சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவை அங்கீகரிக்கின்றோம் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள். வெறுமனே, உதிரிகள் மாத்திரம் தான் மாற்றுத் தரப்பில் இருக்கின்றார்கள். இன்று ராஜபக்ஷ கும்பல் அங்குமிங்குமாக சிதறி வெளியில் தள்ளப்பட்டவர்களை பொருக்கி எடுத்துவைத்துக்கொண்டு சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தையே வீணடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குபற்றிய தேர்தல் பிரசாரக் கூட்டம் நிந்தவூரில் சனிக்கிழமை (9) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
நாங்கள் புதியதொரு யுக மாற்றத்தை அடைந்துகொள்ளவுள்ளோம். இந்த நாட்டில் இதுவரை காலமும் கண்டிராத உற்சாகத்தையும், ஆரவாரத்தையும், எமது ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் வருகைக்கு பின்னால் காண்கின்றோம்.
30 வருடங்களின் பின்னர் இளம் வேட்பாளரொருவர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி அந்தஸ்த்தை எட்டிப்பிடிப்பதற்கு எட்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கத்தக்கதாக, வீதி நெடுகிலும் மக்கள் அவரை இன்முகத்துடன் வரவேற்பதையும், கரகோசங்களையும், ஆரவாரங்களையும் காணும் போது அவருடைய வெற்றி நிச்சயிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுவிட்டது.
சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவை அங்கீகரிக்கின்றோம் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள். வெறுமனே, உதிரிகள் மாத்திரம் தான் மாற்றுத் தரப்பில் இருக்கின்றார்கள். இன்று ராஜபக்ஷ கும்பல் அங்குமிங்குமாக சிதறி வெளியில் தள்ளப்பட்டவர்களை பொருக்கி எடுத்துவைத்துக்கொண்டு சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தையே வீணடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை மிகவும் மோசமாக சித்திரித்து, இழிவுபடுத்தி விமர்சித்தமை மாத்திரமல்ல, நாங்களும் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றவர்கள் தான் என்று சொல்லித்திரிந்த சில இனவாத கும்பல்கள் அனைத்தும் ஒரே மேடையில் சங்கமமாகியிருக்கின்றன.
அவர்களுடைய நடவடிக்கைகளை பற்றி நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. அவ்வாறு முகாமிட்டுள்ள அக்கும்பலுக்கு நாங்கள் ஆதரவளிப்பதா? அல்லது எங்களுக்கென்று ஒரு தனியான சிறப்பான பாதையை தெரிவு செய்து கொள்வதா என்ற விடயத்தில் எங்களுக்குள் வேறெரு மாற்றுக்கருத்து இருக்க இயலாது.
நிந்தவூரில் ஏராளமான பிரச்சினைகள் அடுக்கடுக்காக இருந்து வருகின்றன. குறிப்பாக, நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் இழந்த காணிகளை மீட்டிக்கொள்வதற்காக முன்னேடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டுமென எமது ஜனாதிபதி வேட்பாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்து வலியுறுத்தியிருக்கின்றோம்.
மட்டக்களப்பில் செயலகமிருந்த காலத்திலிருந்து பொத்துவில் பிரதேசத்தின் கிரான் கோமாரி காணி, நிந்தவூர் மக்களுக்குரிய பயிர் செய்யும் விளை நிலத்தை நாங்கள் மீட்டெடுக்க முற்பட்ட போது வன பரிபாலன திணைக்களம் குறுக்கிட்டு அப்பிரதேசங்களை இப்பொழுது புதர் பற்றைக்காடுகளாக மாற்றியுள்ளமையினால் அவையும் வனபரிபாலன திணைக்களத்திற்குரிய காணிகளாக, வனமாக அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்துவிட்டார்கள். இந்த அடிப்படையில் அக்காணிகளை உரியவர்களுக்கு மீளக்கையளிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
அதேபோல் ஒலுவிலில் அஷ்ரப் நகரை மீட்டெடுக்கும் விவகாரம் நீதிமன்றம் வரை சென்று பல விசாரணைகளை நடாத்தி அக்காணிகளை மீட்டெடுக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், தலைவரது காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் பொன்னன்வெளி காணி பிரச்சினையும் இன்று வரையில் முடிவுக்கு வராத நிலையிலேயே இருக்கின்றது.
எனவே, அவற்றை புதிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே மீட்டுத்தரவேண்டும் என்பதை சஜித் பிரேமதாசவிடம் மிகவும் அழுத்தமாக கூறியுள்ளோம். அவரும் அதனை தீர்த்து வைப்பதாக எங்களுக்கு உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளார்.
அத்தோடு நிந்தவூரில் இருக்கின்ற அடுத்த பிரச்சினை தான் கடலை அண்டிய காணிகள் கடலரிப்பிற்குள்ளாகி பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் பறிபோகும் பேராபத்து உருவாகி வருகின்றது. இந்நிலைமையை நிரந்தரமாக தடுப்பதற்கான கடலரிப்பு தடையணை அமைப்பது மாத்திரமல்ல, ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள இடம் மற்றும் அதனுடைய அலை தடுப்பு அணை என்பது தவறாக கட்டப்பட்ட காரணத்தினால் இந்தக் கடலரிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. அதற்கான நிரந்தர தொழில்நுட்ப ரீதியான தீர்வையும் பெறவேண்டு;ம்.
நிந்தவூர் பிரதேசத்தில் மேலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னேடுத்து மேம்படுத்தி தரவேண்டும். இந்த பிரதேசத்தில் தற்பொழுது நடந்து வருகின்ற அபரிமிதமான அபிவிருத்திகளோடு சேர்த்து பிரம்மாண்டமாக கட்டிவருகின்ற கேட்போர் கூடத்தின் வேலைகளை ஜனாதிபதி ஆட்சியில் அமரும் வரை காத்திருக்கமாட்டேன். இந்த வருட இறுதிக்குள் அதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு அக்கட்டட பணியை சிறப்பாக முடிவித்து தருவேன் என்று சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார்.
மேலும் நிந்தவூரிக்கு முழுமையாக மெருகூட்டப்பட்ட மைதானம் அடுத்து ஆட்சியில் மிக விரைவாக செய்து கையளிக்கப்படும். அதுபோல் இப்பிரதேசத்தில் உள்ள இதர பிரச்சினைகளும் நிரல்படுத்தி தீர்த்து வைக்கப்படும்.
ஏனென்றால், பிரசார கூட்டங்களுக்கு செல்கின்ற ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம். அவரது ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் இவற்றுக்குரிய தீர்வை மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பெற்றுத் தரக்கூடிய ஒருவரையே நாங்கள் எதிர்கால ஜனாதிபதியாக அடையாளம் கண்டிருக்கின்றோம்.
இந்த இளம் வேட்பாளரது தந்தை ரணசிங்க பிரேமதாசவை எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மும்மொழிந்து ஆதரவளித்தமையினால் தான் அவரது அன்றைய வெற்றியும் சாத்தியமானது. அன்று இருந்த சூழ்நிலையில் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வெற்றி பெறுவார் என்று யாருமே எண்ணியிருக்கவில்லை. 11 வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சளித்து போனவர்கள், வடக்கிலும், தெற்கிலும் மிக மோசமாக யுத்தமும், கலவரமும் வெடித்த காலகட்டத்தில்தான் வேண்டாவெறுப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பதவியை கொடுத்த நிலையில் தான் எமது தலைவர் அஷ்ரப் வெற்றியை தழுவச் செய்தார்.
அதன் வழியில் நாமும் அவரது புதல்வர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக மீதமுள்ள எட்டு நாட்களுக்குள் வீடுவீடாகச் சென்று அன்னம் சின்னத்திற்கு வாக்குகளை திரட்டுகின்ற பணியில் மும்முரமாக ஈடுபடுவோம். நாங்கள் கடந்த தேர்தலில் எவ்வாறு இந்த அக்கிரமகார கும்பலை துரத்தியடித்தோமோ அந்த ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி மாலை சூடி ஜனாதிபதி ஆசனத்தில் அமர தவறாது உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகின்றேன் என்றார்.
இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரிசாட் பதியூதீன், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் பைசால் காஸிம், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹ்மட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சப்ராஸ், நிந்தவூர் பள்ளிவாயல் தலைவர் பாரூக் இப்ராஹிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலபதி, கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் உட்பட பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.