A+ A-

ஒலுவிலில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும். ஒலுவிலில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.






பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களினால் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ள ஒலுவில் பிரதேசத்திலுள்ள பொது மக்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் பெற்றுக்கொடுக்கும் வகையில் தனது உச்ச கட்ட அவதானத்தை செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமக்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எமது பிராந்தியத்தில் நமது மக்களின் வாழ்வாதாரத்திற்கென இருந்த எத்தனையோ ஏக்கர் காணிகள் தற்போது அரச நிறுவனங்களான தொல் பொருட் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம், வன விலங்கு திணைக்களம் போன்ற நிறுவனங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான மக்களது காணிகளை அவர்களிடம மீளக்கையளிக்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் நாம் மிகத் தெளிவாக பேசியிருக்கின்றோம். அவ்வாறான காணிகளை அவரது வெற்றியின் பின்னர் பெற்றுக்கொள்வதற்காக தனது உச்சகட்டத்தை அவதானத்தை அவ்விடயத்தில் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத் தரவுள்ளதாக அவர் எம்மிடம் பகிரங்கமாக வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.

கடந்த 30 வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவுக்கு பின்னர் ஜனாதிபதி வேட்பாளரொருவர் ஜனாதிபதி பதவியில் அமர்கின்ற விடயம் என்பது குதிரை கொம்பாக இருந்த நிலையில் இந்நாட்டின் மக்களின் பேரபிமானத்தை கொண்டுள்ள சஜித் பிரேமதாசவை நீண்டகால ஐக்கிய தேசிய கட்சியின் கனவை நனவாக்கும் ஜனாதிபதி ஒருவரை எமது கட்சியினால் முதன் முதலில் பரிந்துரை செய்ய கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அணியில் ஒன்றிணைந்திருக்கும் நிலைமையானது எமது தேர்வு சரியானது என்பதை நிதர்சனமாக காட்டுகின்றது. எமது சிறுபான்மை சமூகத்தில் உள்ள ஒரு சில உதிர்கள் மட்டுமே மாற்றுக்கட்சியில் சங்கமித்துள்ளன. அவர்கள் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. இந்நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி மிக மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த தலைமைகள் இன்று மாற்று அணியில் கூடாரமிட்டு காணப்படுகின்றன. எமக்கு என்று மாற்றுத்தெரிவொன்று இருக்க முடியாது. இத்தெரிவை தவிர வேறு எந்த தெரிவானாலும் நமக்கான விடயங்களை சாதகமாக்கி கொள்ள முடியாது.

சஜித் பிரேமதாஸவை பொருத்தமட்டில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரியவராக காணப்படுகின்றார். அவரின் 20 வருட கால இயங்குகின்ற அரசியலில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை கொண்ட ஒருவராக அவர் இருக்கின்றார். தனது தந்தையினை போல அடிமட்ட மக்களின் பேரபிமானம் மிக்கவொருவராக அவர் காணப்படுகின்றார். ஏழை மக்களுக்கு பல சேவைகளை மேற்கொண்டு அனைத்து இன மக்கள் மத்தியிலும் அவர் மிகுந்த வரவேற்புமிக்கவராக காணப்படுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தூரம் சென்றவர்களும், அக்கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டவர்கள் சிலரும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் மீளவும் ஒன்று சேர்ந்து கொண்டு சஜித் பிரேமதாசவின் கரங்களை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இவரின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கியம் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.