சிறுபான்மையினரைப்
பொறுத்தவரையில் சரணாகதி அரசியலைத் தவிர்த்து, ஆரோக்கியமான
இணக்க அரசியலொன்றைச் செய்வதற்கான இடைவெளியொன்று இருக்கின்றதா எனவும், எதிரணி அரசியலாக இருந்தாலும் அதனை உயிர்ப்புடன் செய்யக்
கூடிய ஒரு பின்புலத்தை அமைத்துக்கொள்ளலாமா
எனவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுகிழமை (24) நிந்தவூரில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் மஹ்ரூப்
மௌலவியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,
1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தின்
முஸ்லிம் பிரதேசங்களின் ஒரு சபையையேனும் தோல்வி
கண்டால் தன்னுடைய பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக தலைவர் எம்.எச்.எம்.
அஷ;ரப் அப்போது கூறியிருந்தார்.
எனினும், அந்தத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபையும் நிந்தவூர் பிரதேச சபையும் தோற்கடிக்கப்பட்டன.
ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற நிந்தவூருக்கான பிரதேச சபையின் சகல வட்டாரங்களுக்குமான ஆசனங்களை முஸ்லிம்
காங்கிரஸ் வென்றெடுத்தது. அதே பரந்துபட்ட ஆதரவை
மேலும் அதிகமாக்கி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுக்கு
ஆதரவளித்து எமது கரங்களைப் பலப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த ஒற்றுமை ஆபத்தானது என இப்போது சிலர்
சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் மாற்றுத் தரப்பை எதிர்த்து ஏன் வாக்களித்தனர் என்பது
பற்றி சிந்திக்கத் தவறிவிட்டனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற
ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர். இந்த நிலைப்பாடு
2015ஆம் ஆண்டில் மேலும் பலமடைந்திருந்தது.
எனவே, தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் ஆணை மஹிந்த ராஜபக்ஷவுக்கு
எதிராகவே இருந்து வந்தது. இதனை ஆபத்தானது என்று
இப்போது கூறுவது வேடிக்கையானது. ஆனால், அதனை வெற்றி பெற்ற
தரப்பான மஹிந்த ராஜபக்ஷ அணியினரே ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.
அவ்வாறே இந்தக் கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 2015ஆம் ஆண்டு மைத்திரிபால
சிரிசேனவுக்கு கிடைத்த வெற்றியை பற்றியும் ஆழமாக சிந்திக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் ஏகோபித்த வாக்கு பலத்தினாலேயே அப்பொழுது மைத்திரி வெற்றியடைந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்கால அரசியலில் சிங்களப் பேரினவாதத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றது. அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றிபெறுவதைப் பற்றி கடந்த ஐந்தாண்டுகளாக திட்டம் தீட்டி வந்தனர்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியினர் சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு தங்களுக்கு ஏன் போதியளவு கிடைக்கவில்லை
என்பது பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாற்றமாக, மஹிந்த மற்றும் கோட்டாபய ஆகியோர் தனியே நின்று வெற்றியடையும் வைராக்கியத்துடன் இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.
இந்த நிலைமை நீடித்தால் மட்டுமே சிறுபான்மையினங்களுக்கு ஆபத்தானது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள
வேண்டும். ஆனால், அவருடன் இருந்த சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு சிறு கும்பல்
இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கின்றனர். அவர்களே பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள். ஆனால், நம்முடைய பிராந்தியங்களில் ஒற்றுமையின் மூலம் நாம் வெற்றியடைந்துள்ளதை மறந்து போய்
எங்களில் சிலர் சோர்வடைந்திருக்கிறார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்றும் இப்போது கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால், 2010 இல் மஹிந்த ராஜபக்ஷ
வெற்றியடைந்த போது இந்த நாட்டில்
எவரும் சிறுபான்மையினர் இல்லை என்று குறிப்பிட்டது பலருக்கு நினைவிருக்கலாம். ஆகவே சிறுபான்மை மக்களை
அரவணைத்தால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெறமுடியுமே தவிர, அதனை இராணுவ பலத்தினால்
உருவாக்கிவிட முடியாது.
ஏப்ரல் 21இற்கு பிறகு முஸ்லிம் தலைமைகளாகிய எங்கள் அனைவரையுமே கட்சி பேதமின்றி பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் உள்ளடக்கி
அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களிடம் அதனை ஆழமாக விதைத்து
அதன் உச்ச பயனையும், அறுவடையையும்
தற்பொழுது அவர்கள் அடைந்துள்ளனர். இதனூடாக அவர்களது வாக்கு வங்கியை அதிகரித்துகொண்டுள்ளனர்.
முழு பிராந்தியத்திலுமே மதவாதம் தலைக்கேறி குறிப்பாக, முஸ்லிம்களை இலக்கு வைக்கும் போக்கு தோற்றம் பெற்றுள்ளது. இந்தப் போக்கினால் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நாட்டை ஆக்கிரமிக்கப் போகின்றார்கள் என்று மக்களை அவர்கள் அச்சப்படுத்தினர். இது தேசிய அரசியலில்
ஒரு மாற்றத்திற்காக அரங்கேற்றிய மிகப்பெரிய நாடகமாகும். இதைத்தான் அடுத்த தேர்தலிலும் அவர்கள் சந்தைப்படுத்தவுள்ளனர். சிங்கள மக்களிடையே இந்தப் பெரிய அலை உருவாவதற்கு இந்த
அச்ச உணர்வே காரணமாகும். பேரினவாத சக்திகளும், ஊடகங்களும் இதையே செய்தன.
ஆனால், தேர்தலின் பின்னர் 1250 என்ற நிலையிலிருந்த ஜனாதிபதி
பிரிவு பாதுகாப்பு அணியினர் 250 பேர் என குறைக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது. இது கடந்த மாதங்களில்
உருவாக்கப்பட்டிருந்த அச்சமும், பீதியும் திடீரென மறைந்து விட்டதா என்ற கேள்வியை எங்கள்
மத்தியில் எழுப்பியுள்ளது. நாம் வேறு எவ்வாறு
இதனை பொருள்கோடல் செய்ய முடியும்?
இந்த நாட்டின் அரசியலில் ஏப்ரல் 21இல் நிகழ்த்தப்பட்ட குண்டுத்
தாக்குதலின் உண்மையான பரிமாணம் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தோற்றுவித்த பிரளயத்தின் பின்னர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதம்
அரங்கேறியது. அதனால் ஒரு பேரழிவு காத்திருந்தது
என்பதை கண்டுகொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்ததன் மூலம் அதனை உலகின் மன
சாட்சிக்கு தெரியப்படுத்தினோம். அதனால் முஸ்லிம்களுக்கெதிரான அந்தப் பிரளயம் தடுத்து நிறுத்தப்பட்டது. மிக அண்மையில் நடைபெற்ற
இந்த சம்பவங்களையெல்லாம் நாம் மறந்துவிட்டோம்.
நமது அரசியல் வரலாற்றில் சரணாகதி அரசியல் என்பது சாத்தியமே இல்லாத ஓர் அம்சமாகும். நமது
இந்த முடிவை அரசு புரிந்துகொண்டு சிறுபான்மை
மக்கள் மீது அடிக்கடி பாய்ச்சல்
நடத்துவதை நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
ராவண பலய, பொதுபல சேனா
ஆகிய அமைப்புக்கள் மேலும் அவசியமற்றுப் போனதனால் கலைக்கப்படுவதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்த இயக்கங்கள் ஓர்
அரசியல் மாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களாகும். கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2014இல் 32 சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுவதாகவும், அவர்கள் நாட்டின் சட்டத்தை மீறி செயற்பட தான்
அனுமதிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். இதுபற்றி அவர் தற்போது அதிகம்
சிந்தித்தாக வேண்டும்.
முன்னர் மிதவாத அரசியல் செய்த முஸ்லிம் தலைமைகள் இப்பொழுது இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்று புரளியை கிளப்பி அறிக்கை விடுகின்றனர். இதன் மூலம் தங்களுடைய
வாக்கு வங்கியை அதிகரித்து கொள்ள எத்தனிக்கின்றனர். அத்துடன் பேரினவாதத்துக்கு துணைபோன சில தனியார் ஊடகங்கள்
மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சிறுபான்மை மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரவணைத்து செல்ல வேண்டும். யுத்த வெற்றியின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன்னும்
ஓர் எதிரியை வரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பாய்ச்சல்
பேரிழப்போடு முடிவுக்கு வந்ததன் பின்னர் அடுத்த பாய்ச்சலை நடத்துவதற்கு முஸ்லிம்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டனர்.
குறுநில மன்னர்களின் அரசியலை முஸ்லிம் சமூகம் முற்றாக நிராகரித்து விட்டது. இது எமக்குக் கிடைத்த
பாரிய வெற்றியாகும். புதிய ஆட்சியாளர் முஸ்லிம் மக்களின் இந்த சமூக அரசியல்
பிரதிபலிப்பை நுட்பமாக அவதானித்தல் வேண்டும்.
அபிவிருத்தியைப்
பொறுத்தவரையில் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப் பாரிய தொகையை எம்மால் ஒதுக்க முடிந்தது. ஆனால் இதற்கு முன்னைய ஆட்சி காலங்களில் இந்த வாய்ப்பு எமக்குக்
கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி கூட அதிகமான அபிவிருத்தித்
திட்டங்களை செயற்படுத்தினாலும், நாட்டு மக்களிடையே அது தொடர்பான பிரசாரம்
போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் பிறநாட்டு ஊடுருவல்களுக்கு வழிவகை செய்ததாகவும், ஐக்கிய தேசிய கட்சி மீது முத்திரை குத்தப்பட்டது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி வெளிநாட்டுச் சக்திகளுக்கு சோரம் போய்விட்டதாகவும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. அப்பிரச்சாரங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் ஈடுகொடுக்க முடியவில்லை.
எங்களுடைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் பௌத்த மதகுருமார்கள் பற்றி பேசியவை அவர்களை அவமானப்படுத்துவதாகக் கூறி நாட்டின் பௌத்த
மகாபீடத்தினர் வெளிப்படையாகவே அரசியல் செய்ய ஆரம்பித்தனர். இந்த பிரசார உத்திகளுக்கு
ஐக்கிய தேசிய கட்சியினால் பிரதியீடு செய்ய முடியவில்லை.
கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இன்றைய பிரதமர் பௌத்த விகாரைகளுக்கு அடிக்கடி சென்று இத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தார். அரசியலை மிகக் கச்சிதமாக திட்டமிட்டு முன்னெடுத்து சென்றார்கள். ஸஹரானின் தற்கொலை தாக்குதல் அதற்கு மேலும் உந்துதலாக அமைந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பீதி நிறைந்த சூழலை
சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம் தலைமைகளை அடக்கி ஒடுக்க நினைத்தனர்.
அதனடிப்படையில்
சாஷ;டாங்கமாக விழுகின்ற சரணாகதி அரசியல் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டது. என்றாலும்,
முஸ்லிம்கள் தங்களின் முழுமையான ஒற்றுமையின் மூலம் சரணாகதி அரசியலை நிராகரித்து விட்டனர். தற்போதைக்கு நமது சிறுபான்மை அரசியலின்
எல்லாத் தரப்புக்களும் தங்களை மீள்வாசிப்பு செய்தாக வேண்டிய கட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி ஏன் வாக்குகளை இழந்தது
என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்குள்; பிளவு என்பது தற்போது அடுத்த பிரச்சினையாக உருவாகியுள்ளது. சாதாரண மக்களோடு கதைக்கும்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தின் அவசியம் பற்றி என்னிடத்தில் எத்திவைக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த ஐக்கிய தேசிய கட்சி அதன் கூட்டணிகளை பாதுகாத்துக்
கொள்ள வேண்டுமானால் அதன் கட்டமைப்பில் மாற்று
வழி பற்றி அவசியம் சிந்தித்தாக வேண்டும். அதுவே இன்றைய தேசிய அரசியலின் புதிய சமன்பாடாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட இதனை ஆமோதிக்கின்றது.
தலைமையே கட்சியை பலவீனப்படுத்துவது என்பது அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் இதர கட்சிகளையும் பலவீனத்துக்குட்படுத்துவதை
போன்றது என்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி தங்கள் உட்பூசல்களை உரிய முறையில் தீர்க்காது
விட்டால் மீதியை தாங்கள் பிரதமருடன் பேசிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமை மிக
ஆபத்தானதை உணர்ந்து விரைவாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவை அவர்கள்
சரிசெய்தாக வேண்டும்.
முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம்
போன்றோரும் என்னுடன் பேசி வருகின்றனர்.
எவ்வாறாயினும்,
சிறுபான்மை மக்களின் மன உணர்வுகளை புதிய
ஜனாதிபதி நன்றாக புரிந்துகொண்டு தனது அடுத்த கட்ட
அரசியலின் புதிய வியூகத்தை திட்டமிட்டாக வேண்டும். அதுமாத்திரமின்றி, சிறுபான்மை அரசியல் அமைப்புக்களும் தங்களுக்கான அடுத்த கட்ட அரசியலின் புதிய
வியூகங்களை தடுமாற்றமின்றி திட்டமிட்டாக வேண்டும். அதுவே விவேகமான அரசியல் வழிமுறையாக இருக்க முடியுமே தவிர, சரணாகதி அரசியலைச் செய்ய முடியாது. இதனால் எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் எதுவிதமான
நன்மையும் ஏற்படப் போவதில்லை.
சிறுபான்மையினரைப்
பொறுத்தவரையில் சரணாகதி அரசியலைத் தவிர்த்து, ஆரோக்கியமான
இணக்க அரசியலொன்றைச் செய்வதற்கான இடைவெளியொன்று இருக்கின்றதா எனவும் மாமுலான எதிரணி அரசியலாக இருந்தாலும் அதனை உயிர்ப்புடன் செய்யக்
கூடிய ஒரு பின்புலத்தை அமைத்துக்கொள்ளலாமா
எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.
உள்வீட்டு பிரச்சினை என்பது அவர்களுக்குள்ளும் இருக்கின்றது. அது சத்தியப்பிரமாண வைபவத்திலிருந்தே
ஆரம்பித்துவிட்டது. அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் என்பதால் அவை தொடர்பில் நாங்கள்
அலட்டிக்கொள்ள தேவையில்லை. நாங்கள் எடுத்த முடிவுகளில் தெளிவாக உறுதியாக இருக்கின்றோம்.
ஏனென்றால், கடந்த ஆண்டு ஓக்டோபர் 26ஆம் திகதியே எங்களுக்கு
அழைப்பு வந்தது. அன்றே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம்.
அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் நாட்டில் எதுவுமே அசையவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருக்கவில்லை. பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கலாட்டாவும் ரகளையுமாக இருந்தது. எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில்
நீதிமன்றத்தின் தயவைத்தான் நாங்கள் நாட வேண்டியிருந்தது. நாங்கள்
உருவாக்கிய ஜனாதிபதியும் அந்தப் பக்கத்திற்கு சார்பாக இருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்னிரண்டு பேரையும் இலகுவாக தம் வசப்படுத்தி விடலாம்
எனத் தப்புக் கணக்கு போட்டனர். அதற்கு நாங்கள் அசைந்து கொடுத்திருந்தால் பெரியதொரு துரோகப் பட்டத்தை சுமந்திருப்போம். ஏற்கனவே இவ்வாறான பல கண்டங்களை தாண்டி
வந்திருக்கின்றோம். இப்பொழுது இன்னுமொரு கண்டத்தை கடக்க வேண்டியிருக்கின்றது.
முதலில் ஐக்கிய தேசிய கட்சி தன்னுடைய தலைமைத்துவ மாற்றம் பற்றி தீர்க்கமான முடிவை எடுக்கட்டும். அதன் பின்னர் சிறுபான்மை
அடுத்தகட்ட அரசியல் பற்றியும் அடுத்த தேர்தலில் தனித்தா, பிரிந்தா அல்லது கூட்டுச் சேர்ந்தா போட்டியிடுவது என்பதை பற்றி சிந்திக்க முடியும். விகிதாசார தேர்தல் முறையின் உச்சக்கட்ட பயன்பாடு பற்றியும், முஸ்லிம்களின் காப்பீடு தொடர்பான உச்சகட்ட ஊர்ஜிதப்படுத்தல் பற்றியும் நாம் நன்றாகத் திட்டமிட
வேண்டும். இந்த செயற்பாட்டில் நம்மிடம்
இருந்து பிரிந்து சென்றவர்களையும் இணைத்துக்கொண்டு பயணத்தை தொடர வேண்டும் என்றும்
அவர் குறிப்பிட்டார்.