்ட சிறுபான்மை இனங்களை அரவணைத்து செல்லும் வகையில் ஓர் அரசியலை செய்ய அவர் முன்வருவார் என்றால் அவற்றை விடவும் மேலும் பாராட்டத்தக்க ஒருவராக தற்போதைய ஜனாதிபதி நோக்கப்படுவார்.



அவரை சார்ந்து நிற்காமல் அவரை கொள்கை அடிப்படையில் எதிர்த்தமைக்கான காரணங்களை நாங்கள் பலவிதத்திலும் பொருள்கோடல் செய்யலாம். சிறு சில்லறை பிரச்சினைகளுக்காக எங்களுக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமை பிளவுபடலாகாது என்பதை மக்கள் இன்று நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். பிரதேச ரீதியில் மக்களது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றவேண்டும்.

இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலுள்ள தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி மிக மோசமாக பரவலாக்கப்பட்டுள்ள இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை சரிசெய்வதன் ஊடாக பெருந்தன்மையுடனான அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை செய்ய தவறும் பட்சத்தில் கடந்த கால தலைவர்கள் செய்த தவறுகளை மீண்டும் புதுப்பிக்கின்ற ஒருவராக இந்த ஜனாதிபதி வந்துவிடக் கூடாது. வெறும் மாமுல் விடயங்களை செய்து ஜனரஞ்சகமாக மக்கள் மத்தியில் மிளிர்வதைப் பார்க்கிலும், அவற்றை விடவும் பெறுமதியான விடயங்களை தற்போதைய ஜனாதிபதி செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையை தான் நாங்கள் செய்ய முடியும்.



எதிர்கட்சியில் இருக்கின்ற நாம் குறிப்பாக முஸ்லிம்களையும், பொதுவாக சிறுபான்மை இனங்களையும் ஏகோபித்த அடிப்படையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த நாடு தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை விரிவுபடுத்தும் நிலவரம் மிகவும் ஆபத்தானது. அதை வைத்து இந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, சுபீட்சம் என்பன பாதிக்கப்படுவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது.



நாட்டின் இறைமை, தேசப்பற்று என்பன பற்றி குறுகிய நோக்கில் வியாக்கியானம் செய்த பலரும்; இந்த தேர்தலில் போட்டிக்கு நின்றார்கள். அந்தவகையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக வாக்களித்த ஏறத்தாழ 20 இலட்சம் சிறுபான்மையின மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தேசப்பற்றற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவ்வாறானால், அவருக்கு ஏழத்தாழ 35இலட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்கப்பெற்றமைக்காக அவர்களையும் தேசப்பற்றற்றவர்கள் என் பட்டம் சூட்டப்படுகின்ற நிலைமை உருவாகிவிடும். ஆகவே, இது நியாயத்திற்கு அப்பாற்பட்ட பொருள்கோடலாக மாறிவிடும். எனவே தான் இந்நாட்டின் அரசியல் தலைமைகள் இந்த நிலைமையை மிக ஆழமாக பொருள்கோடலிட வேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றன.



எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கிடைத்துள்ள அமோக வெற்றியை ஆசனங்களாக பறிமாற்றம் செய்துகொள்கின்ற முயற்சியின் மூலம் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் தாக்கத்தைச் செலுத்துவதற்கான தயார்ப்படுத்தலில் இப்பொழுது இறங்;கியுள்ளோம்.



ஆளுந்தரப்பிலுள்ளவர்கள் தாம் அடைந்துள்ள வெற்றியை தொடர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்துகொள்வதற்காக அரசியல் யாப்பில் மாற்றங்களை செய்வதற்கு இன்னும் எவ்வாறெல்லாம் புதிய வியூகங்களை வகுத்து ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றனர்.



இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக இந்நாட்டின் மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை செலுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ள பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியானது, தனது தோல்விக்கு பின்னால் பிளவுகளை சந்திப்பது சகஜமான விடயமாகிவிட்டது. அந்த பிளவுகளை விடுத்து கட்சியை பாதுகாத்துக்கொள்கின்ற பொறுப்பு அதன் உறுப்பினர்களுக்கு இருப்பது போலவே தலைமைகளுக்கும் இருக்கின்றது.



இத்தகைய கட்டத்தில் தலைமைகள் பெருந்தன்மையுடன் நடப்பது அவசியமாகும். ஒரு தோல்விக்கு பின்னால் கட்சிக்குள் குழப்ப நிலையொன்று எழும்போது உடனடியாக தீர்க்காமல், பிடிவாத போக்கில் இருந்துகொண்டு இழுப்பறிக்குள் தள்ளினால் அக்கட்சியை சார்ந்து நின்ற ஏனைய கட்சிகளையும் இந்த நிலைமை பலவீனப்படுத்திவிடலாம்.



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இந்த கட்டத்தில் எடுக்கின்ற முடிவு மிக முக்கியமானது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயத்தை மிகவும் நிதானமாக கையாள்வதன் மூலம் அடுத்தகட்ட அரசியலுக்காக தயார்படுத்திகொள்ள முடியும். கட்சி வென்று சமூகம் தோற்றுப்போய்விட முடியாது. இன்று சமூகம் பலமான செய்தியொன்றை சொல்லியிருக்கின்றது. அதனை சொல்ல வைத்தது நாங்கள் என்ற அடிப்படையில் அதனை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விடவும் மக்களது அங்கீகாரம் பெற்று ஜனாதிபதியாக இருக்கின்ற கோட்டாபய ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும் என்பதுவே எங்களுக்கு மத்தியில் உள்ள மிகப் பெரிய ஆதங்கமாகும்.



அதனை புரிய வைப்பதில் தான் எங்களுடைய அரசியல் சாணக்கியமும், தூரநோக்கும், தேசப்பற்றும் தங்கியிருக்கின்றது. இவையெல்லாம் அரசியல் தலைவர்களை தேர்தல் காலங்களில் சாடி திரிவதனால் ஏற்படலாகாது. நியாயமான தீர்வுகள் கிட்டுவதற்கு அனைவரும் பெருந்தன்மையுடன் செயலாற்ற வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம் உருவாக வேண்டும். எந்த இடத்தில் தவறிழைக்கப்பட்டது என பார்ப்பதைவிடுத்து, பழிவாங்குகின்ற அரசியலில் வழமைபோல் இறங்காது மக்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பதனால் மேலும் பல நன்மைகளை அடைந்துகொள்ளலாம்.



கடந்த தேர்தல்களில் கற்ற இந்தப் படிப்பினைகளை நாம் மிகத் தெளிவாக உளம்கொண்டு செயலாற்ற வேண்டும். வழமை போல் மாமுல் அரசியலை செய்துகொண்டு, வெற்றி பெற்றவரின் பக்கம் நாங்கள் ஆதரவளிக்கவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பிழையானது என எவரும் கூறிவிட முடியாது.



அப்படியானால், கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவும் பிழையாகத்தான் முடிவெடுத்துள்ளார். ஏனென்றால், தேர்தலில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும். எதிராக நின்று ஆதரவு திரட்டியவர்கள் பிழையான நிலைப்பாட்டில் இருந்தனர் எனக் கூறிவிட முடியாது.



அந்த வெற்றியின் பின்னால் இருக்கின்ற மக்கள் ஆணையின் சரியான உள் அர்த்தங்களை புரிந்துகொண்டு இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகின்ற, சுபீட்சத்தை எட்டுகின்ற வழி திறந்து வைக்கப்படவேண்டும். நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும், நாட்டில் பாரபட்சம் இல்லாத அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை தைரியமாக நின்று பெற்றுக்கொடுக்க வேண்டும்.



இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த அரசியல் பெருந்தன்மையை வெளிக்காட்டுகின்ற போது பலமடங்குகளாக வரவேற்கப்படும் ஒருவராக அவர் மாறிவிடுவார். இதனை அவர் உளம்கொள்வார் என நம்புகின்றோம். ஆரம்பத்தில் அவர் கட்சி சார்பில்லாத அரசியல்வாதியொருவராக தன்னை அடையாளப்படுத்தித்தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். சில விடயங்களில் தன்னை வேறுபடுத்தி காட்டவேண்டும் என்ற முயற்சியில் குறைந்தபட்சம் சால்வையை அணிவதை கூட தவிர்ந்திருக்கின்றார். இதன் மூலம் அவர் ஏதோ ஒரு விடயத்தை மக்களுக்கு எத்திவைப்பதற்கு எத்தனிக்கின்றார்.



சர்வதேச சமூகம் சொல்கின்ற நல்ல விடயங்களை கடந்த காலங்களில் போல கர்வத்தோடும், ஆணவத்தோடும், அலட்சியப்போக்கோடும் கையாளாமல், மிகுந்த விட்டுக்கொடுப்போடும், பெருந்தன்மையோடும் விவகாரங்களை இராஜ தந்திர ரீதியாக அணுகக்கூடிய பக்குவம் அவருக்கு வாய்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். எங்களால் பிரார்த்திக்க மாத்திரம் தான் முடியும்.



இந்த மக்களுடைய வாக்குகளை அடுத்த கட்ட அரசியலுக்காக தயார்ப்படுத்துகின்ற பாரிய பொறுப்பில் இருக்கின்ற நாங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சகல பிரதேசங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். நாம் அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டும். இங்கு தோல்வி என்ற கதைக்கே இடம் இல்லை. ஏனெனில், முஸ்லிம்கள் மாத்திரமல்ல, மிகப் பெரிய செய்தியொன்றை சகல சிறுபான்மையின மக்களும் கைக்கோர்த்துக்கொண்டு சொல்லியிருக்கின்றார்கள்.



ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் அனுபவித்த கஷ்டங்களுக்கு மத்தியில் எங்கள் மீது அநியாயமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தொடர்ந்தும் மிக மோசமாக ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்ட சமூகமாக இருந்த பின்னணியில் தங்களுடைய அரசியலை வளர்த்துகொள்ள வேண்டுமென்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு வேண்டுமென்றே பலவந்தமாக திணிக்கப்பட்டது. அது உடனடியாக நீக்கப்பட வேண்டும்.



என்னை பொறுத்தமட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட உளவுத்துறை இனி தேவையில்லை. அத்தகைய உளவுத்துறை இனி நாங்கள் தான். இஸ்லாமிய தீவிரவாதமொன்றை இன்னொருமுறை எங்களது சமூகத்திற்குள்ளே கண்டால் அதற்கு முடிவுகட்டுவது அரசாங்கமோ, உளவுத்துறையோ, இராணுவமோ அல்ல. மாறாக, அது முஸ்லிம் சமூகமாகவே இருக்கும் என்பதை இந்த அரசாங்கம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இதை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கின்ற அரசியலை இனிமேலும் செய்யக் கூடாது.



இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக பாரிய தார்மீக பொறுப்பு ஜனாதிபதியின் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்னும் விடயத்தில் அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தான் தேர்தலில் அவர் மக்கள் ஆணையாகப் பெற்று ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். அத்தகைய பாதுகாப்பு இந்த நாட்டின் ஓர் இன மக்களுக்கு மாத்திரமானதாக இருந்துவிடக் கூடாது. சகல சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் மூலம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக காத்திரமான உபாயங்களை கையாள்வது தான் மிகச் சிறந்த வழிமுறையாக அமையும்.

இராணுவத் தந்திரோபாயங்களை விடவும், உளவுத்துறை நடவடிக்கைகளை விடவும், முஸ்லிம்களுக்கு மத்தியில் உளத்தூய்மையுடன் செயற்படுகின்ற முஸ்லிம் அரசியல் ஆன்மீகத் தலைமைகள் இருக்கும் வரையில் அச்சப்பட தேவை இல்லை. 



சிறுபான்மை இனத்தின் நம்பிக்கையை வெல்வதற்கான அணுகுமுறைகளை அனுசரிக்க வேண்டும். அதை நோக்கிய விமர்சன அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறாமல் செய்யும். அதனை செய்வதன் மூலம் ஆக்கபூர்வமான வகையில் இந்த இயக்கம் தன்னுடைய கடமையை சரிவர நிறைவேற்றும்.



அடுத்த கட்ட அரசியலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்ட ரீதியாக எங்களுடைய பேராளர் மாநாடுகளையும், தேசிய மாநாடுகளையும் நடத்த வேண்டும். தேர்தலை முன்னிட்டு இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை ஆட்சியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் அதனை அலட்சியப்போக்கோடு மாமுல் அரசியலாக கையாண்டால் அதனுடைய விளைவுகளை பற்றி நாங்கள் யாரும் விசனப்பட வேண்டிய அவசியமில்லை.



இயக்க ரீதியான அரசியலை மிகத் தெளிவாக இந்த சமூகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த தேர்தலில் குறுநில மன்னர்களையெல்லாம் மக்கள் படுதோல்வி அடைய செய்திருக்கின்றார்கள். இயக்கத்திற்கு தான் நாங்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை மக்கள் பறைசாற்றியிருக்கின்றார்கள். இயக்கம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு சொல்லப்போகின்ற செய்தியை வழங்க வேண்டுமென்பதை முன்னிலைப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.



அது வெறும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான வெறுப்புப் பாய்ச்சலாக இருப்பது ஆரோக்கியமானதல்ல. அதைவிடவும் வித்தியாசமாக இன்றைய களநிலவரங்களின் யதார்த்தத்தை புரிந்துகொண்டவர்களாகவும், பொறுப்புணர்ச்சியோடு அவர்கள் செய்ய வேண்டிய நல்ல விடயங்களை பற்றி பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அத்தோடு அவர்கள் விடுகின்ற தவறுகளை அச்சமில்லாமல் விமர்சிப்பவர்களாகவும் இருப்பதன் மூலம் மாத்திரம் தான் இன்று மக்கள் வழங்கியுள்ள ஆணையை சரிவர கையாள்பவர்களாகவும் அதிலிருந்து தவறாதவர்களாகவும் நாம் கணிப்பிடப்படுவோம் என்பதை நாங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.



ஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்விகளின் போது துவண்டுவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் இன்னும் சுதாகரித்துக்கொண்டு கூறுவதனால், இது தோல்வியே அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தமட்டில் பெரு வெற்றியை அடைந்துள்ளது. இனி அடுத்தகட்ட வெற்றியை பற்றி மேலும் உற்சாகமாக சிந்திக்கின்ற கடப்பாடு எங்களுக்குள்ளது. அதற்கான வியூகம் என்ன, அதன் மூலம் சமூகம் காணவுள்ள அடைவுகள் என்ன போன்ற விடயங்கள் பற்றி மிகத் தெளிவான கூட்டு சிந்தனையோடும் நல்ல கலந்துரையாடல்களோடும் இவ்விடயங்களை கையாள முன்வருவோமாக.